Followers

Wednesday, April 29, 2009

ஒரு பின்னூட்டம் தந்த பதிவு

நறுக்குன்னு நாலு வார்த்த கேட்கும் பதிவர் பாலா ஜெய்ஹிந்த்புரம் பதிவில் போட்ட பின்னோட்டம் ஒரு பதிவாகப் போடத் தூண்டியது.

http://jaihindpuram.blogspot.com/2009/04/blog-post_26.html

பாலாவின் வரிகள் அடைப்பானில்.

//மன்னிக்கணும். நொடிச்சி விழுந்தாலும் தன்னம்பிக்கையோட திரும்ப எழுந்து கம்பீரமா நடக்கிறத பாசிடிவா எழுதியிருக்கலாம்னு நினைக்கிறேன். அங்கயே உக்காந்து அழுது யாராவது தூக்கமாட்டாங்களானு இருக்கிறதுதானே இன்றைக்கு இயல்பா இருக்கு.//

தன்னம்பிக்கை என்பது பொதுவாக இந்திய மனப்பான்மையில் இல்லையென்பதற்கும் அது ஒளிந்து கிடக்கிறதென்பதற்கும் ஒரு சின்ன உதாரணம்.

கோவாவில் Flee market ல் மேடான இடத்தில் ஒரு ஹிப்பி உட்கார்ந்திருந்தான்.அவனுக்கும் கீழே கைக்கெட்டும் தூரத்தில் ஒரு சின்னப் பாறையும் மேடும்.கொஞ்சம் தூரத்தில் கடற்கரை மணலும் கடல் அலையும்.

கடற்கரைப் பக்கமிருந்து வந்த ஒரு நடுத்தர இந்தியர் நடந்து வந்து பாறைக்கு அருகில் வந்ததும் மேடு மேல் ஏறி வருவதற்கு கொஞ்சம் தயங்கினார்.அருகில் இருந்த ஹிப்பியிடம் கையை நீட்டி உதவி கேட்டார்.ஹிப்பி சொன்னான் " your legs and hands are alright.climb up and come " என்றான்.வேறு வழியில்லாமல் இந்தியர் கொஞ்சம் சிரமப் பட்டு மேலே வந்து விட்டார். உனக்கு நீயே உதவி என்ற மனப்பான்மையினால்தான் cliff hanging (தமிழென்ன!யாராவது உதவுங்களேன்)கூட மேலை நாட்டில் சாத்தியப் படுகிறதென நினைக்கிறேன்.

சொல்லத் துணிந்த தமிழக அரசியல்

தமிழில் மேடைப் பேச்சுகளில் மக்களை மனம் கவர்ந்து ஆட்சிக்கு வந்த திராவிட கழக இயக்கமான தி.மு.க தனிமனித ஈகோக்களால் பிரிந்து தி,மு.க எனவும்,அ.தி.மு.க எனவும் பிரிந்து போனது.எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தது எப்படி தமிழகத்தின் அரசியலை மாற்றி அமைத்ததோ அதே போல் கால சூழல்களால் அரசியலுக்கு வந்த ஜெயலலிதா தி.மு.கவின் அரசியலுக்கு வலுவான எதிர் சக்தியாக மாறினாலும் கூட இரு இயக்கங்களின் சில அரசியல் பார்வைகள் தமிழகத்திற்கு ஆக்க பூர்வமானதாக இல்லை.

ஏனைய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் நிர்வாகத் திறமையில் இரு இயக்கங்களும் தமிழகத்தை முன்னிலைக்கு கொண்டு சென்றாலும் மாநிலத்தின் நன்மைக்கும் அப்பால் தனி மனித காழ்ப்புணர்ச்சிகள் வந்து குறுக்கே நின்று விடுகிறது.

கலைஞர் தனது வாழ்வே அரசியலாக்கிக் கொண்டதால் அரசியல் பால பாடங்களை கற்றுத் தேறி சமயங்களில் சகுனியின் பாத்திரத்தையும் ஏந்தி மொத்த மதிப்பீட்டில் சாணக்கியனாய் வளர்ந்து நிற்கிறார்.ஜெயலலிதா அரசியலுக்கு வந்த விதம் அவருக்கே சில சமயங்களில் ஆச்சரியத்தை உண்டுபண்ணியிருக்கக் கூடும்.பெண்ணுக்கே இயல்பான உடை,நகை,சொத்து மோகங்களில் அடிபட்டு ஓரளவுக்கு அரசியலின் நுனியைப் பற்றி மேலே வந்து விட்டார் எனலாம்.

இந்த இரு இயக்கங்களின் தலைவர்களும் போன தலைமுறைக்கான அரசியல்வாதிகள் என்பது போக இந்த இயக்கங்கள் அரசியலை வளர்த்த விதம் தமிழகத்தைப் பொறுத்தவரை மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற திராவிட வாசகங்கள் நடைமுறையில் நல்லதான மாற்று சிந்தனைகளையும் வரவேற்கவேண்டும் என்ற நாகரீகங்களை வளர்க்கவில்லை.கலைஞரின் ஆட்சியில் நிகழும் நல்லவற்றிற்கு பாராட்டும் மனப் பக்குவம் ஜெயலலிதாவிற்கும் அவர் வழி நடத்தும் கட்சிகாரர்களுக்கும் இருக்க வேண்டும்.மாறாக செய் புகழ் தி.மு.க விற்கு போய் விடுமே என தேவையற்ற வெளிநடப்புகளும் தங்களது மந்திரமே மைனாரிட்டி கவர்ன்மெண்ட் வாசகமும் தமிழக அரசியல் நாகரீகத்தின் போங்கை காட்டுகிறது.தனிமனித கோபங்களாக இரு பக்க சிறையடைப்புக்களும் உதாரணங்களாய் கண்முன் வந்து போகின்றது.

இரு தலைவர்களும் ஒரு தலைமுறையின் இறுதி விளிம்பில் நின்று கொண்டிருப்பதால் விவேகமான,பிரச்சினைகளை அலசி ஆராயும்,தொலை நோக்குப் பார்வையுள்ள திட்டமிடுதல் கூடிய இளைய தலைமுறை அரசியல் களம் புகுதல் தமிழகத்திற்கு நலன் பயக்கும்.

தி,மு,க தரப்பில் கட்சியினை மேலும் உயரத்துக்கு கொண்டு செல்லும் இளைய தலைமுறையினர் லெனின் உட்பட நிறையவே தென்படுகிறார்கள்.ஆனால் சொந்தங்களின் விவகாரங்கள் பொதுவுக்கு வந்தபோது இருந்த நம்பிக்கையின் தன்மை குறைந்து போனது.அ.தி.மு.க பக்கம் ஜெயலலிதா தவிர்த்து மக்களை வசிகரிக்கும் யாரும் நினைவுக்கு வரவில்லை.ஜெயலலிதா சொல்லிக்கொடுப்பதை அப்படியே ஒப்பிவிக்கும் கிளிப்பிள்ளைகள்தான் தென்படுகிறார்கள்.எஸ்.வி.சேகர் தெரிந்தும் உள்ளே சிக்கி விட்டா போதும் என வெளியே ஓடி விட்டார்.அன்புமணி,மாறன் சகோதரர்கள் இன்னும் நம்பிக்கையூட்டச் செய்கிறார்கள்.

நாமும் எம்.ஜி.ஆர் ஆகிவிடலாம் என்ற நம்பிக்கையில் அரசியல் புகுந்த நடிகர்களின் அரசியல் பார்வைகள் தீர்க்கமாயில்லை.சிரமப் பட்டு உழைத்து சினிமாவில் சம்பாதித்த பணத்தை மீண்டும் அரசியலுக்குள் செலவு செய்வதென்பதிலிருந்தே வியாபார நோக்கங்களுக்கான சிந்தாந்தங்கள் புரிகிறது.

வை.கோ கழகத்திலிருந்து பிரிந்து வந்த நாள்முதல் விடாமல் நிற்கும் ஒரே கொள்கை விடுதலைப் புலிகள் ஆதரவு.சிறை வாழ்க்கை உட்பட விடுதலை ஆதரவில் உறுதியாய் இருப்பது ஒன்றே அவரது கொள்கைக்கான பலம்.அதனையடுத்து அவரது பேச்சுத் திறன் மேடையின் கீழே நிற்பவனை வசீகரிக்க செய்யும்.இது தவிர்த்து நோக்கினால் அவரது அரசியல் சமரசங்கள்,பார்வைகள் அனைத்தும் கேலிக்கூத்து.இன்னும் காலம் தாழ்ந்து விடவில்லை வை.கோ விற்கு.வரும் காலம் திட்டமிடுதல்கள் சரியாக இருந்தால் சறுக்கல்களை நிவர்த்தி செய்ய இயலும்.பழ.நெடுமாறன் தமிழகத்தில் ஒரு சிறந்த அரசியல்வாதியாய் அனைவர் முன்னும் வலம் வந்திருக்க வேண்டியவர்.இரு கழக இயக்கங்களும் அவரை ஓரம் கட்டி விட்டார்கள்.

இதுவரை சொன்னவை சொல்லவா வேண்டாமா என கணினியில் தூக்கம் போட்ட எழுத்துக்கள்.ஆனால் இதனை பதிவேற்றி விடுவது என்ற தீர்மானத்திற்கு கொண்டு வந்தது நேற்றைய தொலைக்காட்சியில் கண்ட மு.க.அழகிரியின் பேச்சுக்கள்.மரம் வெட்டிய காலம் தொட்டே மருத்துவரின் அரசியல் பிடிக்காமல் போனது.ஆனால் தி.மு.க தனது தமிழ்ப் பாதையை விட்டுப் போன காலியிடத்தை நிரப்புகிறாரோ என்று மக்கள் தொலைக்காட்சியின் மேம்போக்கு தெரிந்தது.ஆனால் பதவியே பிரதானம் என்பதிலே கண் என்பது அவரது தாவல்கள் சொன்னது.தேர்தல் காலத்து கூட்டணித் தாவல் மருத்துவருக்கு மட்டுமே சொந்தமன்று.அதற்கு பட்டயம் போட கலைஞரும் முன்னோடிதான்.

இவர்களுக்குள் கொள்கை சண்டைகள் இருந்தாலும் எதிர் அறிக்கைகள் விட்டாலும் தரமிழந்து தாழ்ந்து விடவில்லையெனவே நினைக்கிறேன்.ஜெயலலிதா கூட உதிர்ந்த ரோமங்கள் என நெடுஞ்செழியனை வசைபாடியதை விட கீழே இறங்கி வந்து விடவில்லை.இரு கழகங்களும் எதிர்க்கட்சியை கொச்சையாகத் திட்டுவதற்கு தொண்டர்கள் என்ற பெயரில் காசுப்பேச்சாளிகள் வைத்திருக்கிறார்கள்.கலைஞர் மேல் இத்தனை கல்லடிகள் விழுந்தும் வாய் தரம் தாழ்ந்ததில்லை என நினைக்கிறேன்.ஸ்டாலின் கூட அரசியல் பக்குவம் பெற்று விட்டமாதிரியே தெரிகிறது.

ஆனால் இன்னொரு மகன் அழகிரிக்கு பேசத் தெரியவில்லையா அல்லது அவரது குணநலன்களைப் பிரதிபலிக்கிறதா எனத் தெரியவில்லை.நேற்று பின்புறத்து கதவு வழியாக அன்புமணி மத்தியபதவிக்குப் போனவர் என்றார்.அது அரசியல் விமர்சனம் சரி.ஆனால் அன்பு மணியை திட்டுவதாக நினைத்து "எல்லோரும் ராமதாஸை அரசியல் வியாபாரிங்கிறாங்க.ஆனா உங்கப்பன் அரசியல் விபச்சாரி" என்றாரே பார்க்கலாம்.மனம் பகீர் என்றது.மதுரையையும் வருங்கால தி.மு.க வையும் நினைத்தால் பயமாக இருக்கிறது.

பையன் தவறு செய்தால் அப்பனிடமே முறையிடுவது வழக்கம்.அப்பனாக மட்டும் இல்லாமல் தமிழகத்தின் முதல்வரின் மகன் என்ற காரணத்தாலும் கலைஞரே!அழகிரி என்று பெயர் கொண்டு இது அழகா?உங்கள் தலைமைக்கும் பெயர் காப்பாற்றவும் எவ்வளவு பொறுப்புக்கள் இருக்கிறது.உங்கள் வயதுக்கு உண்ணாவிரதம் இருப்பதே கவலைக்குரியது.ஆனால் அதையும் அரசியலுக்காக வேண்டி உண்ணாவிரதம் திருப்தி அளிக்கிறதென்றும் ஜெயலலிதாவின் தனி ஈழம் பெற்றுத் தருவேன் குரலுக்கு எதிர் கணையாக மாற்று அமைப்புகள் மூலமாவது ஈழம் அமைந்தே தீரும் என்கிறீர்கள்.இப்படித்தான் ஈழம் அமையவேண்டும் என்ற கனவு கண்டவன் கூட எப்படியாவது ஈழம் அமையவேண்டும் என்றுதான் நினைப்பான்.இப்போதைய மக்களின் அவலங்களை காண்பவர்களின் எண்ணம் கூட அதுவே.

ஈழ விடுதலை உணர்வுகளின் இந்தக் காலகட்டத்தில் ஒரு உரிமைப் போருக்கு குரல் கொடுப்பதோடு தமிழக அரசியலை மாற்றிப் போட இயல்பாகவே வந்த மக்கள் எழுச்சி தமிழக அரசியலையும் மாற்றி அமைப்பதற்கான அருமையான சந்தர்ப்பங்கள் அமைந்தது.ஆனால் திராவிட வேர்களின் நீளம் அதன் ஆழம் கண்டால் தமிழகமே!என் தமிழகமே!புதிய விழுதுகளை எப்பொழுது படைக்கப் போகிறாய்?

Tuesday, April 28, 2009

எழுத்துக்கள் பல விதம்

சில எழுத்துக்கள் மனதில் கருத்தரித்து கணினியில் அடைகாத்தாலும் எல்லா எழுத்துக்களுமே உடனே பார்வைக்கு வந்து விடுவதில்லை.சில அப்போதைக்கே முட்டையிட்டு அடுத்த கண உஷ்ணத்தில் பிரசவிப்பதும் உண்டு.இன்னும் சில மன இறுக்கத்தின் நெருக்கத்தில் அப்படியே பிரசவமாகி விடுவதும் உண்டு.சரியான சுகப்பிரசவங்கள் நின்று வளரும்.

கொதி வந்து 10 நிமிசத்துல வடிக்கிற சோறு சீரியல் பார்க்குற அவசரத்துல கைப்பதம் சரியின்னு அப்படியே கொட்டி விடும் நேரங்களுமுண்டு.பக்கத்து வீட்ல பஜ்ஜி வாசம் வர்றமாதிரியிருக்கே நாம சாம்பாருக்கு ஊறவச்ச பருப்பை வடை சுட்டுப் பார்ப்போமேன்னு போட்டியாக தலைப்புக்கள் சில மாறி விடுவதும் உண்டு.

மீன் கவிச்சி தாங்கலயின்னாலும் கொளம்பு கொதிச்சு தட்டுக்கு வரும்போது ருசியாவும் சில இருப்பதுண்டு.தாளிக்காம சோறு எறங்காதுன்னு தமிழ்நாட்டு ருசிக்குத்தான் மவுசு அதிகம்.இதையெல்லாம் தாண்டி ரெண்டு வரி கவிதை ரத்தினச் சுருக்கம்,சிரிப்பே சிரிப்பு முத்திரைகளும் உண்டு.சில மெல்லிய தென்றல்.இன்னும் சில காட்டாறு.

பொன்னியின் செல்வன் எழுதுவதற்கு கல்கிக்கு எத்தனை நாளாச்சோ நானறியேன்.ஆனா ஒரு ஆங்கில எழுத்தாளனுக்கு 1500 பக்கத்துக்கு ஒரு நாவல் எழுத 4 வருசத்துக்கும் மேல் ஆச்சாம்.கேள்வி கேட்டவனே பதிலும் சொன்னானாம்.அப்ப ஒரு நாளைக்கு ரெண்டு வரிதான் எழுதியிருப்பாய் என்று.

எழுத்துக்கள் மென்மையாய் இருந்த காலங்கள் உண்டு.வாழ்க்கை நீரோட்டத்தின் பிரதிபலிப்பே எழுத்து என்பதால் கோப மூச்சுக்களே தமிழ் எழுத்தாய் பிரசவிக்கிறது இன்று.

Sunday, April 26, 2009

கோயம்புத்தூருக்கு ஒரு தேர்தல் ஜாக்பாட்

வேக வேகமாக ஒரு பதிவு போட்டே ஆக வேண்டும்.காரணம் கோவையைப் பொறுத்த வரையில் தமிழக அரசியல்வாதிகள் ரொம்ப ரொம்ப நல்லவங்க.மக்களின் மனம் அறிந்தோ அல்லது அரசியல் சதுரங்கத்தில் குட்டிக்கரணம் போட்டாலும் தஞ்சாவூர் பொம்மை மாதிரி திரும்ப தன் நிலைக்கு திரும்புவது மாதிரி அரசியல் அந்தர் பல்டிகள் அடித்தாலும் நிலைகளை சீர்தூக்கி இந்த முறை கோவை மக்களை குழப்ப வேண்டாமென்றோ அல்லது தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே ஆராய்ந்தோ பெருந்தன்மையாக தி.மு.கவும் அ.தி.மு.க ,ம.தி.மு.க ,பாட்டாளி,திருமா என தேர்தல் களத்தில் எவரும் இல்லை.

எனவே கோவை வாக்காளர்களுக்கு சரித்திரத்தில் சேர்ந்து கொள்ள ஒரு அறிய வாய்ப்பு 49ஓ.

ஜனநாயகம் என்பதே மக்களின் உணர்வுகளை மதித்து அதன்படி ஆட்சி செய்வது.அதற்கான சாத்தியங்களில் நம்பிக்கை இழக்கச் செய்கிறது தற்போதைய தமிழக அரசியல் களம்.கோவையில் களத்தில் இருப்பவர்களும் 49 ஓ போட துணை புரிபவர்கள் போலத்தான் தெரிகிறது.பரிட்சித்துப் பார்க்க அறிய வாய்ப்பு.கோவை வாக்காளர்களுக்கு இரண்டு சந்தர்ப்பங்கள் இயற்கையாகவே அமைந்துள்ளது.ஒன்று பதிவுகளிலும்,தமிழகத்திலும் கனன்று கொண்டிருக்கும் உணர்வுகளை தேர்தலில் வெளிப்படுத்தி வருங்கால அரசியலுக்குப் பாடமாக 49 ஓ போடுவது. இயலாது போயின் டெபாசிட் இழக்கச் செய்வது. பொறுப்பு கோவை வாக்காளர்களைச் சார்ந்தது.
------------------------------------------------------------------------------------------------
பதிவர் பரக்கத் அலிக்கு நன்றியும் அவர் அனுமதியுடன் கீழ் கண்ட செய்திகளையும் இணைக்கின்றேன். முழு விபரங்களுக்கு

http://electionbarakath.blogspot.com/2009/04/blog-post_26.html

வாக்காளர்கள்:
மொத்த வாக்காளர்கள்: 11,58,344
ஆண் வாக்காளர்கள்: 5,88,550
பெண் வாக்காளர்கள்: 5,69,794

போட்டியிடும் வேட்பாளர்கள்:
1. ஆர். பிரபு (காங்கிரஸ்)
2. நடராஜன் (சி.பி.எம்.)
3. பாண்டியன் (தே.மு.தி.க.)
4. செல்வகுமார் (பி.ஜே.பி.)

அடங்கிய சட்டசபைத் தொகுதிகள்:
1. பல்லடம்
2. சூலூர்
3. கவுண்டம்பாளையம்
4. கோவை வடக்கு
5. கோவை தெற்கு
6. சிங்காநல்லூர்

தற்போதைய எம்.பி: சுப்பராயன் (சி.பி.ஐ.)

தற்போதைய எம்.எல்.ஏ.கள்:

இதுவரை வெற்றிகள்:
தேர்தல் நடந்தது: 14 முறை
சி.பி.ஐ: 4 முறை வெற்றி
சி.பி.எம்: 1 முறை வெற்றி
காங்கிரஸ்: 5 முறை வெற்றி
தி.மு.க.: 2 முறை வெற்றி
பி.ஜே.பி.: 2 முறை வெற்றி
---------------------------------------------------------------------------------------

இந்தி எதிர்ப்பு மெட்ராஸில் தோன்றி கோவையில் வேரூன்றியது,உண்மையான திராவிட இயக்கமாக பெரியார் வண்டி கட்டிகிட்டு வந்த இடம்,ஜி.டி ஹால்,சன்மார்க்க சங்க கட்டிடக் கருத்தரங்கு,வானம்பாடிகளின் கவிதை,மரபுகள் மாறாத ஆன்மீக சொற்பொழிவு,உழைப்பாளிகளின் பங்கு என எத்தனையோ கலாச்சார வேர்கள் ஊன்றிய இடம்.எனவே பெரிதாக பதிவை நீட்டி வளர்க்க வேண்டிய அவசியமில்லை.

Thursday, April 16, 2009

வளைகுடா வேலை வாய்ப்புக்கள்

எல்லோரும் பொருளாதாரப் பின்னடைவு பற்றியே சொல்லிக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் சில வேலை வாய்ப்பு விளம்பரங்களும் வரத்தான் செய்கிறது.ப்ரூனேய் எனெர்ஜி என்ற நிறுவனம் பலதரப்பட்ட வேலைவாய்ப்புக்களுக்கு ஆட்கள் தேவையென்று விளம்பரம் செய்துள்ளது.கத்தார் நாட்டின் புராஜக்ட்.வேலை தேடும் அல்லது வேலை வாய்ப்புக்களை இழந்த ஆஃப்ஷோர் மற்றும் ஆன்ஷோர் என்ஜினியரிங்க்,கட்டமைப்பு,நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறை சார்ந்த யாருக்காவது பயன்படுமா என்று பாருங்கள்.துபாய்,கத்தார் வளைகுடா பதிவர்கள் இதுபற்றி உங்கள் நண்பர்கள்,தெரிந்தவர்களுக்கு விபரம் சொல்லுங்கள்.


மேலதிக விபரங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

gtl@bruneluae.com ( Email)

Please mention position applied for in the subject line of your email.

P.O.Box-5658,Dubai,UAE.

www.brunelenergy.net

Wednesday, April 15, 2009

பாரதிராஜாவின் பொம்மலாட்டம்

என் இனிய பாரதிராஜாவுக்கு!கட்டிடத்துக்கு வெளியே வராமலிருந்த தமிழ் திரைப்படத்தை ஆடு,கோழி,அன்றாட வாழ்வின் முகங்கள் கூட நடிக்க முடியுமென்று கிராமிய மணத்தோடு சினிமாவின் திசையை திருப்பிப் போட்ட கரகரக் குரலானே!

ஆங்கிலப் படத்துக்கு சவால் விடும் திகிலோடுதானே படம் செய்தாய்!திரைக்குப் பின்னால் நிகழ்பவையும்,படம் எடுக்கும் முறைகளின் நுணுக்கங்களையும் கோடி காட்டியிருக்கிறாயே!எங்கே வெட்டணும்ங்கிற எடிட்டிங் கலை கூட நல்லாத்தான்யா இருக்குது.பாட்டும்,பாட்டைச் சார்ந்த உனது படப்பிடிப்பும் ஒன்றுக்கு ஒன்று சங்கீதப்பார்வை செய்யத்தானே செய்யுது.முகக் கலைஞன் எனும் மேக்கப்மேன்,ஒட்டியே நடிக்கும் நடிகன் என நடிகையை உரசிப்பார்த்து விட நினைக்கும் திரைக்கும் அப்பாலும் செல்லுலாய்ட் பாய்கிறதே.

கதைக்குள்ளும் நீயும் எங்கோ ஒளிந்து கொண்டிருப்பதும் தெரிகிறதே.இதையெல்லாம் மீறி நடிப்புக்கு மொழி தேவையில்லையென்று நானா படேகரை கொண்டு வந்து போட்டிருக்கிறாயே!படம் பார்க்கும் எந்தக் கொம்பனும் இதுதான் கிளைமாக்ஸ் என்று யூகிக்காத வண்ணம் கதை சொல்லியிருக்கிறாயே!இத்தனையிருந்தும் பாரதிராஜா லேபிள் பெயர் இருந்தும் உன்னோட பொம்மலாட்டம் பெட்டிக்குள் போய் சுருண்டு விட்டதாமே!

எங்கே விட்டாய் கோட்டை?விளம்பரமா?அதுதான் சன் டிவியின் செய்திக்கு முன் இசையோட சுத்திகிட்டு வரும் பூமி கிளிப்,கிளிப்,கிளிப் என வெட்டி வெட்டி வெட்டி எடிட்டிங் செய்து விட்டு சன் செய்திகள் கூட வருதே!சன் டிவிக்காரனே படத்தோட பாதி விளம்பரத்தைக் கொண்டு போயிருப்பானே!

Something wrong!ஓ!ரசனை விட்டுப்போச்சா?அதெப்படி ஐயா ரசனை விட்டுப் போகும்?பாலுமகேந்திரா,பாரதிராஜா பெயரெல்லாம் ரசனை மாறிப்போக வேண்டிய விசயமா என்ன?சராசரி ரசனைக்குத்தான் வில்லு பிடிக்குதுன்னா வில்லு பற்றி போட்டுத் துவைச்ச பதிவர் வட்டம் கூட பொம்மலாட்டம் பற்றி சொல்லாமப் போனது எப்படி?(ரீசெசனால படம் பார்க்கும் சிக்கனமோ என்னவோ?)

படம் பார்த்த பதிவர்கள் உங்கள் பக்கங்களில் உங்கள் எண்ணங்களைப் பதியுங்கள்.அதுவே பாரதிராஜா என்ற சமூகப் பார்வையாளனுக்கும்,தனக்கென ஒரு பாணியென சிவாஜிக்கு முதல்மரியாதை செய்த நல்ல கலைஞனுக்கும் நாம் செலுத்தும் மரியாதை.

டிஸ்கி:ஒவ்வொரு நாளும் வீடு வீடா போய் டேராப் போடறதால நம்ம வீடு பூட்டியே கிடக்குது.அதன் காரணமாகவும் கூடவே சில தினங்களுக்கு முன் பதிவர் ராதாகிருஷ்ணன் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் பற்றி பதிவு போட்டிருந்ததன் விளைவாலும் அவர் பதிவுக்கும் பொம்மலாட்டம் மாதிரி குறைந்த பதிவர்களே எட்டிப்பார்த்திருப்பதும் அப்படி என்ன காரணத்தால் படப்பெட்டி தூங்கியிருக்கும் என்ற ஆர்வத்தாலும் நேற்று இரவு படம் துவக்கம் முதல் இறுதிவரை அசையாமல் பார்த்துவிட்டு இன்று அந்த ஆனந்த இம்சையை பதிவு செய்ய நினைத்த விளைவே இந்த பதிவு.

Monday, April 6, 2009

முதல்வன் , பிராஸ்ட்/நிக்சன் தொடர்புகள்

இயக்குநர் சங்கர் முதல்வன் படம் எடுப்பதற்கு முன் திரைக்கதைக்கும் படத்திற்கான கற்பனைக்கும் எங்கெல்லாம் ரூம் போட்டு யோசித்தாரோ தெரியாது.ஆனால் அர்ஜுன் ரகுவரனை நேரலையில் நேர்காணல் செய்யும் காட்சியையும் நேரலை என்ற உணர்வே இல்லாமல் ரகுவரனின் தொண்டர் ஹனீபா தலைவனைக் காப்பாற்றும் எண்ணத்தில் குறுக்கிடுவதும் நிச்சயம் புகழ்பெற்ற டேவிட் பிராஸ்ட்/நிக்சன் நேர்காணலே படத்திற்கான மூலக்கருவாக சங்கருக்கு அமைந்திருக்கக் கூடும்.

தொலைபேசி ஒட்டுக்கேட்டு வழக்கில் பிரபலமான வாட்டர்கேட் ஊழலில் பதவியை இழந்த அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் தனது பெயரை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்வதற்காக டேவிட் பிராஸ்ட் என்ற பிரிட்டிஷ் ஊடகவியலாளருடன் 600,000 டாலர் நேர்காணலுக்கு சம்மதித்த பிரபலமான உண்மை நிகழ்வே சங்கருக்கு உத்வேகத்தை (Inspiration)கொடுத்திருக்கும்.

பெரும்பான்மையான ஊடக நேர்காணலில்,உதாரணத்துக்குச் சொன்னால் பி.பி.சி வழங்கும் பேசுவது கடினம்(Hard Talk) நிகழ்வின் நிகழ்ச்சியாளர் எதிரில் அமர்ந்திருப்பவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டால் அதற்கு ஆம் அல்லது இல்லையென்று நேரடியாக பதில் கூறி விளக்கம் தராமல் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல் சுற்றி வளைத்து நழுவிய மீன்களாய் எதையாவது சொல்வது வழக்கம்.இந்த உத்தியை(Technique) ஏன் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்ற சந்தேகம் நீண்ட நாட்களாய் உண்டு.அதற்கான பதிலை பிராஸ்ட்/நிக்சன் திரைப்படம் தந்தது.

தொலைக்காட்சியில் 5 மில்லியன் பொதுமக்களால் காணப்பட்ட நிக்சனின் பதவி விலகலும் இறுதியாக விமானத்தில் பை பை சொல்லி பொதுவாழ்விலிருந்து ஒதுங்கிய நிக்சனை ஊடகவியலாளர் டேவிட் பிராஸ்ட் தனது பங்குகளையெல்லாம் விற்றும் கூட நண்பர்களிடமும் சொல்லி நிக்சனுக்கு நேர்காணலுக்கு தரவேண்டிய 600,000 டாலர்களை ஏற்பாடு செய்கிறார்.டேவிட் பிராஸ்ட்டுக்கு தனது எதிர்காலத்தைப் பணயம் வைத்து ஏற்பாடு செய்த நேர்காணல் இது.ரிச்சர்ட் நிக்சனுக்கோ பதவியிழந்த நிலையில் தனது பெயரை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம்.எனவே இந்த நேர்காணல் இருவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் ஒன்று.

இந்த நிலையில் ஒவ்வொன்றும் 2 மணி நேரம் 11 முறை என(நிக்சனின் வெளியுறவுக் கொள்கை,உள்நாட்டுக் கொள்கை,சுயசரிதை,வியட்நாம் போரை கையாண்ட முறைகள் என) துவங்கும் நேர்காணலின் முதல் கேள்வியாக ஒட்டுக்கேட்ட பதிவுகளை ஏன் அழிக்கவில்லை(Why didn't you burn the tapes?) என்பதில் துவங்குகிறது நேர்காணல். எம்புட்டு செஞ்சுட்டோம் இதைச் செய்ய மாட்டோமா பாணியில் உன்னை மாதிரி எத்தனை ஆட்களைப் பார்த்திருக்கிறேன் என்று கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் நிக்சன் நீண்ட விளக்கங்களுடன் பதிலை தந்து கொண்டிருக்கிறார்.இறுதியில் ரிச்சர்ட் நிக்சனை எப்படி டேவிட் பிராஸ்ட் தூண்டிலிட்டு கேள்விக்கொக்கியில் மாட்டுகிறார் என்பதும் நிக்சனை பொதுவாழ்க்கையில் மேலும் ஈடுபடாமல் நிரந்தர ஓய்வெடுக்கச் செய்கிற நேர்காணல் நிகழ்வுகளே கதை.

உண்மை நிகழ்வின் அடிப்படையில் திரைக்கதைப் புனையப் பட்டிருந்தாலும் நிக்சன் மப்புல டேவிட் பிராஸ்ட்டை நடு இரவில் எழுப்பி பேசுவது போன்றவை உண்மையல்ல என்றும் நிக்சன் மது அருந்துவதில்லையென்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் சமயங்களில் ஸ்காட்ச் போன்று காணப்படும் (blonde Dubonnet,’ which is a French vermouth,non-alcoholic drink that looks like scotch.) பழச்சாறு மட்டுமே உண்பவர் என்கிறார் 13 வருடங்கள் நிக்சனுடன் இருந்த Jack Brennan.நேர்காணல் வெற்றியின் வருமானத்தில் 20% நிக்சனுக்கு தரப்பட்டது என்பதும் கூடுதல் தகவல்கள்.

பிராஸ்ட்/நிக்சன் சிறந்த திரைக்கதை,எடிட்டிங்,திரைப்படம்,நடிப்பு,இயக்குநர் என ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிட்ட திரைப்பட வரிசையில் ஒன்று.