Followers

Wednesday, October 27, 2010

தேரி பின்லாடன்

சிரிக்கணுமா?உருது, இந்தி தெரியுமா?தெரிந்தால் தேரி பின்லாடன் பார்க்கிற வழியைப் பாருங்க.தெரியலையா அல்லது கொஞ்சமா தெரிஞ்சுக்க விருப்பமா? அப்ப இடுகையை ஒரு மேலோட்டம் பார்த்து விட்டு படம் பார்க்கிற வழியைப் பாருங்க.இது பலநாடுகளில் முக்கியமாக வளைகுடா,பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட படம்.தடை செய்ற அளவுக்கு என்ன இருக்குன்னு பார்க்கலாமேன்னு மூளை திசுக்களை கிள்ளுதா?அப்ப தேரி பின்லாடன் பார்த்துடுங்க.

அலி ஹசன்-.எப்படியாவது அமெரிக்கா போய் செய்தியாளராகி விட வேண்டும் என்ற கனவு கண்ணன்.விமான பயணத்தில் செய்யும் பக்ரா சில்மிசங்களால் பாகிஸ்தானிய தீவிரவாதி என்று வண்டியை விட்டு இறக்கி விட்டு விடுகிறார்கள்.இதற்கிடையே டங்கா தொலைக்காட்சிக்கு வீடியோ நணபருடன் கராச்சி சார்ந்த செய்திகளை சேகரிக்கும் பணியில் முதலமைச்சர் நிகழ்ச்சியை சேகரிக்க போக டங்கா தொலைக்காட்சி பெயரையே கேள்விப்படாத காரணத்தால் காவலர் உள்ளே விட மறுக்க, முதலமைச்சர் நிகழ்ச்சியை எப்படியாவது வீடியோ எடுத்து விடவேண்டுமென்று அறையின் மேல்கூறை வழியாக முதலமைச்சரின் மொட்டைத்தலையை படம் பிடித்து டங்கா நிறுவனரிடம் வாங்கி கட்டிக்கொள்கிறார்.

ஆறு முறை முயற்சி செய்தும் ஏழாவது முறையும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு அமெரிக்க கனவு நிறைவேறாமல் நம்ம ஊர் வெளிநாட்டுக்கு அனுப்பும் ஏஜண்ட் ஸ்டைலில் ஒரு நிறுவனத்தை அணுக அவரோ 250000 ரூபாய் கொண்டு வருமாறு கூறுகிறார்.அவ்வளவு பணம் அதிகம் என அலிஹசன் கூற பணம் கட்டாத இன்னொரு குறுக்கு வழியும் இருக்கிறதென்று AK47 சுடத்தெரியுமா என்று பின்பக்கம் உட்கார்ந்திருக்கும் 2 முஜய்தீன்,உலக வரைபடம் காட்டி முதலில் ஈரானுக்கு உன்னை அனுப்புவோம்.பின் அங்கிருந்து ஈராக்கிற்கு போனால் அமெரிக்கர்கள் உன்னை எந்த செலவுமில்லாமல் அமெரிக்கா கொண்டுபோய் விடுவார்கள் என்கிறார்.அலிஹசன் அலறியடித்து எப்படியாவது பணம் கொண்டு வருவதாக சொல்லி விட்டு கோழிப்பந்தயம் ஒன்றை வீடியோ நண்பருடன் சேகரிக்கிறார். 


கோழிகளை  சண்டைக்கு மோதவிட்டுத்தான் பார்த்திருக்கிறேன்.பதிவுலகம் வந்த காலத்தில் கூட வெட்டிப்பயல் கல்லூரிக்கால கோழி பதிவுளை போட்டதைப் படித்திருக்கிறேன்.முதல் முறையாக வாசகர் பரிந்துரை மாதிரி எந்தக் கோழி நல்லா கொக்கரக்கோன்னு மைக்கில கூவுதுன்னு தலைக்கு முண்டாசு கட்டின கராச்சி நாட்டமைகாரன் மார்க் போடுவதை தேரே பின்லேடன் இந்திப்படத்தில் முதல் முறையாகப் பார்த்தேன்.
எந்தக் கோழி மைக்கில் கொக்கரக்கோ நல்லா கூவுதுங்கிற கோழிகளின் நடிப்பு:)க்கு பறவையினங்களுக்கான ஆஸ்கார் பரிசு என புதிதாக ஒன்று ஆரம்பிக்கலாம்.

போட்டிக்கான முதல் கோழியை அறிவிக்க கோழி மைக்கில் கோக்க்..கோக் என கூவ நாட்டாமை 5 மார்க் தருகிறார்.அடுத்து இரண்டாவது கோழி கெட்டவார்த்தை ஒன்றை சொல்லி 7 மார்க் வாங்கியதும் அடுத்து சென்ற ஆண்டின் பதக்கம் பெற்ற கோழி நிலம் நோகாப் பெண்ணாக மெல்ல அடி எடுத்து வைத்து கோக் என்ற ஒரே ஒரு சன்னக்குரலில் 1 மார்க் வாங்கி தோல்வியுறுகிறது.அடுத்து வீர நடை போட்டு வந்து ஹொக்க்ரக்ஹோ என்று கூவி பரிசை தட்டிச்செல்கிறது நூரா என்ற பின்லேடன் சாயல் கோழிப்பிரியரின் கோழி.

அலிஹசன் வீடியோவை கணினியில் எடிட் செய்ய இணைய தேடலில் பின்லேடன் முகச்சாயலோடு நூரா இருப்பது கண்டு தனது புதிய திட்டத்தை நண்பனிடம் கூறுகிறார்.அமெரிக்காவோ பின்லேடனை டோராபோராவில் தேடுகிறது.நூரா பின்லேடனோ கிராமத்தில் கோழி வளர்த்துக்கொண்டிருக்கிறார்.கோழிகள் மேல் உயிராக இருக்கும் பின்லாடன் உருவத்தில் உள்ள நூராவை  அவருக்குத் தெரியாமலே பின்லேடன் மாதிரி பேச பயிற்சி தந்து வீடியோ படக்காட்சி எடுத்து டோங்கா நிறுவனர் மூலமாக அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைக்க பின்லேடன் உயிரொடு இருப்பதாக அமெரிக்கா நூராவை தேடுவதென கதை நகர்கிறது.

எத்தனையோ அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பின்லேடன்,ஜார்ஜ் புஷ் கடி ஜோக்குகள் சொல்லியுள்ளன.ஆனால் இருவரையும் காலை வாரி விடும்படியான சிரிப்பு பரிசை தேரே பின்லாடன் இந்திப்படம் தட்டிக்கொண்டு போய்விடும் என நினைக்கிறேன்.

இதுவரை அறிமுகமாகாத கதாபாத்திர புதுமுகங்கள்,அமெரிக்க அசல் உச்சரிப்புக்கள்,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் இருக்கிற மாதிரி லாரி,அப்படியே பாகிஸ்தானின் கராச்சி நகர்ப்புறத்தை பிரதிபலிக்கும் செட்டிங்ஸ்,ஆடைகள்,சில AK47 துப்பாக்கிகள்,நல்ல நகைச்சுவை ஸ்கிரிப்ட் கலந்து தேரி பின்லாடன் அமெரிக்காவையும்,பாகிஸ்தானையும் நையாண்டி செய்கிறது.

இந்தி கட்டாயம் படிக்கணும் என்ற அரசியல் திணிப்பினால் செய்ய இயலாத ஒரு சாதனையை இந்தி சினிமாக்கள் செய்கின்றன.அதோடு இந்தியா பாகிஸ்தான் என்று பிரிந்து நிற்கும் மக்களை இணைக்கும் பாலமாக இந்தி படங்கள் சிரிக்க வைத்து இருகோட்டு மனிதர்களை இணைக்கும் சாத்தியமும் ஒருவரை ஒருவர் நெருங்கும் புரிந்துணர்வை தரலாம்.பதிலாக மனிதர்களின் மனோபாவங்களைப் பொறுத்து. தேரி பின்லேடன் சிரிப்பையும்,கோபத்தையும் உருவாக்கும்.

டிஸ்கி.நூரா பின்லேடன் கோழியுடன் போஸ் தரும் படத்தை இணையத்தில் தேடி கிடைக்காததால் கிடைத்தவை இடுகையில்.

Thursday, October 21, 2010

பாவம்!இந்தியாவின் ரோகிந்தன் மிசிரியும் கோவிந்தன் மேஸ்திரியும்.

யாராவது பதிவர்கள் சொல்வார்களா என்று எதிர்பார்த்து யாரும் சொல்லாத காரணத்தால் என்னுடைய தனி ஆவர்த்தனம் இந்த் இடுகை.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மனிதன் பலருக்கு காட்பாதர் மாதிரி.இன்னும் சிலருக்கு சமூகத்திற்கும் ஜனநாயகத்திற்கும் ஊறு விளைவிப்பவர்கள்.அந்த வரிசையில் எப்பொழுதும் விவாதத்திற்குரிய வில்லங்கமான ஒரு மனிதர் பால் தாக்கரே.கார்ட்டூனிஸ்ட்டாக இருந்து பின் காட்பாதராகும் வரை மகாராஷ்டிரம் சார்ந்தும்,இந்தியா சார்ந்தும் செய்யும் அடாவடி ஜனநாயக அத்துமீறல்கள் அதீதமானவை.மும்பையின் பாதாள உலக தாதாக்கள்,அரசியல் பாதுகாப்புடன் அப்பாவி மக்கள் சார்ந்த குரலும் சேர்ந்த மொத்த கலவை பால் தாக்கரே.

இடுகையைப் படிப்பவர்களில் சிலருக்கு வரதா பாயை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வரதராஜன் என்ற வர்தா பாயின் நிஜ வாழ்க்கையையும்,  மார்லன் பிராண்டோ நடித்த காட்பாதரையும் சேர்த்து அரைத்த கலவையே நாயகன் திரைப்படம் என விசயம் தெரிந்தவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள்.வரதா பாயின் காலத்தை 70பதுகளின் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலம் என்று ஒப்பிடுவது சரியாக இருக்கும்.ஏனென்றால் பின்னால் சொல்ல வரும் செய்திக்கு முன்னுரையாகவும் அந்தக்கால கட்ட பால் தாக்ரேயின் அரசியல் தடாலடிக்கும் துணைபுரிவதாக இருக்கும்.

70பதுகளில் பம்பாயில் வாழ்க்கை தேடி ஓடிய ஆந்திர,கர்நாடகா, கேரள,மெட்ராஸ்காரர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குள்ள மொத்த அடையாளம் மதராஸி(சி வேணும்ங்கிறவங்க சி போட்டு படிக்கவும்:)).பம்பாயின் நலன்களை மதராஸிகள் அபகரித்துக்கொள்கிறார்களென்றும்,தாராவியின் குடிசைகளுக்கு இவர்களே காரணமென்றும் மதராஸிகள் பம்பாயை விட்டு வெளியேற வேண்டும் என்ற கலவரத்தை மகாராஷ்ட்ரிய மக்கள் மூலமாக தீக்குச்சி பத்த வைத்தார்.இதில் தென் இந்தியாவின் ஏனைய மாநிலங்களைச் சார்ந்தவர்கள்,முக்கியமாக கேரள சேட்டன்களும் கூட வர்தா பாயுடன் சேர்ந்து திருப்பி அடிக்கும் ஆயுதத்தை எடுத்திருக்க முடியும்.ஆனால் வர்தா பாய் தாராவியின் தாதா என்பதாலும் கணேஷ் சதுர்த்திக்கு பணம் அள்லி விடுபவராகவும் இருந்ததுடன் நாயகன் திரைப்படம் காரணமாக பிரபலம் என நினைக்கிறேன்.கலவரங்கள் அடங்கிப் போய் பம்பாய் தன்னை "நான் காஸ்மோபோலிடனடா" என்று சொல்லிக்கொண்டது.

ஆனால் பால் தாக்கரேக்கு  மராட்டியர்களின் பாதுகாவலன் என்ற பிம்பம் வந்து விட்டது.இதற்கும் அடுத்த பத்தாண்டு காலத்தில் பம்பாயின் இந்து,முஸ்லீம் கலவரங்களின் முக்கிய களவானியாக பதவி உயர்வும் அதனைத் தொடர்ந்த தடாலடி அறிக்கைகளையெல்லாம் தொகுத்தால் பால் தாக்கரே மீதான எதிர்வினைகளே மிஞ்சும்.பால் தாக்கரேயின் சிவசேனா குடும்ப அரசியல் இரண்டாகப் பிரிந்த பின்னர், பீகாரிகளின் ஆதிக்கம் மஹாராஷ்ட்டிராவில் அதிகம்,அமிதாப் பச்சன் மீது நொட்டைச் சொல்,சச்சினிடம் வம்பு,நீதிமன்ற வாரண்டு வந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவன் என்ற திமிர்த்தனம்  என வில்லங்கத்தனங்கள் சொல்லி முடியாது.இந்த லட்சணத்துல நம்ம ரஜனி அவர்கள் பால் தாக்கரே எனக்கு கடவுள் என்று சொல்வது அபத்தமாயில்லை ரஜனி ரசிகர்களே!

இதையெல்லாம் விடுங்க பாஸ் மற்றும் பாஸிகளே!(பெண்களும் படிக்கிறாங்க இல்ல அதனால்தான்:)) இப்ப இடுகையின் தலைப்பு கதைக்கு வருவோம்.

பள்ளியில்,கல்லூரியில் படிச்சிருக்கிறோம்.வாத்யார்,லெக்சரர் சொல்வதை கேட்டும்,கேட்காமலும் தேர்வு நேரத்தில் மனப்பாடம் செஞ்சும்,பிட் அடிச்சும் எப்படியோ தேத்தி சிலசமயம் தோத்தும் விடுகிறோம்.ஆண்டனி கிளியோ பாட்ரா,ஜூலியஸ் சீஸர்,ஷேக்ஸ்பியர்,மில்டன்,உண்ணும் உணவின் ஹார்போஹைட்ரேட்,புரோட்டின்,மால்க்யூல்,என்சைம்ஸ்,திருக்குறளின் முப்பாலில் சில, அகநானூறு, புறநானூறு, கலிங்கத்துப் பரணி, கணக்கு வாத்தியார்கிட்ட கையை நீட்டி வாங்கும் தப்புக்கணக்கு, அசோக ஸ்தூபியை நிறுவியது யார் இப்படி ஏதாவது கேள்விகளுக்கு பதில் சொல்வதோடு வருட லீவை அமர்க்களப்படுத்திட்டு அப்புறம் நமது கண்கள் வென்றவர்கள் அட்டவணையில் பெயரும்,எண்ணும் இருக்கிறதா இல்லையா என்று பார்க்கப் போய் விடுவோம்.ஏனென்றால் இந்தியாவில் கற்கும் பெரும்பாலான மாணவர்கள் ஜனநாயகத்தின் அசடுகள்.நாம் ஐம்பெருங்காப்பியங்களில் கூட எங்காவது குறை காண்பதுமில்லை.வேண்டுமென்றால் கம்பனைப் பற்றி பட்டிமன்றம் நிகழ்த்துவோம்.ஏனென்றால் காப்பியங்கள் நமக்கு இலக்கியம்.

ஆனால் நீங்கள் பால் தாக்கரேவின் 20 வயது வம்ச வாரிசாக இருந்தால் உஃப் என்று ஊதினால் கீழே விழும் எலும்பாண்டியாக இருந்தாலும் வீர மராட்டியனின் பேரப்பிள்ளை.பத்து வருடங்களுக்கும் மேலாக Such a long journey என்ற புலிட்சர் பரிசின் B.A ஆங்கில இலக்கியத்தின் பாடப் பகுதியாக இருந்தாலும் நொள்ளைகள் கண்டுபிடிக்க உரிமை உண்டு.அதோடு மட்டுமில்லாமல் இந்தப் பாடத்தைப் படித்து படிக்கிற புள்ளக கெட்டுப்போகும்,மராட்டியர்களை இழிவுபடுத்தும் பகுதிகள் இருக்கு என்று சொல்லி ஆதி(க்க)த்ய தாக்கரே தாத்தா பால்தாக்கரேகிட்ட வத்தி வைக்க முடியும்.தாத்தா பத்து வருடம் பாடத்திட்டத்தில் இருக்கும் ஒரு நூலை 24 மணி நேரங்கள் ஏன் எதற்கென்று கேள்வி கேட்க இயலாமல் தடை செய்ய இயலும்.இந்த தடைக்கு மராட்டிய வாள் எடுத்து அப்பன், தாத்தன், பேரன் என ஒரே மேடையில் வாரிசு விழா எடுக்க இயலும்.மத்தியிலும் வாரிசு அரசியல்,மாநிலங்களிலும் பாஸ் இசம் பூரிக்கும் அரசியல்.வாழ்க!வாழ்க எத்தனை நாட்களாத்தான் சொல்வது அதனால் வளர்க இன்னும் வாரிசு இந்திய ஜனநாயகம்!

ரோகிந்தன் மிசிரியின் Such a long journey ( Pulitzer prize winner) புத்தகம் கிடைப்பவர்கள் வாங்கிப் படிக்கவும்.தாக்கரேக்களால் முடிந்த ஒரே நல்ல காரியம் இது.

பொஸ்தகம் படிக்க நேரமில்லப்பான்னு சொல்றவங்க அதே பெயரில் வந்த திரைப்படம் கிடைச்சா பார்த்துட்டு ஜனநாயக தாதா தாக்கரேக்களுக்கு உர்ர் என்ற முறைப்பு விடவும்.

Wednesday, October 20, 2010

வடிவேலுவும் எந்திரன் மகன் சிந்திரனும்

சரக்கொன்னும் இல்லியான்னு நசரேயன் கேட்டதால இது நசரேயன் ஸ்பெஷல்:)இப்ப காட்சிகள் ம்யூசிக்குடன் ஸ்டார்ட்..
எல்லா பய புள்ளகளும் போகுதேன்னு எந்திரனின் பாகங்களை கழட்டி வைத்த ம்யூசத்துக்கு ஒரு நாள் வடிவேல் போகிறார்.ஆகா!எந்திரனத்தான் கருணாசும்,சந்தானமும் ஆட்டையப் போட்டுட்டாங்க எந்திரன் 2ல எப்படியாவது கலக்கிடணுமுன்னு அங்குமிங்கும் இயக்குநர் ஷங்கரைத் தேடி நோட்டம் விடுகிறார்.
 
அப்ப ச்சிட்டி மாதிரி ஒரு பையன் ஸ்கூலுக்குப் போறதப்  பார்த்துட்டு பாவம் யாரு பெத்த புள்ளையோ தனியா புலம்பிகிட்டு இருக்குன்னு வடிவேல் பையன்கிட்ட் மெதுவாப் பேச்சைத் துவக்குகிறார்!
 
வடிவேல்: யாருப்பா நீ?உன் பேரென்ன?
 
பையன்: என் பேர் சிந்திரன்.எந்திரனின் மகன் 4 மொக்கரா பைட் 8 ஜிகிட்டா பைட்.நான் ச்சிட்டியப்பா மாதிரி சண்டையல்லாம் போட மாட்டேன்.காமெடி மட்டும்தான் சொல்லிக்கொடுத்திருக்காங்க

வடிவேல்: எனக்குப் போட்டியா கிளம்பிடங்காய கிளம்பிடங்கா.
 
சிந்திரன்:  என்னாதிது இப்பவே கண்ண கட்டுதா?இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கு

வடிவேல்:ஓபநிங் நல்லாத்தான் இருக்கு ஆனா பினிஷிங் சரி இல்லையேப்பா
 
சிந்திரன்: ம்க்கும்!உனக்கும்தான்  பில்டிங் ஸ்ட்ராங்கு ஆனா பேஸ்மென்ட் வீக்கு!ஆனா நாங்க ஏதாவது கோட்டோமா?
 
வடிவேல்: தம்பி!எதையுமே பிளான் பண்ணாம பண்ணபடாது.ஆமா
why blood same no blood?

சிந்திரன் எங்கப்பன்கிட்ட கேட்க வேண்டிய கேள்விய என்கிட்ட கேட்டா?சரி
 இந்தப் பக்கம் 2ஈ வருமா?

வடிவேல்:வரும் ஆனா வராது.ஆமா!இத்தனை ஆளு இருக்கறப்ப ஏன் என்கிட்ட வந்து கேக்குற ?என்ன வைச்சு காமெடி கீமெடி பண்ணலையே

சிந்திரன்:அண்ணே!ரிஸ்க் எடுக்கறது எல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரின்னு நீங்கதானே சொன்னீங்க

வடிவேல்(மனதுக்குள்)என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லீடான்யா என்று வடிவேல் மகிழ

வழக்கம் போல்  என்ன நடந்திருக்கும்?


இந்த கோட்டை தாண்டி நீயும் வரகூடாது நானும் வரமாட்டேன் பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்

வேணா வலிக்குது அழுதுடுவேன்

மாப்பு வெச்சிட்டான்யா ஆப்பு....

ஷங்கர் சார் ! சீக்கிரம் கொஞ்சம் ஓடியாங்க. நீங்க எனக்கு சான்ஸ் கொடுக்காட்டியும் பரவாயில்லை.என்னை இந்த ஜந்திரன்ங்க கிட்டருந்து காப்பாத்துங்கஅப்படியே இந்த மொண்ணையா மொக்கை போடுறவன்கிட்டயிருந்து நசரேயனையும் காப்பாத்துங்க....

படங்கள் அசல்: தொஷிபா கணினி விளம்பரம்.

Friday, October 15, 2010

ரஜனி VS கே.ஆர்.பி செந்தில்

Dear Senthil !

 நண்பர்களின் இடுகைக்கு பின்னூட்டமிடும் போது மனதின் ஓட்டத்தில் தட்டச்சுவதால் கூகிளண்ண்ன் நீ வரம்பு மீறுகிறாய் என்று பல சமயம் எச்சரிப்பதால் பின்னூட்டமாய் போட வேண்டியதை இடுகையாக்குகிறேன்.

செந்தில்!நாம் பொது நலன்களை ஒரே பார்வையில் பார்ப்பதால் எனது பின்னூட்ட இடுகையான இந்த பதிவுக்கு உங்களின் தலைப்பே முக்கியம் என்பதால் முதலில் பின்னூட்ட இடுகையிட்டு விட்டு அப்புறம்  உங்களின் இடுகையை காணப் போகிறேன்.

கடந்த சில தினங்களுக்கு எனது இடுகைக்கு பிறகு தமிழகத்தில் எழும் குரல்களை  கூர்மையாக கவனித்து வருகிறேன்.முதலாவதாக எழுந்த குரல் வை.கோ.அடுத்து திருமா வளவன்.அடுத்து நெடுமாறன் அவர்கள்.இவர்களின் பொதுவான எதிர்ப்புக் குரல் ஒன்றாக இருந்தாலும் ஒவ்வொரு திசையிலிருந்தும் குரல் எழுப்புவதால் அதன் தாக்கம் மக்களைப் போய்ச் சேர்வதிலலையென நினைக்கிறேன்.அதன் பலன் தி.மு.க VS அ.தி.மு.க என்ற பழைய வட்டத்துக்குள்ளெயே  தமிழகம் வலம் வருவது தவிர்க்க இயலாததாகிறது.

எம்.ஜி.ஆர் காலம் தொட்டு சினிமாவின் ஆதிக்கம் அரசியலில் நுழைவது நல்லதல்ல என்றே நினைத்து வந்திருக்கிறேன்.ஆனால் நினைப்புக்கும் அப்பால் ரசிகர்கள் என்ற வட்டமும் அதனையொட்டிய யதார்த்தம் என்ற நிலையையும் யோசனை செய்தால்  எம்.ஜி.ஆரின் அரசியல் பிரவேசமும் அதனைத் தொடர்ந்த அரசியல் நிலைகளும் யோசிக்க வைக்கிறது.எனவே இப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பதை விட இப்படியும் நிகழும் யதார்த்தங்களை சிந்திக்கும் போது மாற்று அரசியலுக்கு ரஜனி என்ற காந்தம் மக்களுக்கு நிச்சயமாகத் தேவைப்படுகிறது.அதற்கான சூழல்கள் முன்பொரு காலத்தில் மூப்பனார் காலத்தில் இருந்தது.ஆனால் அதனை ரஜனிகாந்த் தவற விட்டு விட்டார் எனலாம்.இருந்தாலும் ரஜனி எனும் காந்தம் இன்னும் மக்களை வசீகரிக்கிறது.இவரால் தமிழகத்துக்கு மாற்றம் வராதா என்று பலரும் நம்பும் தருணம் இருக்கிறது அரசியல் நுழைவின் விளைவுகள் எப்படியிருந்த போதிலும். 

எனக்கு முன்பு மக்கள் கலை இலக்கிய கழகமான வினவு தள குழு பற்றி எதுவும் தெரியாது.சமூக உணர்வுள்ள புதிய இயக்கங்கள் சமூகத்தில் வலம் வருவதை வரவேற்கிறேன்.ஆனால் இவர்களின் முரண்நகை நீங்க ஆட்டத்தில் சீக்கிரம் வெளியேறுகிறீர்கள் என்றே உங்களின் பின்னூட்ட்ங்களும் ஏனைய நண்பர்களின் பதில்களும் பறைசாற்றுகின்றன.

முன்பு வானம்பாடிகள் பாலாவின் பின்னூட்டமொன்றிற்கு(இடுகை நினைவில் இல்லை) சொன்ன பின்னூட்ட விடையை இப்பொழுது அவிழ்க்கப் போகிறேன்.ரஜனிக்கு கருணாநிதியென்ற மரியாதை நிமித்தமோ அல்லது அவரது ஆட்சி காலத்தில் அரசியலுக்குள் நுழையக்கூடாது என்ற செண்டிமெண்ட் காரணம் கூட  இருக்ககூடும்.அதே நேரத்தில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அதற்கும் மேல் மெட்டீரியலிசத்துக்கும் அப்பால் ஆன்மீக வாழ்க்கை. பிடித்ததாகக் கூட இருக்க கூடும்.இப்படியொரு குழப்பமான மனநிலை காரணமாக எப்ப வருவேன் என எனக்கே தெரியாது என்ற  திரைப்பட வசனங்களும் கூட குழப்பமான சூழலை உருவாக்குகிறது.எது எப்படியிருந்த போதிலும் தமிழகத்தின் மாற்று அரசியலுக்கு சரியோ தவறோ ரஜனியை விட்டால் வேறு வழியில்லையெனக் கருதுகிறேன்.

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலம் அதன் கடமையை செய்யவே செய்யும்.அதற்கு பின்னாலான அரசியல் மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க ஒரு வலிவான மனிதனும் அதன் பின் ஒரு அமைப்பும் தேவை.அதற்கான வல்லமை ரஜனிக்கு இருக்கிறது.தேர்ந்தெடுப்பதும் ஆன்மீகம் மட்டுமே என்ற சுய அனுபவங்களைப் பெறுவதும் ரஜனியின் கரங்களில்!


டிஸ்கி! இது இடுகையல்ல!பின்னூட்டம்.இவ்ளோ பெரிய பின்னூட்டத்தை கூகிளண்ணன் அனுமதிப்பார் என நீங்கள் நினைக்கிறீங்களா:)

Thursday, October 14, 2010

புதிய தொழில் நுட்ப மாற்றங்கள் மற்றும் மனித உறவுகள்

முன்பு Beyond 2000 என்ற அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்வு ஒன்று காணும் போது  2000 வருடத்திற்கு பிறகு என்னவெல்லாம் மாற்றங்கள் வரும் என்று சொல்லும்போது நிகழ்ச்சியாளர் ரீல் விடுகிறாரோ என்று சந்தேகம் வரும்.ஆனால் 2000க்குப் பிறகான கணினி தொழில் நுட்ப மாற்றங்களைக் காணும் போது  பிரமிக்க வைக்கின்றன.இன்னும் வரும் காலங்களில் எதுவெல்லாமோ நிகழும் என்ற கற்பனைக்கு அளவேயில்லை.முதல் தலைமுறை,இரண்டாம் தலைமுறை போய் இப்பொழுது 3G ,4G என்ற மூன்றாம்,நான்காம் தலைமுறைக்கு தொழில்நுட்பம் வந்துவிட்டது.

                                                                         i Phone 4
                                                                Samsung Galaxy S

இதை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் முன்பு மேஜையில் இடத்தைக் காத்துக் கொண்டிருந்த மேசை மேல் கணினிப் பெட்டிகள் போய் மடிக்கணினி(Laptop) என்றும் புத்தக கணினி என்றும்(Notebook) வந்தவுடன் அட!இது நல்லாயிருக்குதே என்று மனம் குதுகலித்தது.நசரேயன் எல்லோருக்கும் பின்னூட்டம் போடுவது மாதிரி ம்ம்ம் என்றோ  அல்லது கடின தட்டுக்கு (Hard Disk) பிடித்த உர்ர்ரென்ற சத்தமோ வந்தாலும் கூட தட்டச்சும் வசதியால் இதனைப்  பெரிது படுத்தாமல் நாம் இருந்தோம்.ஆனால் எந்திரன் ரஜனி மாதிரி ஆராய்ச்சியாளர்களுக்கு புதிய மனிதா பாட்டுப்பாடாவிட்டால் தூக்கம் வராது.அப்படி தொஷிபா மடிக்கணினிக்காரர்கள் கண்டு பிடித்த புதிய 3G கணினி லிப்ரட்டோ மாடல் 7 இன்ஞ் குள்ளன்.

                                                    Toshiba Notebook Libretto

நாம் வழக்கமாய் தட்டச்சும் கீ போர்டை காணோம்.பதிலாக அங்கேயும் பிலிம் காட்டும் Display.தட்டச்ச வேண்டுமென்றால் virtual Keyboard and Touch Screen மட்டுமே.இப்பொழுது ஐபோன்,சாம்சங்க் கேலக்சி போன்ற கைபேசிகளும் கூட இதே தொழில்நுட்பத்துடன் கடைகளில் கிடைக்கின்றன.சென்னையில் டிராபிக் சிக்னல்களில் காமிரா பொறுத்துவதாக கேள்விப்பட்டேன்.எப்பொழுதோ செய்திருக்க வேண்டியது.பயண ஊர்திகளில் கேமரா பொறுத்துவது ஆண்களின் சில்மிஷங்களையும்,பிக்பாக்கெட் குற்றங்களை குறைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.கேமிரா பொறுத்துவதை விட அதை எப்படி இயங்காமல் செய்வது என்பதில் நமது ஒழுக்கங்கள் பல்லைக்காட்டும் என எண்ணுகிறேன்.

தொழில் நுட்ப வசதிகளால் பதிவுகள் போன்ற கருத்து பரிமாற்றங்கள் நேரடி பலன்கள் எனலாம்.கூடவே பன்முக கருத்துக்களும் ஒரு பொருள் பல பரிமாணங்களை தோற்றுவிப்பதும் மகிழ்ச்சிக்குரியது.புதிய தேடல்கள் ஒரு புறம் ஆரோக்கியமானதென்றாலும் இதற்கான பக்கவிளைவுகளும் நிகழாமல் இல்லை.உதாரணத்திற்கு ஒன்று.முன்பு கணினியைத் தொடாத எகிப்தியன் சொல்லும் நகைச்சுவைகள் சிரிக்க வைக்கும்.குட் மானிங்க் என்பதை மார்னிங் குத் என்பான்.கூட பணி புரியும் ஒருவன் சப்பாத்தி தின்பதை அவனைப் போலவே மோனோஆக்டிங்க் செய்து அவனுக்கு ஸப்பாத்தியென்றே பெயர் வைத்து விட்டான்:).மெல்ல அரபி மொழியில் கணினையைத் தட்டக் கற்றுக்கொண்டு இப்பொழுது பெரும்பாலும் கணினி விளையாட்டில் ஈடுபடுகிறான்.முந்தைய சிரிப்பு போய் விட்டது.
 
இது ஒருபுறமிருக்க வளைகுடாவைப் பொறுத்த வரையில் அரபி பையன்களின் போக்கிரித்தனம் குறைந்த மாதிரி தெரிகிறது.இணையத் தொடர்புகள் ஓரளவுக்கு உலகப் புரிதலை கொண்டு வந்து சேர்த்திருக்கிறதெனவும் நினைக்கிறேன்.அதற்கான கலந்துரையாடல்கள் நிகழ்வதைக் காண்கிறேன். 
 எட்டாம் வகுப்பு,ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் பரிட்சையில் வாங்கும் மார்க் 15 போனா போகுதுன்னு 20 மட்டும் உச்சம்.கணக்கில் முட்டை மட்டும் மிச்சம்.ஆனால் கணினி விளையாட்டில் அள்ளும் மார்க் ஆயிரங்கள், பத்தாயிரங்களை காட்டுகின்றன. நேற்று கணினி,தொலைக்காட்சிக்கு குழந்தைகள் மொழியில் கட்டி சொல்லிவிட்டு மேக்ரோனி பேஸ்தா செய்யும் மனைவிக்கு உதவி செய்யப் போனது மனதுக்கு மகிழ்ச்சியாகவும் சமைத்துக்கொண்டே  பேசும் உரையாடலுக்கு உறுதுணையாகவும் இருந்தது.

தொழில் நுட்பமும் வேண்டும்.நம்மையும் தொலைத்து விடாதிருக்க வேண்டும்.கூடவே பசியில்லாத,அமைதியான,போரில்லாத சமூகம், உலகம் உருவாகும் வரை தொழில் நுட்ப வளர்ச்சிகளின் வெற்றிக்கு அர்த்தமில்லை.

                                                                 Love Thy People

அதன் காரணம் கொண்டே அவரவர் சார்ந்த சமூகத்தையும்,பொதுவாகவே மக்கள்: வாழ்க்கையை பாதிப்பவர்களையும் குறித்த விமர்சனம் தேவைப்படுகிறது.இல்லையென்றால் பதிவுலகத்துக்கும் விமர்சன முன்ணனி மனிதர்களுக்கும் கொடுக்கல் வாங்கல் சண்டையா என்ன?

விட்டவை தொட்டவை பின்னூட்டத்தில்.....

Photo courtesy : Google images.

Monday, October 11, 2010

CWG - கல்மாடி முதல் ராஜபட்சி வரை

இனியொரு தளம் CWG விளையாட்டு நிறைவினை  ராஜபக்சே தலைமையில் செய்தி வந்துள்ளதாக மொட்டையாக இடுகையிட்டதைப் பார்த்து மனம் பகீர் என்றது.இது உண்மைதானா என்ற தேடலில் டெக்கான் ஹெரால்ட் செய்தி அதனை உறுதி செய்கிறது.

விளையாடா விட்டாலும் விளையாட்டின் தின வர்ணனைகளை பதிவில் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் கல்மாடியின் கலாட்டாக்கள் ஒரு நாள் நிகழ்வைக் கூட பார்க்க இயலாமல் ஒப்புக்கு சப்பாணியா எத்தனை தங்கம்,வெள்ளி,பித்தளை என்ற கணக்கில் மட்டும் பார்வையிட்டு விட்டு ஓடிப் போகும் மனநிலையே இருந்தது.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ரத்தக் கறைத் துண்டு ராஜபக்சேவுக்கு இறுதி நாள் வரவேற்பு.

Just disgusting!No more to say.

Monday, October 4, 2010

CWG விளையாட்டும் கல்மாடியும் டெல்லி அரசியலும்

காமன்வெல்த் போட்டிகளின் மொத்த குழறுபடிகளுக்கு இரண்டு முக்கிய காரணங்கள்.ஒன்று கல்மாடியின் ஊழல் நிர்வாகம்.இரண்டு டெல்லியின் முதலமைச்சர் ஷீலா தீக்சித்க்கு மாநிலப் பங்கீடின்மை. எனவே குழறுபடிகளின் நிலைகளில் இருவரும் வேறுபடுகிறார்கள்.எப்படியென்றால் கல்மாடியின் நிர்வாகத் திறமையின்மைக்குப் பின் ஊழல் விரிச்சாடுவது இடிந்த பாலம்,நடைபாதைப் பாலம்,புதிதாகக் கட்டிய பாத்ரூம்களின் வெத்திலைப் புகையிலை (புகையில என்று நினச்சிருப்பாரோ கல்மாடி)எச்சில் துப்பல்கள் என்ற இந்திய சுகாதாரம் போன்றவை அப்பட்டமாகக் காட்டுகின்றன.

2003 ம் ஆண்டிலிருந்து 7 வருடங்கள் எனும் போது இரண்டாவது முறை வருவதற்கு வாய்ப்பில்லை!சுருட்டுவதற்கு இதை விட்டால் வாய்ப்பில்லை என்று முதல் இன்னிங்ஸில் கணக்குப் போட்டிருப்பாரோ? நேற்று காமன்வெல்த் துவக்கவிழாவில் கல்மாடி பேசும் போது ஆடிட்டோரியம் முழுக்க பூ....பூ என்ற மக்களின் எதிர்ப்புச் சத்தத்தை மக்களின் மகிழ்ச்சி ஆரவாரக் குரல் என்று நினைத்திருப்பாரோ கல்மாடி? ஒரு சிறந்த பொருளாத நிபுணராக, ஆனால் முதுகெலும்பில்லாத பிரதமராக மக்களின் கல்மாடி எரிச்சல் குரல்  சத்தங்கள் என்பது  தெரிந்தோ அல்லது தெரியாமலே கல்மாடிப் பேச்சுக்கு கைதட்டுகிறார் மன்மோகன்சிங். பார்க்க சகிக்கவில்லை பிரதமரே!

விளையாட்டுக்கள் முடிந்த பின்னாவது கல்மாடிக்கு ஆப்பு காத்திருக்கிறதா என்று தெரியவில்லை.எப்படியோ மணி சங்கருக்கு அவல் மெல்ல சந்தர்ப்பம் கிடைச்சாச்சு கல்மாடி.இவரு கல்மாடியில்ல களவாடியின்னு அறிக்கை விடப்போறாரு பாருங்க.அதுவும் பத்தாம ஆப்புன்னா நாற்காலியும் புடுங்கப் போறாரு.இது என்னோட கணிப்பு.பார்க்கலாம் என்ன ஆகிறதென்று. இது  நடக்கலின்னா இதெல்லாம் அரசியலில் சகஜமப்பான்னு தோளில் துண்டைப் போட்டு போய்க்கிட்டே இருக்கவேண்டியதுதான்.

அடுத்து ஷீலா தீக்சித்! டெல்லியின் முதலமைச்சர் என்ற காரணம் கொண்டே இவரால் சுயமாக செயல்பட இயலாத நிலை.மத்திய அரசும்,மாநில அரசும் ஒரே இடத்தில் இருந்தும் நிர்வாகப் பங்கீடுகளுக்கான stream lining இல்லை.விளையாட்டுத்துறையோ கல்மாடியிடம்.டெல்லிக்கு வரும் அவப்பெயரோ முதல் அமைச்சருக்கு.மத்திய,மாநில அதிகாரப் பங்கீடு அரசியல் பனிப்போர்கள் கூட உலக அரங்கில் இந்தியா அவமானப்பட்டதற்கு காரணம் எனலாம்.இறுதி மூன்று தினங்களில் முதலமைச்சர் ஷீலா தீக்சித் பொறுப்பேற்றுக்கொண்டு ஓரளவுக்கு நிவர்த்தி செய்து விளையாட்டுப் போட்டிகளை துவங்கியிருக்கிறார்கள்.Let the game begin என்று சார்லஸ் சொல்வதற்கு பதில் இந்திய ஜனாதிபதி முந்திக்கொண்டார் என்ற கிசுகிசு வேறு கேள்விப்பட்டேன்.

எவ்வளவு ஓட்டம் ஓடியிருப்பேன்!தங்கமெல்லாம் கொண்டு வந்து இந்தியாவைப் பெருமைப்படுத்தினேன்.எனக்கு வெத்தலை பாக்கு வைக்கலியேன்னு பி.டி.உஷா அக்கா ஒரு பக்கம் புலம்பல்.உஷா அக்கா! டெல்லி முழுதும் சேட்டன்,சேச்சிகள் பீரோகிரசியில் இருந்தும் எப்படி கோட்டை விட்டாங்கன்னு தெரியலையே!எப்படியோ நீங்க புலம்பறது நியாயம்தான்.ஆனால் விளையாட்டில் சாதனை என்பதெல்லாம் இந்தியாவில் கடுகு மாதிரி கண்ணுக்குத் தெரியாது.விளையாட்டு முடிந்து மூணாவது நாள் துவங்கி மறுபடியும் மக்களின் கவனம் கிரிக்கெட்ல போயிடுமில்ல.

நான் என்னமோ எங்க பதிவு மக்கள்தான் என் பதிவை சுட்டுட்டாங்க,என் இடுகையை என்னைக் கேட்காமலேயே பத்திரிகைல போட்டுகிட்டாங்கன்னு இதுவரைக்கும் கேள்விப்பட்டிருக்கிறேன்.இப்ப bjc.com ன்னு கூகிள் அண்ணன்கிட்ட கேட்டா அவர் நேரா மன்மோகன்,சோனியா,ராகுல் காந்தி மூன்று பேர் படத்தைக் காண்பிச்சு அது இவங்க கடைதான்ன்னு சொல்றார்.பிஜேபிக்காரங்க கோவிச்சுகிட்டு காங்கிரஸ் மேல் கேஸ் போட்டிருக்காங்க.யோவ் உன்னோட கடைப்பேரு bjb.org ன்னு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அங்கே போய் பாருன்னு விரட்டுகிறார்.இவங்களே சைபர் கிரைம் செய்யறாங்க.இதுல பதிவுலக புள்ளப்பூச்சிகளையெல்லாம் சைபர் கிரைம்ல சேர்க்கனும்ன்னு பின்னூட்டம் போடறது நல்லதில்லை:)

இந்திய மக்களுக்கு சினிமா குஜாலாவுக்கும்,அரசியல் அடாவடிகளுக்கும் பஞ்சமேயில்லை போங்க!
 

ரஜனி சொன்ன ஜோக்

ரஜனி முகப்பூச்சு இல்லாமல் அவர் அவராகவே மைக்கின் முன் அமிதாப், ஐஸ்வர்யராய் கலந்துகொண்ட எந்திரன் பட விழாவில் ஏற்ற இறக்கங்களுடனான முகபாவனைகளுடன் சொன்னது அமர்ந்திருந்த அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.

ஒருவர்  ரஜனியிடம் வந்து இந்தியில் பேசி படத்தின் பெயரைக்கேட்டாராம்.ரஜனி படத்தின் பெயரை சொல்ல கதாநாயகி யார் என்று வந்தவர் கேட்க ஐஸ்வர்யராய் என்றாராம் ரஜனி.அடுத்து கதாநாயகன் யார் என்று ரஜனியிடமே கேட்கவும் தான்தான் கதாநாயகன் என்று சொல்லி சில வினாடிகள் தாமதத்திற்கு பிறகு ரஜனி தொடர்ந்தார்.

வந்தவர் ரஜனியைப் பார்த்துவிட்டு அமிதாப் பச்சனுக்கு என்ன ஆச்சு!,ஐஸ்வர்யராய்க்கும் என்ன ஆச்சு? என்று அருகில் இருந்தவரிடம் புலம்பினாராம்:) 

திரைப்படத்துக்கு வெளியே நடிக்காத ஒரே ஆள் ரஜனி என்று இயக்குநர் பாலசந்தர் ஒரு முறை ரஜனி பற்றிக் குறிப்பிட்டார்.கவியரசு வைரமுத்து அவர்களே!இது ரஜனியே சொன்ன நிகழ்ச்சி.எனவே அமிதாப்,போப் குட்டிக்கதையெல்லாம் இனிமேல் யார்கிட்டயும் சொல்லாதீங்க.

Jokes apart, ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயிப்பதற்கு முதல் நாள்,இரண்டு,மூன்றாம் நாட்களின் வசூல் கணக்கை சொல்லி விடுவது வழக்கம்.ரஜனி விசிறி ஒருவர் அவதார் வசூலை எந்திரன் மிஞ்சப்போகிறது பாருங்கள் என்று முகம் மலர்ந்தார்.அவதார் படத்தின் முதல் நாள் வசூலைக் கூட அறிவிச்சாங்க.ஆனால் எந்திரன் வசூல் பற்றி மூன்று நாள் ஆகியும் கணக்கு சொல்றதுக்கு  ஆள் இல்லை.உங்களுக்கு தெரியுமா?பட்டு!நீங்கள் சொல்லுங்களேன்!

எத்தனை பஞ்சாயத்து செய்தும் எந்திரன் காய்ச்சலை நிறுத்தவே முடியவில்லை.மெய் உலகத்துக்கும் மெய் நிகர் உலகத்துக்கும் வித்தியாசம் இருக்குதுன்னு இப்பவாவது புரியுதுங்க்ளாண்ணா:)

Saturday, October 2, 2010

எந்திரன் விமர்சனங்கள் எங்கே?

தாரை,தப்பட்டைகளோடு எந்திரன் திரை விமர்சனம் களை கட்டுமென்று பார்த்தால் இன்று படம் பார்த்து விட்டு வந்தும் பிரபல திரை விமர்சன பதிவர்களின் இடுகை ஒன்றும் கண்ணில் படவில்லை.டிக்கட் கிடைக்கவில்லையா என்ன? கட்டவுட் பாலாபிஷேகம், தரையில் சாப்பாடுன்னு களைகட்டுச்சே என்னாச்சு? தமிழகத்தில் போட்ட காசு வந்துமென்று நினைக்கிறேன்.இந்தி சத்தத்தையே காணோம்!

எப்படியோ தமிழக கோமாளித்தனங்கள் இல்லாமல் தமிழகத்திலிருந்து வரும் அதே ரசிகர் கூட்டம் பிரம்மச்சாரிகளின் கூட்டமாக,குடும்ப சகிதமாக ஹவுஸ்புல்லா ரொம்ப மெச்சூர்டா அமைதியா படம் பார்க்கிறது பார்க்க சந்தோசமாய் இருந்தது.ஆனால் இந்த அமைதியைக் குலைக்க திரையரங்கின் ஸ்டிரியோபோனிக் சத்தம் காதை கிழி கிழின்னு....

படம் துவங்கியதுமே Son pictures லோகோ வந்ததும் சன் தொலைக்காட்சி செய்தி வருகிற மாதிரி ஒரு உணர்வு.அதனைத் தொடர்ந்த ஆராய்ச்சிக்கூடம் என்னையறியாமல் தசாவதாரத்தின் ஆராய்ச்சிக்கூடத்தை நினைவு படுத்தியது.கூட கருணாஸ்,சந்தானத்தின் பித்துக்குளித்தனங்களும் அதனைத் தொடர்ந்த கதை நகர்வும் என்னமோ கோடிக்கணக்கில் காசு கொட்டினாங்கன்னு சொன்னாங்களே ஒரு எபக்டுமே இல்லையேன்னு தோன்ற வைத்தது.எந்திரனின் நகைச்சுவைக் காட்சிகள் மட்டுமே கதையை நகர்த்திச் செல்கின்றது.அப்புறம் குறிப்பிட்டுச் சொல்லும்படியா என்ன என்று இப்ப யோசித்தாலும் ரயில்,ஆராய்ச்சிக்கூட கிராபிக்ஸ்,பீட்டர் ஹெய்ன் ரயில் சண்டைன்னு கொஞ்சம் நினைவு வருது.சும்மாவே சாமியாடுற ரஜனி ரசிகர்களுக்கு கிராபிக்ஸ்தான் படைப்பாளி.
 
டோனி சொல்ற மாதிரி கதையே இனிமேல்தான்னு இடைவேளையில் சொல்வதால் சரி பார்க்கலாமேன்னு உட்கார்ந்தா இயந்திரமா இருக்கிற யந்திரனுக்கு உணர்ச்சிகள் கொடுக்கனுமுன்னு 1 டெராபைட் 2ஹெக்டாபைட், பைட் இயந்திரனுக்கு டாய்பிரண்டா இருந்து இப்ப பாய்பிரண்டாகனுமுன்னு ஐஸ்வர்யா மேல் காதல் வந்து விடுகிறது.காதல் என்ற நட்டு கழண்டுகிச்சுன்னா என்னாகுமென்று கதை நகர்கிறது.ஏ.ஆர் ரகுமானை இயர்போனை காதுல மாட்டிகிட்டு இன்னொரு முறை கேட்டாலே கருத்து சொல்ல முடியும்.

ரஜனிக்கு ரொமான்ஸை விட வில்லத்தனம் அல்வா மாதிரி வருகிறது.அதனை மூன்று முடிச்சு முதல் லகலகலக வரை நிரூபித்திருக்கிறார்.இதிலும் எந்திரன் வில்லனாகும் போது அசத்தல்.ஆனால் இங்கே திரையரங்கில் விசில் அடிக்க மட்டுமே ஆட்கள் இல்லை.கண்ணை கழட்டி வேறு கண் மாற்றுவது,காயம்பட்ட உடலை ரீமோல்டிங்க் செய்வது போன்றவை டெர்மினேட்டரை நினைவுபடுத்தியது.ஆங்கிலப்படங்களுக்கு கண்ணில் விளக்கெண்ணைய் இட்டு எந்தக்காட்சி எங்கே அசல் என்று துப்பறியும் பதிவர்களுக்கு இன்னும் சில ஆங்கிலப்படப் பெயர்கள் அகப்பட்டாலும் ஆச்சரியமில்லை.
 
க்ளைமாக்ஸ் எந்திரன்களின் சாகசம் இதுவரை இந்தியத் திரைப்படங்களிலே முதல்முறையாக என்ற வாக்கியத்தை உண்மை என்கிறது.ஆங்கிலப்படங்களுக்கு சவால் விடும் சிறு முயற்சியாகவாவது இதனை ஷங்கரை பாராட்ட வேண்டும்.கலாநிதி தயாரிப்பாளர் என்றதும் உலையிலே போட்ட பணம் என்று சிலர் முணுமுணுக்கலாம்.ஐங்கரனால் முடியாததை கலாநிதி வெற்றி வியாபாரமாக்கியிருக்கிறார்.எனவே இதன் நுண்ணரசியல்களில் எனக்கு ஈடுபாடு இல்லை.

ரஜனி! உடலை மெலிதாக வைத்திருக்கும் ரகசியத்தை மட்டும் என் காதுல போட்டீங்கன்னா கூட்டாளியாக வசதியாக இருக்குமில்ல!டாட்!

அயோத்தியா தீர்ப்பு விமர்சனம் எளிது!தீர்வுகள் கடினம்

மழை விட்டும் தூவானம் விடாத மாதிரி அயோத்தியா பற்றி இன்னுமொரு இடுகை எழுத வேண்டியதாகி விட்டது.தீர்ப்பு வந்தும் அதுபற்றிய விவாதம் பலவிதத்திலும் பல இடங்களில் நடக்கின்றன.தீர்ப்புக்கு முன்பான நாட்களில் யாராவது விவாதம் கிளப்புவார்களா என எதிர்பார்த்தேன்.ஆனால் யாரும் அப்படி தொட்டமாதிரி எனது கண்ணில் படவில்லை.ஒரு வேளை நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு வழக்கு பற்றி கருத்து சொல்வது தவறு என்று பலரும் தவிர்த்திருக்கலாம்.தீர்ப்புக்குப் பின்னும் யாரும் தீர்வுகளை சொல்வதாக காணோம்.மாறாக திட்டுக்கள் திட்டேறி சூடான பகுதியில் போய் உட்கார்ந்து கொள்கின்றன.

ஆனால் தீர்ப்பு வந்தும் தீர்ப்பு பற்றிய விமர்சனங்கள் மட்டுமே வெளிப்படுகிறதே ஒழிய தீர்ப்பு எப்படியிருந்தால் நன்றாக இருந்திருக்குமென பலரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக யாரும் விவாதிப்பதாக காணோம்.வழக்காடுபவர்கள் மத்தியில் தீர்வுகள் இல்லை என்கிற போதே நீதிமன்ற படிக்கட்டுகளும்,நீதிபதிகளின் தீர்ப்பும் தேவைப்படுகிறது.தீர்ப்புக்கு முன்பு தீர்ப்பு எப்படியிருந்தாலும் யாரும் கலவரம் செய்யக்கூடாது என்ற பலதரப்பட்ட குழுக்களின் கருத்துக்கள் நிறைவேறியிருப்பது மகிழ்ச்சிக்குரியது.

இந்திய நீதிமன்றங்களில் உயர்நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புக்களே பெரும்பாலும் உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்படுகின்றன.ஒரு சில விதிவிலக்குகள் இருக்க கூடும்.எனவே உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு என்ன வருகிறதோ என்று எதிர்பார்த்து அதனை ஏற்றுக்கொள்கிறோம் என இரு தரப்புமே கூறுகின்றன. உச்சநீதிமன்ற தீர்ப்பு குறைந்த பட்சம் இன்னும் 10 வருடங்களுக்கு நீடிக்கப்போகிறது.மக்களின் வாழ்க்கை மேம்பாடுகளை சிந்திக்காமல் இதுபோன்ற தேவையற்ற காலதாமதங்களை நாமே ஏற்படுத்தி விட்டு அப்புறம் திட்டவும்,கட்டைப்பஞ்சாயத்து என்று நொள்ளைகள் நிறையவே பேசக் கற்றுக்கொண்டிருக்கிறோம்.
 
தீர்ப்பு எப்படியிருந்தால் விமர்சிப்பவர்கள் மகிழ்வீர்கள்? இந்த சமயத்தில் சமீபத்தில் திண்ணையில் படித்த ஜெயகாந்தனின்  அக்கினி பிரவேசம் நேர்காணல் மட்டுமே நினைவுக்கு வருகிறது.கதையின் கதாநாயகியான கங்காவின் தாய் நீ அறியாமல் நேர்ந்த தவறுக்கு நீ பொறுப்பல்ல என்று இரண்டு செம்பு தண்ணீர் ஊற்றி விட்டு நீ கற்புள்ளவள் என்று ஜெயகாந்தன் கதையை முடிக்க எதிர் விமர்சனங்களை கண்டு கங்காவின் தாயின் தீர்ப்பு அப்படியில்லாமல் இருந்திருந்தால் எப்படியிருக்குமென்று சிலநேரங்களின் சிலமனிதர்கள் எழுதினார்.என்னய்யா!எதையோ பற்றி பேசும்போது புனைவைக் கொண்டு சொருகிறாயே என்று நினைக்காமல் இருக்க மீண்டும் தலைப்பின் சாரத்துக்கு தாண்டி விடுவோம்.
 
தற்போதைய தீர்ப்பாக இல்லாமல் மொத்த நிலமும் பாபர் மசூதிக் குழுவுக்கு சொந்தமென்றோ அல்லது இந்துத்வா குழுக்களுக்கு சொந்தமானது என்று சொல்வதற்கு சான்றுகள்,சாத்தியங்கள் இருக்கிறதா?இந்திய சட்டங்கள் சாட்சிகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன.அந்த விதத்தில் Title of deed க்கு சொந்தமானவர்கள் என்று ஏதாவது ஒரு குழுவாவது சாட்சிகளை முழுமையாக சமர்ப்பித்துள்ளார்களா என்றால் அதுவுமில்லை.அழிக்கப்பட்ட பாபர் மசூதி நமது கண்முன் உள்ள சாட்சியென்றாலும் ஒரு காலத்தில் அதுவும் வெளியுலக ஆக்கிரமிப்பின் அடையாளச் சின்னமென்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

நேற்றைய தீர்ப்புக்கு பின் இன்று முலாயம் சிங்க்,ப.சிதம்பரம்,மாயாவதி போன்றவர்கள் தீர்ப்பு பற்றிய திரியை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.வரும்நாட்களில் இன்னும் சிலர் நெருப்பு புகைய வைக்கவும் கூடும்.இவர்களது அறிக்கைகளுக்கு பின் தங்கள் சுயநலம் கலந்த அரசியல் நன்மைகள் கருதிய முலாம் பேச்சுக்கள் இருக்கிறது என்பதை அனைவரும் நினைவில் வையுங்கள்.அரசியல்வாதிகளின் கடிவாளம் ஓட்டுப்போடும் அந்தக் கணம் தவிர அரசியல்வாதிகள் எகிறித்திமிறும் குதிரைகளாகவே இருக்கிறார்கள்.இந்த சண்டிக்குதிரைகளை அடக்குவது எப்படி என்பதற்கான வழிகளை கண்டறிய வேண்டும்.இவர்களே இந்திய இறையாண்மைக்கும்,சகோதரத்துவத்துக்கும் முதல் இடையூறுகளாக இருக்கிறார்கள்.அரசியல்,மதம் சார்ந்த கலவையாக அயோத்தி ஆகிப்போனது துரதிஷ்டமானது.


உச்சநீதிமன்ற தீர்ப்பு எப்படியிருந்தால் நன்றாக இருக்குமென்று பின்னூட்டத்திலோ அல்லது அவரவர் கடைகளிலோ விவாதியுங்கள்.இல்லையென்றால் உயர்நீதி மன்ற தீர்ப்பை ஏற்று எதிர்காலம் நோக்கி நகருவோம்.


நான் சில நிகழ்வுகளை உலாகளாவிய அளவிலே பார்க்கிறேன்.மனித தவறுகளாக இந்துத்வாவின் பாபர் மசூதி இடிப்பு ஒரு வரலாற்று தவறு என்பதில் ஐயமில்லை.இதற்காக வருந்துவதற்கு இந்தியாவில் மனிதர்கள் மதசார்பின்மையற்ற மனிதர்கள் நிறைய இருக்கிறார்கள்.ஆனால் பல நூற்றாண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இருந்த புத்தர் சிலையையும்,இஸ்லாமிய வரலாற்று கலைப்பொருட்களையும் கூட இஸ்லாமிற்கு எதிரானது என அளித்து விட்டார்கள் மதப்பித்தர்கள்.Doesn't contradictory to a doctrine and  religious ethics? இதுபற்றியெல்லாம் மதம் சார்ந்து பேசுபவர்கள் யாரும் எதிர்ப்புக் குரல் கொடுத்த மாதிரி தெரியவில்லை.
 
நான் சொல்ல வருவதெல்லாம் எந்த மதத்தையும் பின் தள்ளி மனிதாபிமானத்தையும் மனிதகுலத்துக்கு நல்லதை மட்டுமே சிந்தியுங்கள்.

வளைகுடாக்களில் ஒரு மசூதி கூட மனிதனுக்கு பாதுகாப்பானதா இல்லையென்றால் இடித்துவிட்டு புதியதாக அதே இடத்திலோ அல்லது வேறு இடத்திலோ கட்டி விடுகிறார்கள்.மெக்கா,மதினா கூட ஆண்டாண்டு தோறும் பெருகும் கூட்டத்திற்கு ஏற்ப மக்கள் நலன் கருதி மேம்படுத்துகிறார்கள்

நாம் மட்டுமே கலைப்பொக்கிசம்,வரலாற்று சின்னம் என பாரம்பரியம் காக்கிறோம்.மனிதன் இறந்தால் கூட சிலையை எழுப்பி கொண்டாடவும்,உடைக்கவும் நாமே செய்கிறோம்.சவுதி அரேபியாவின் மன்னர் நம் ஊர் பாடை மாதிரி இரண்டு குச்சிகளில் துணி கட்டி எளிமையாக கொண்டு போய் அடக்கம் செய்தார்கள்.

தமிழக இஸ்லாமிய சகோதரர்களை வேண்டிக்கொள்வேன்.மதம் நம்பிக்கை மட்டுமே என்ற அளவில் மதத்தின் பின் செல்லாமல் மற்றவர்களுடன்  போட்டி போட்டு இந்திய உரிமைகளைப் பெறுவதற்கு தகுதியானவர்களாக கல்வியில் கவனம் செலுத்துங்கள்.கல்வி ஒன்றே உங்களை மேம்படுத்தவும், சமூகத்தில் ஒதுங்கிப் போனவர்களாக இல்லாமல் செய்யவும் துணை புரியும்.தொலைக்காட்சிகளில் நிறைய கூச்சல் ஒலிபெருக்கி சத்தங்களை காண்கிறேன். ஆனால் அவற்றுக்குள்ளும் பிரிவினைகளையும் காண்கிறேன்.இவற்றையெல்லாம் கடந்து வாருங்கள்.பலதரப்பட்ட கலாச்சாரங்களையும் உள்வாங்கிக் கொண்டு துபாய்,குவைத் போன்ற இஸ்லாமிய நாடுகள் எதிர்காலம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன.
 
திறமைகளை வளர்த்துக் கொண்டால் வெளிநாடு போவோர் மத்திய கிழக்கு நாடுகளில் உங்களுக்கென இடங்களைப் பிடிக்க முடியும்.இதுவரை ஒரு தலைமுறை சிறு வியாபாரிகளாக, ஹோட்டல் பணியாளர்களாக, அலுவலங்களில் தேநீர் பரிமாறுபவர்களாக, வாகன ஓட்டிகளாக,வீடுகளில் பணிபுரிபவர்களாக மட்டுமே அதிகம் காட்சியளிப்பதற்கு கல்வியில் கவனம் செலுத்தாமையும் எப்படியாவது வெளிநாடு போனால் போதும் என்ற திட்டமிடல் இன்மையே.உள்ளூருக்குள் உழன்று கொண்டிருக்கும் சகோதரர்களுக்கு மத மைக் ஒலி ஒரு வரப்பிரசாதம் மாதிரி.அரசியல் மைக் ஒலி பிரசாரத்தில் மயங்கி புத்தி தெளிந்தவர்கள்  இங்கே நிறைய உண்டு.இவற்றையெல்லாம் நினைவில் கொள்ளுங்கள் என்று வேண்டிக்கொள்வேன்.


உலகளாவிய அளவில் மிகவும் ஆச்சரியமான உலக அதிசயமான எகிப்து பிரமிடுகள் எகிப்தியர்களுக்கு எந்த பெருமிதத்தையும் தருவதில்லை.உடன் பணிபுரியும் ஒருவரிடம் கேட்டால் அது செத்தவர்களை புதைத்த இடம் என்கிறார்.ராமன், தாஜ்மஹால்,பாபர் மசூதி போன்றவை வரலாற்றுக் கதைகளே!கொண்டாடுவதற்கு அதுவே வாழ்க்கையல்ல சராசரி மனிதர்களான நமக்கு.  

Friday, October 1, 2010

அயோத்தி தீர்ப்பும் உலகளாவிய பார்வையும்

வரலாறு மட்டுமே பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. மனிதனின் வாழ்க்கைச் சக்கரமோ முன்னோக்கியே போய்கொண்டிருக்கிறது.ஆனாலும் இன்றைய நிகழ்வே நாளைய வரலாறு.மொகஞ்சோதாரா துவங்கி வரலாற்று சான்றுகள் இந்தியாவில் பல இருக்கும் போது ஒரு நாட்டை ஆண்ட தசரதனுக்கோ அதற்கு பின் பட்டாபிசேகம் சூடிக்கொண்ட ராமனுக்கோ இதிகாச ராமயாணம் என்ற myth தவிர எந்த ஒரு ஆதாரமும் இல்லாதது ஆச்சரியமே.

இருந்தாலும் பல மனிதர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் ராமர் பிறந்தது அயோத்தியே என்பதாலும் லக்னோ நீதிமன்ற தீர்ப்பு எதிர்காலத்தில் எந்த விதமான தாக்கங்களை யார் மூலம் எப்படி கொண்டு போகும் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று.அயோத்தி ராமர்,பாபர் தீர்ப்பு வரலாற்றை தன்னுள் தக்க வைத்துக்கொண்டு இந்தியாவின் எதிர்கால நல்லிணக்கத்தை நோக்கி நகர்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பு என்றே உணர்கிறேன்.ஆனால் இந்த நல்லிணக்கம் இருபக்க மத உணர்வாளர்களிடமிருந்தும் விடுபட்டு மதச்சார்பின்மையற்ற பெரும்பான்மை எதிர்கால இந்திய மக்களின் கரங்களில் உள்ளது.பெரிதாக hype செய்யப்பட்ட கலவரம் எதுவும் தற்போது வெடிக்காமை மகிழ்ச்சியை தருகிறது.அதற்கான காரணமாக இது வரை தீர்ப்புக்கு திரி வைக்காமையும்,அரசின் முன்னேற்பாட்டால் நாடு தழுவிய நடவடிக்கையும் என்பேன்.The government decision making and precaution has paid a dividend.

இன்றைய NTDVயில் அயோத்தி தீர்ப்பு குறித்த பல தரப்பு கருத்துக்களை பர்கா தத் பல பிரபங்களுடன் (வித் அக்தார்,இந்தியன் எக்ஸ்பிரஸ் குப்தா,ரவிசங்கர்,உமா பாரதி இன்னும் பலர் உட்பட)வழங்கிக்கொண்டிருந்தார். அதில் குப்தா குறிப்பிட்ட ஒன்று இந்தியாவில் தனக்கு பிடித்த இடம் காஞ்சிபுரமென்றும் அதற்கான காரணமாக காஞ்சி மடமும்,அதற்கும் பக்கத்தில் மசூதியும்,பஸ் நிலையத்துக்கருகில் பெரியார் சிலையும் அதன் கீழ் கடவுளை நம்புவன் முட்டாள் என்ற வாசகமும் என்றார்.

இந்திய,பாகிஸ்தானின் பிளவுக்கு காரணிகளான அடிப்படை மதவாதம் நாட்டை இருகூறாக்கியதற்கு பின்பு தற்கால இந்தியாவில் அதேபோன்ற ஒரு நிலை உருவாகிய பின் ஒரு நிலம் எப்படி பிரிக்கப்படும் என்பதை கண்கூடாக காண்கிறோம்.மண்ணாக ஒன்றாக ஒட்டியிருக்கும் நிலம் இனி மனிதன் போடும் கோட்டால் பிரிக்கப்படும்.ஆனால் தற்போதைய சூழலும் நீதிமன்ற தீர்ப்பும் இந்திய,பாகிஸ்தான் என்ற இரு நாடுகள் எப்படி உருவாகியிருக்கும் என்பதை சிந்திக்க வைக்கிறது.இந்தியாவுக்குள் பல பிரச்சினைகள் இருந்தாலும் it is matured enough to followup the long path of democracy.இதையே பாகிஸ்தானும் தொடர்ந்திருந்தால் பிரிந்திருந்தாலும் பிரச்சினைகள் உருவாவதற்கு சந்தர்ப்பங்கள் இல்லாமல் இருந்திருக்கும்.ஆனால் பாகிஸ்தான் மதம் என்ற கற்கள் நிறைந்த பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்டது.இதனைக்கடந்து பாகிஸ்தான் வரும்போது இருநாடுகளும் முன் செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.

அமெரிக்காவின் இரட்டைக் கோபுர நினைவுச் சின்னமும் இஸ்லாமிய தொழுகைச் சின்னமும் லக்னோ நீதிமன்ற தீர்ப்பைப்போல் அமெரிக்காவில் ஒரு நிலையை எடுப்பதற்கு இந்தியா ஒரு முன்வழிகாட்டி.இதனை அமெரிக்கா எதிர்காலத்தில் எப்படி கையாளப்போகிறது என்பதும் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று.

கிட்டத்தட்ட அயோத்தி மாதிரியான ஒரு நிலையை அதாவது myth Vs history என்ற நிலையில் யூதர்களின் கோயிலும்,பாலஸ்தீனியர்களின் மசூதியும் ஒரே இடத்திற்கு ஜெருசலமே எங்கள் தலைநகரம் என்று போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன.விரும்பியோ விரும்பாமலோ நிகழ்ந்த வரலாற்று கசப்புக்களை பின்னோக்கி வரலாற்றையே நோண்டி உயிர்ச்சேதம் உருவாக்காமல் அயோத்தி நீதிமன்ற தீர்ப்பின் வழியில் எதிர்காலத்தை கட்டி அமைப்பதே இஸ்ரேல்,பாலஸ்தீனியப் பிரச்சினை தீர்வுக்கு வழிவகுக்கும்.

இந்திய-பாகிஸ்தான், அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் எதிர்காலம், இஸ்ரேல்-பாலஸ்தீனிய பிரச்சினைக்கும் சற்றும் குறைவில்லாத வரலாற்று காயங்களை இலங்கை கொண்டிருக்கிறது.முந்தைய நாடுகள் எல்லாம் ஏதாவது ஒரு வழியில் தங்கள் பிரச்சினை தீர்வுக்கான நிலப்பங்கீடுக்கான சூழல்கள் இருக்கும் போது இனத்தால்,மொழியால் மாறுபட்டிருக்கும் இலங்கையை இரண்டாகப் பிரித்துக் கொடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?2.7 ஏக்கரே சமாதானாத்துக்கு பிரிக்கப்படும் போது இரு இனமும் சம உரிமையோடு தங்கள் கலாச்சாரப்படி வாழ இலங்கையைப் பிரிப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்?முன்பு ராமன் பின்பு பாபர் இருவருமே நூற்றாண்டுகள் கழித்து பங்காளிகளாகும் போது ஈழத்தமிழனும், சிங்களவனும் ஏன் பங்காளியாக முடியாது?வழிகள்?