Followers

Tuesday, March 30, 2010

சாராவின் மதமாற்றமும்,மனித உரிமை அமைப்புகளும்

இனியொரு தளத்தில் மதமாற்றம் தவறல்ல:சாராவை விடுவிக்க கோரும் மனித உரிமை அமைப்புகள் என்ற இடுகையை காண நேர்ந்தது.
இனியொரு தளத்திலிருந்து அடைப்பான்!

"பௌத்தத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறி பௌத்தத்துக்கு எதிராக நூல்கள் எழுதினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணை விடுவிக்குமாறு பஹ்ரேன் நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கல்ப் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சாரா மலனி பெரேரா என்ற சிங்களப் பெண் தனது இளவயது முதல் பஹ்ரேனில் வசித்து வந்தவராவார். இஸ்லாத்தை தழுவிக்கொண்ட சாரா, தான் அந்த மதத்தை நேசிப்பதற்கான காரணத்தை விளக்கியும் மதங்களை ஒப்பிட்டும் இரு நூல்கள் எழுதியுள்ளார்.

இந்நிலையில் விடுமுறைக்காக இலங்கை வந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்தது."


இந்த திடீர் மனித உரிமை அமைப்புகள் எங்கேயிருந்து தோன்றின?குறைந்த பட்சம் இவைகளின் இருப்பாக விலாசமாவது வளைகுடாக்களில் வாழும் யாருக்காவது தெரியுமா?அப்படி ஏதாவது அமைப்புகள்,நிறுவனங்கள் இருந்தால் மகிழ்ச்சிக்குரியவை.

ஆனால் சாரா மலனி பெரேராவின் மனித உரிமை என்ற சொல்லுக்குப் பின்னாலிருந்து குரல் எழுப்பும் மனித உரிமைகளின் முகமூடிக்குப் பின்னால் மதம் சார்ந்த குரல்கள் எழுகிறதா என்ற சந்தேகத்தை கிளப்புகிறது.சாரா மலனி பெரேராவுக்கு மதமாற்றத்துக்கான உரிமை நிச்சயம் உண்டு.ஆனால் அவர் ஏனைய இலங்கையர்களை மதமாற்றத்துக்காக வேண்டி புத்தகம் எழுதியிருந்தாலோ,மத அமைப்புகளுடன் இணைந்து செயல்படுபவராகவோ இருந்தாலோ அது விமர்சனத்துக்குரியது.

ஆசிய நாடுகளின் மனித உரிமைகளின் நிலையும், அதிலும் குறிப்பாக வளைகுடா நாடுகளின் மனித உரிமைகள் பற்றியும் அதற்காக அர்பணித்துக் கொண்ட மனித உரிமைகளின் அமைப்புகள் பற்றியும் இங்கே சொல்லித் தெரியவேண்டாம்.மனித வள,மனித உரிமை,ஆசிய நாட்டு தூதரகங்கள் போன்றவைகள் நம் வயல்வெளிகளின் சோளக்காட்டு பொம்மைகள் மாதிரி. அப்படியில்லாமல் இருந்தால் உயிர் உள்ள அமைப்புகளாக மனித உணர்வுகளோடு வளைகுடா நாடுகளில் பணிபுரியும் பிலிப்பைன்ஸ்,இலங்கை,பெங்களாதேஷ்,இந்திய,நேபாள பணிப் பெண்களுக்கும் இதர உழைக்கும் வர்க்கத்து மனிதர்களுக்கும் உதவிகள் செய்ய முன்வந்திருக்கும்.அந்த அந்த நாட்டு தூதரகங்கள் ஓரளவுக்கு பணியிலிருந்து ஓடிப்போவோர்களுக்கு உதவி செய்கிறதென்றாலும் அடைக்கலத்திற்கான மூல காரணங்களை வெளியுறவு துறை வரையிலும் எந்த நாடும் கொண்டு செல்வதில்லை.சிரமங்கள் பல இருந்தும் வளைகுடா மோகம் இன்னும் விட்டபாடில்லை.அதற்கான ஒவ்வொரு நாட்டின் வாழ்க்கை நிலைகளையும் விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டியது அவசியம்.

வளைகுடா நாடுகளின் மனித சுரண்டல் குறிப்பாக பெண்கள் விசயத்தில் எப்படி திசை மாறுகிறதென்றால் இந்திய தூதரக,பிலிப்பைன்ஸ் தூதரகங்களின் சிபாரிசுகளின் பேரில் அரசாங்கம் பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல அனுமதிக்க மறுத்தால் இலங்கையோ அல்லது நேபாளமோ விசா எண்ணிக்கைகளில் முந்திக் கொள்ளும்.எந்த ஒரு கூட்டு உடன்பாடும் கிடையாது.சார்க் போன்ற அமைப்புகளில் இது போன்ற மனித உரிமைகள் பற்றி சிந்திப்பதற்கு நேரமில்லாமல் முன்பு வாஜ்பாயும்,முஷ்ரஃபும் கை குலுக்கி கொள்கிறார்களா என்று ஆங்கில ஊடகங்கள் குறி பார்ப்பதிலும்,சென்ற ஆண்டில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் பற்றியெல்லாம் கவலைகள் கொல்லாமல் எங்கள் மேல் குண்டு விழாமல் நீங்கள் சண்டையிட்டுக் கொள்ளுங்கள் என்று ஆசிகள் கூறி சார்க்கை நிறைவு செய்தார்கள்.

ஏதோ மேற்கத்திய நாடுகளின் மனித உரிமை அமைப்புகளும்,அமெரிக்காவின் அனைத்து நாடுகளின் அவ்வப்போதைய மனித உரிமை படிகளை,தரங்களை வெளியிடுவது மட்டுமே ஓரளவுக்கு ஆறுதல்.அதிலும் மனித உரிமை விமர்சனங்கள் சி.என்.என் வரை செல்லாதவரை அரைக்கண் தூக்கமே அனைவருக்கும்.

இங்கே அரேபியர்கள் என்றவுடன் மேற்கத்திய நாடுகளின் வாழ்க்கை முறையிலோ அல்லது உள்ளூருக்குள்ளேயே இஸ்லாத்தின் வேர்களில் ஊன்றியவர்களோ கூட மனிதாபிமானத்துடன் இருப்பவர்களும் உள்ளார்கள்.ஆனால் விகிதாச்சாரத்தில் மனித உரிமை மீறல்காரர்கள் அதிகம்.இதற்கான சாட்சியாக ஒவ்வொரு நாட்டின் தூதரகங்களில் கடவுசீட்டு இல்லாமல்,கையில் காசு இல்லாமல் தஞ்சம் புகுவோரின் எண்ணிக்கை.

வெவ்வேறு அரேபிய,ஆசிய உடை,உணவு,பழக்கங்கள் என மாறுபட்டிருந்தாலும் துவக்க காலங்களில் வீட்டு வேலை பெண்களுக்கு மிகவும் தடையாக இருப்பது மொழி.இதனையெல்லாம் காலப்போக்கில் கடந்து அரேபிய கலாச்சாரத்தோடு ஒன்றி விடும் வீட்டில் பணிபுரிபவர்களை தங்களில் ஒருவராகவோ குறைந்த பட்சம் சகமனிதன் என்ற பரந்த மனப்பான்மையுடன் நடத்துவது அவசியம்.குவைத்தில் கூட தற்போது உழைப்பாளர் சட்டங்களில் (Labour Laws) குறிப்பிடத்தக்க மாற்றங்கள் வந்திருக்கின்றன.ஆனாலும் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கான சலுகைகளுடன் ஒப்பிடும் போது வீட்டுபணிகளை செய்பவர்களுக்கு இல்லை.வளைகுடா மாற்றங்களின் பயணத்தின் தூரம் இன்னும் நீண்டு கிடக்கிறது.

அரேபிய இணையம்,சி,என்.என் தொலைக்காட்சிக்கு இணையான அல்ஜசிரா,துபாயின் பொருளாதார மாற்றங்கள்,உலகமயமாக்கல்,பன்னாட்டு கலாச்சாரங்களின் மாற்றங்களின் நிறை,குறைகள், அமெரிக்காவின் வளைகுடா கண்,ஈரானின் அணு நாடாகும் கனவு,இஸ்ரேல்,பாலஸ்தீனிய பிரச்சினை,பெட்ரோல் போன்றவை வளைகுடாவை ஒரு புதிய மாற்றத்துக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது.விளைவுகள் இனி மேல்தான் தெரியவரும்.

ஒவ்வொருவருக்கும் இயல்பாக ஒன்று... மதம்,காதல்,மனிதம் என்று பிடித்துப் போவதில் தவறில்லை.இதில் காதல்,மனிதம் போன்ற உணர்வுகள் இயல்பாகவே ஒருவரிடமிருந்து இன்னொருவரிடம் ஒட்டிக்கொள்கின்றன.ஆனால் மதம் அப்படியில்லை.அதற்கு ஒரு கிரியா ஊக்கியாக ஒரு தனி மனிதன்,ஒரு அமைப்பு தேவைப்படுகிறது.மதமாற்றம் கூட யாருக்கும் இயல்பாய் வருவதில்லை.அதன் பின்புலங்களை ஆய்ந்தால் சூழல்,சுயநம்பிக்கையின்மை,தாழ்வு மனப்பான்மை,துயரம்,சுய லாபங்கள்,மத மாற்றத்துக்கென்றே அர்பணித்துக் கொண்ட அமைப்புகள் என்று ஏதாவது ஒன்று இருக்கும்.தான் வாழும் குடும்பம்,நாடு,சூழல் என்ற வட்டத்துக்குள் ஒருவருக்கு இயற்கையாகவேஅவரின் மதத்தின் சாயல்கள் வந்து விடுகிறது.இதனை புறக்கணித்து இன்னொரு நிலைக்கு மாறுவது நட்பு,புத்தகம்,சூழல் என்ற சுய உணர்வில் மத மாற்றம் என்ற பரிட்சார்த்தம் என்பது மிக அபூர்வம்.அப்துல்லா சேஷாசலம் போன்றவர்கள் ஒருவேளை இந்த விதிக்குள் வருவதற்கு சாத்தியமிருக்கிறது.ஆனால் இதற்கான உட்காரணங்கள் இன்னும் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று.அப்துல்லா சேஷாசலம் இப்பொழுதுதான் விதைத்திருக்கிறார்.அறுவடை வரை பொறுத்திருப்போம்.

ஆனால் சிலர் மத கடைகள் திறந்து வைத்து மதமாற்றமும் மறைத்து வைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களில் (Hidden Agenta) ஒன்று என்ற அவர்களின் பிரசாரத்தில் தொண்டனாகிப் போவது சுய புத்தியில்லாததும் சுய சோதனைக்குள்ளாக்கி கொள்ளாததுமே.தொலைக்காட்சிகள் ஓரளவுக்கு சமூக சூழல்களை எடை போட உதவுவதால் அதன் நோக்கில் பார்த்தால் சுய மருத்துவ விளம்பரதாரர்கள்,மொழி மாற்றம் செய்யப்பட்ட உடல் வளைக்கும் சாதனங்கள்,செய்தி,மெகா,சினிமா,நகைச்சுவை நேரங்களோடு ஒவ்வொரு மதமும் வித்தியாசப்படாமல் ஒரு மணி நேரமாவது மூளை சலவைக்கு தயார் படுத்துகிறார்கள்.

இந்தியாவில் கிறுஸ்தவம் புகுந்ததின் சில நன்மைகள் பள்ளிக்கூடங்கள்,மருத்துவமனைகள் போன்றவை.எதிர்வினையாகவும் மதத்தின் அடையாளமாகவும் தேவாலயங்கள் நிற்கின்றன.ஷாஜகானின் தாஜ்மஹால்,குதுப்மினார்,ஜும்மா(வெள்ளிக்கிழமை)மசூதி,செங்கோட்டை போன்றவைகளில் ஜும்மா மசூதி மதத்தின் அடையாளம்.கூடவே அல்கைடா என்ற வரை மதத்தின் மாற்றங்கள் மனிதனை இழிவுபடுத்துகின்றன. சமணம்,ஜைனம்,சைவம் என கோயில்கள் மதத்தின் அடையாளமாய் இருந்தாலும் வர்ணாசிரமம் இணையம் வரை சிவதாண்டமாடுகிறது.

நேற்று வரை தனக்கு சொந்தமான மதம் இன்றைக்கு மதம் மாறிப் போனதும் அந்நியமாகிப் போக இயலுமா என்பது கேள்விக்குரியது.கட்சிகள் கூட மதங்களுக்கு இணையானவை.ஏனென்றால் இரண்டுமே தோற்றுவிக்கப்பட்டவை ஒரு காலகட்டங்களில் தனிமனித வெளிப்பாடாகவோ அல்லது ஒரு கூட்டு நம்பிக்கைகளாலோ.கட்சியிலும் மாறிக்கொள்ளலாம்.மதத்திலும் அப்படியே.இரண்டும் குறை,நிறை கொண்ட வலுவான, மனிதனை உளவியல் ரீதியாக பாதிப்பவை.இரண்டும் சில இசங்களை தன்னுள் தக்க வைத்துக் கொள்கிறது.அரசியலும்,மதமும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை காலம் காலமாய்.

10 comments:

கோவி.கண்ணன் said...

வரிக்கு வரி தேர்ந்தெடுத்த சொற்கள்.

நன்றாக இருக்கிறது இடுகை.

பாராட்டுகள்

கபீஷ் said...

எதுக்கும் கமெண்ட் மாடரேஷன் வச்சுகோங்க.:)

குலவுசனப்பிரியன் said...

மனித நேயம் மிகுந்த நல்ல கட்டுரை. //அரசியலும்,மதமும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை காலம் காலமாய்.// வெகு உண்மை. தானே தோன்றியது என்று சொல்லப்படும் அமைப்புகளும் இதில் அடங்கும்.

வடுவூர் குமார் said...

வார்த்தைக‌ள் தெளிவான‌ நீரோட்ட‌ம் போல் இருக்கு.இப்ப‌டி ப‌டிப்ப‌தே ஒரு சுக‌ம்.சொல்ல‌ வ‌ந்த‌தில் இருந்து பாதை மாறாம‌ல் அப்ப‌டியே வாச‌க‌ர்க‌ளையும் த‌ன்னோடு க‌ட்டி இழுத்துப்போகிறீர்க‌ள்.

ராஜ நடராஜன் said...

//வரிக்கு வரி தேர்ந்தெடுத்த சொற்கள்.

நன்றாக இருக்கிறது இடுகை.

பாராட்டுகள்//

கோவி.நன்றி.மொத்த வடிவில் வளைகுடாவின் மனித உரிமைகள் இன்னும் வரவேற்புக்குரியதாக இல்லை.வலுவாக இருக்க கூடிய ஆனால் வலுவிழந்தவையாக வளைகுடாக்கள் மதம் தாண்டி மனித உரிமைகளை முன்னிறுத்துவது மட்டுமே உலகளவில் நல்ல பெயரை ஈட்டித்தரும்.

ராஜ நடராஜன் said...

//எதுக்கும் கமெண்ட் மாடரேஷன் வச்சுகோங்க.:)//

கபீஷ்!பயப்படுத்தாதீங்க.முன்பே ஒரு முறை அனானி பின்னூட்டமிடுவதில்லைன்னு அது நானில்லைப்பான்னு ஒரு அனானிகிட்ட மல்லுக்கட்டி போதுமின்னு ஆயிடுச்சு:)

ராஜ நடராஜன் said...

//வார்த்தைக‌ள் தெளிவான‌ நீரோட்ட‌ம் போல் இருக்கு.இப்ப‌டி ப‌டிப்ப‌தே ஒரு சுக‌ம்.சொல்ல‌ வ‌ந்த‌தில் இருந்து பாதை மாறாம‌ல் அப்ப‌டியே வாச‌க‌ர்க‌ளையும் த‌ன்னோடு க‌ட்டி இழுத்துப்போகிறீர்க‌ள்.//

வடூவூர் குமார்!உங்கள் பெயர் பார்க்கிறேன் தமிழ்மணத்தில்.முக்கியமாக பின்னூட்டங்களில்.

ராஜ நடராஜன் said...

//மனித நேயம் மிகுந்த நல்ல கட்டுரை. //அரசியலும்,மதமும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை காலம் காலமாய்.// வெகு உண்மை. தானே தோன்றியது என்று சொல்லப்படும் அமைப்புகளும் இதில் அடங்கும்.//

உங்கள் வருகைக்கு நன்றி குலவுசனப்பிரியன்.வித்தியாசமான பெயர்.மற்ற மாநிலத்தவர்கள் போலல்லாது பெயருக்கு பின்னால் இனக்குறிப்புகளை தவிர்த்ததில் தமிழகம் வெற்றி பெற்று விட்டது.கூடவே அழகான தமிழ் பெயர்களை மட்டுமே வருங்கால சந்ததிக்கு சூட்டி விட்டால் தமிழகம் இன்னும் சிறப்பாக இருக்கும்.

கண்ணா.. said...

நல்ல பதிவு ராஜ நடராஜன்,

வார்த்தை விவரிப்பும் அருமை..

:)

ராஜ நடராஜன் said...

//வார்த்தை விவரிப்பும் அருமை..

:)//

கண்ணா!மறுபடியும் டேரா போடறதுன்னு முடிவு பண்ணீட்டீங்க.நன்றி.