Followers

Wednesday, June 4, 2008

வாழ்வின் அழகு,அவலங்கள் மற்றும் அப்துல்கலாமின் கனவு.

ஜுன் மாதப் போட்டா போட்டி அறிவிப்பு வந்தவுடன் தலைப்பு என்னவென்று மட்டும் ஒரு முறைப் பார்த்ததும் சர்வேசன் சொல்லிய பெயர்ச் சொல்லும் வினைச் சொல்லும் பழைய காலத்து தமிழ் வகுப்புக்களை நினைவு படுத்தியது.படித்தவையெல்லாம் மறந்து உதடுகளில் "நவுன்" என்றும் "வெர்ப்" என்றும் புதிய வார்த்தைகள் ஒட்டிக்கொண்டன. இருந்தாலும் பரவாயில்லை.தமிழ் தமிழாக குறைந்தபட்சம் வழக்குத் தமிழாக தமிழ் வலம் வந்த காலமது. ஆங்கிலக் கல்வியும் குட்டைப் பாவாடைக் காலம் கூட தண்டவாளத்தின் கோடு மாதிரி ஒன்றையொன்று தொட்டுக் கொள்ளாமல் தமிழும் ஆங்கிலமும் அதனதன் பாதைகளில்தான் போய்க் கொண்டிருந்தது. இந்த இடைச் செறுகல்களாக மொழி மாறிய காலமெது?

85வது வருடம் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய முதல்வர் கலைஞரின் உதடுகளில் மட்டும் எப்படி தனித் தமிழ் நர்த்தனமாடுகிறது? கூட பணி புரியும் அரசு அதிகாரிகள் அவ்வப்போது தொலைக்காட்சிகளில் பேட்டி தரும்போது சொல்லும் வார்த்தைகள் எப்படி தமிழ்,ஆங்கிலம் எனக் கலப்படம் கொள்கிறது? பெண்மகள் ஒருத்தி தமிழ்த் தொலைக்காட்சியில் பேசும்போது கலக்கும் ஆங்கில வார்த்தைகள் எத்தனை?இவையென்ன நமது அறியாமையா அல்லது அறிந்தும் அறியாமையா?


நேற்று பெருமைக்குரிய அப்துல் கலாம் அவர்கள் திருவனந்தபுரத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளின் கூட்டத்தில் பேசும்போது அதற்கு முன் பேசிய அனைவரும் மலையாளத்தில் பேசும் போது தனக்கும் தமிழில் பேசவேண்டும் என்ற மன உந்துதல் ஏற்படுவதாகச் சொல்லி தனது உரையை ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.சரளமான ஆங்கிலம் கொஞ்சம் குழந்தைத்தனக் குரல் கலவை கேட்க நன்றாகத்தானிருந்தது.வாருங்கள் நல்ல தனித்தமிழ்பேசுவோம்! நல்ல ஆங்கிலம் பேசுவோம்.(தமிழ்நாட்டின் தலைநகரை இன்னும் கொஞ்சம் தள்ளி கடற்கறையோரமாகவே தஞ்சாவூர்ப் பக்கம் அமைத்தால் சென்னையின் பாதிப்புக்கள் குறையுமோ என்னவோ?)

இனி ஜூன் மாதம் மாதிரிப் புகைப் படங்கள் பற்றிய ஓர் பார்வை. அனைத்து உதாரணப் படங்களுக்குமுள்ள ஓர் ஒற்றுமை அனைத்தும் தொழிலாளர் வர்க்க்த்தின் படங்கள். மே மாதம் வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ என்னவோ? அன்றாட வாழ்க்கையில்தான் எத்தனை அழகுகள் கொட்டிக் கிடக்கின்றன.ஆனால் அவற்றையெல்லாம் நின்று பார்த்து ரசிக்கவும் , அசைபோடும் நேரமின்மையுமின்றி நமது வாழ்க்கையின் அவலங்கள். கூடவே படங்களின் மனிதர்கள் அன்றாட வாழ்க்கைக்காக படும் பாடு.இந்த யதார்த்தங்கள் அழகாயிருந்தாலும் வாழ்க்கையை கொண்டு செல்லும் தின வாழ்க்கை சுகமாயில்லை.இந்த அடிப்படை நிலை மாறவேண்டும்.அதுவே திரு.அப்துல் கலாம் அவர்களின் 2020 ன் கனவு.

பின்குறிப்பு: ஜூன் மாதப் புகைப்படப் போட்டிக்கு அனுப்பவேண்டிய பின்னூட்டம் நீளமாகியதால் தனிப்பதிவிடுகிறேன்.

No comments: