Followers

Friday, November 26, 2010

நிஜமாகவே சமீபத்திய மறுமொழிகள்:)

டோண்டு பெரியவர் மேல இருக்குற கடுப்புல அவர் பக்கம் போவதேயில்லை.அப்படியும் தப்பி தவறி சில நல்ல தலைப்பை வைத்து விடுவதால் என்னதான் சொல்கிறாரென்று பார்த்ததில் கண்ணுல பட்டது என்னோட தலைப்பு:)

சிலேடை புரிந்தவர்கள் ஜமாய்ங்க மக்கா!நான் கொஞ்சம் சிரிச்சிட்டு வருகிறேன்:)

Thursday, November 25, 2010

எனது அரசியல் நிலைப்பாடு

சென்ற பதிவுக்கு நிறைய ஹிட் கணக்கு.கருத்து பரிமாறல்கள் தவிர நான் இவற்றில் அதிக ஆர்வமில்லாதவனாக இருந்தாலும் தற்போதைய இந்திய,தமிழக அரசியல் நிலை அனைவரையும் கவர்வதும்,பாதிப்பதும் மட்டும் இதிலிருந்து புரிகிறது.

முந்தைய பதிவு தந்த உற்சாகத்தால் இங்கே நொள்ளை அங்கே இல்லைன்னு ஒவ்வொரு கட்சிகளைப்பற்றியும் குறைகளாகவே சொல்லிகிட்டிருக்கிறதுக்கு பதிலாக எனது அரசியல் நிலைப்பாடு என்ன என்பதனையும் எவ்வாறு தமிழகத்தில் மாற்றங்களை கொண்டு வரலாம் என்றும் இங்கே பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன்.சில அடிப்படை தகுதிகள் நம்மிடம் இயல்பாகவே ஒளிந்து கொண்டிருக்கிறது.சிலவற்றை மாற்றிப்போட மக்களின் மனோபாவத்தை மாற்ற வேண்டியிருக்கிறது.

சிறுவனாக இருக்கும் போது மாறன் என்ற காங்கிரஸ்காரர் சிறுவர்கள் அனைவரையும் கூட்டி சுதந்திரதினத்தில் ஜனகனமன தேசியகீதம் பாடி கொடியேற்றி ரோஜா மலர்கள் தலையில் விழ வந்தே மாதரம் சொல்லிய பின் கிடைக்கும் மிட்டாயோ,சுதந்திர தினத்தில் கிடைக்கும் புதுச்சட்டை,டிரவுசர் அணிந்த மகிழ்ச்சியோ,கொடியின் மூவர்ணமோ மனதளவில் நான் காங்கிரஸ்காரனாகவே மாறிப்போனேன்.காங்கிரஸ் பற்றிய மதிப்பீடும் இதுவரை அப்படியேதான் அடிமனதில் நிற்கின்றது.

தி.மு.கவுக்கு மாற்று இல்லையென்ற நிலையில் கோவை வீதிகளில் நிகழும் அரசியல் கூட்டங்களில் அனல் பறக்கும் உச்சரிப்பும் தமிழும் இயல்பாகவே தி.மு.கவின் பால் இழுத்தது.எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா என்ற வசீகரகங்கள் என்னை ஏனோ அரசியலில் இதுவரை வசீகரிக்கவில்லை.இப்பொழுது ஓரளவுக்கு எம்.ஜி.ஆரின் மறுபக்கம் புரிகிறது.மேலும் அரசியலின் பலபக்கங்களையும்,சுயநலங்களையும் எனக்கு தோலுரித்துக்காட்டியது இணைய தொடர்பும் ஈழப்போரின் அவலங்களும் என்பேன்.

ஒரு புறம் அ.தி.மு.க என்ற ஆணவத் தலைமை,இன்னொரு புறம் குடும்ப அரசியல் என்ற தி.மு.க இரண்டுக்குமிடையில் தமிழ் இனத்துக்கு துரோகம் விளைவித்த காங்கிரஸ் என்ற பக்கவாத்தியம் என்ற மூன்று பரிமாணங்களில் தமிழகம் சிக்கி தவிக்கிறது.இவர்களுடன் கூட்டு சேர என ஜாதிக்கட்சிகள் ,சினிமா கவர்ச்சியென சிறு கிரியா ஊக்கிகளும் கூட.இந்த நிலைக்குள்ளேயே தமிழர்களின் மனமும் சுழன்று வருகின்றன.பணம்,குற்றவியல் பங்கீடு, ஜாதி,ஊழல்,சினிமா போன்ற காரணிகளே ஒரு கட்சியின் முக்கிய தகுதியாக இருக்கிறது.அனைத்துக்கட்சிக்குள்ளும் தொண்டர்கள்,துணை தலைவர்கள் என நல்லவர்களும் இருக்ககூடும்.ஆனால் கட்சியென்ற கூட்டுக்குள் இவர்கள் அனைவருமே தனது சுயங்களை இழந்து விடுகிறார்களென்றே நினைக்கிறேன்.
 
எனக்கு கம்யூனிஸ்ட்களின் கொள்கைப்பிடிப்பு,போராட்ட குணம்,உழைக்கும் வர்க்கத்துக்கு குரல் கொடுக்கும் துணிவு பிடித்திருக்கிறது.ஆனால் சீன,ரஷ்ய சித்தாந்தங்கள் என்ற பக்கசார்புகள், யதார்த்தமான பொருளாதார நிலை,கேரள,கல்கத்தா மாநிலங்களின் வளர்ச்சியின்மை கம்யூனிசம் மீது அவநம்பிக்கையை உருவாக்குகிறது.இருந்தும் சென்ற தலைமுறையின் நல்லக்கண்ணு,கேரள கம்யூனிஸ்ட்களில் சிலர் புது சித்தாந்தங்கள் உருவாகுவதற்கு நல்ல காரணிகள்.

ஒவ்வொரு தனிமனிதனும் கட்சி சார்பு என்ற நிலையிலிருந்து விடுபடவேண்டும்.இவற்றுக்கெல்லாம் மாற்றாக டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி தமிழகத்தில் மாற்றாக வந்திருக்க வேண்டியவர்.நவீன தமிழக அரசியலில் அவரால் சாதிக்காமலே போய்விட்டது தமிழகத்துக்கு பேரிழப்பே.தமிழக அரசியலை நெம்புகோலிட்டு மாற்ற வேண்டுமென்றால் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியைப் போன்றவர்களை முக்கியமாக தமிழகத்துக்குள்ளேயும் தேவைப்பட்டால் உலகளாவிய அளவிலும் தேடிக்கண்டு பிடிப்பது அவசியம்.

நமது அரசுத்துறைப் பணியாளர்களில் திறன் படைத்தவர்களை கண்டு பிடித்து முன்னிறுத்த வேண்டும்.உதாரணத்துக்கு உமாசங்கர்.

கல்லூரி மாணவர்கள் காவல்துறை, சட்டம்,மருத்துவம், என்ஞியரிங், விவசாயம்,விஞ்ஞானம்,ஐ.ஐ.டி,எம்.ஐ.டி இன்னும் பல துறைகளிலுருந்தும் தகுதியானவர்களை அரசியலுக்கு கொண்டு வரவேண்டும்.

தவறுகளுக்கு தண்டனை நிச்சயம் என்ற பயம் வேண்டும்.ஒரு காவல்துறையை சார்ந்த பெண்மணி ஒரு கடையில் கையூட்டு வாங்கி வீடியோ எடுத்த ஊழல் தடை அதிகாரியின் காலைப்பிடித்து கெஞ்சுவதை யூடியுப்பில் பார்த்தேன்.துறை சார்ந்த மூத்த அதிகாரி வந்து வீடியோ எடுத்தவருடன் சண்டை போட்டார்.இந்த நிலைகள் மாறவேண்டும்.

வழக்காடு மன்றங்களின் தீர்ப்புக்கள் துரிதப்படுத்த வேண்டும்.

எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காத சமூக ஆர்வலர்களை உள்ளிட்டுக்கொள்ள வேண்டும்

திராவிடன்,பார்ப்பனன்,இஸ்லாமிய வேற்றுமையை அழிக்கவேண்டும்.இந்திய எல்லையைக்கடந்தால் இவை வெறும் வார்த்தைகள் என்ற புரிதல் இப்பொழுது எனக்கிருக்கிறது.

பெரியாரியல்,மதம் இரண்டும் ஒவ்வொரு மனிதனின் தனி சுதந்திரம்.இவையிரண்டும் அரசியலில் கலக்ககூடாது.

வாரிசு அரசியல் இருக்கக்கூடாது.இருக்கும் வாரி அரசியல்கள் ஓரங்கட்டப்பட வேண்டும்.இதன் காரணம், அழகிரி மகனின் திருமணத்தில் அழகிரியின் பாடல்,உடை போன்றவை மனுசன் Happy goes lucky ங்கிற மாதிரிதான் தெரிகிறார்.இவருக்கு ஏன் அஞ்சாநெஞ்சன் என்ற மாய பிம்பங்கள் எல்லாம் என்று எனக்கு வியப்பாகவே இருக்கிறது.முதலமைச்சரின் மகன் என்ற ஒரே தகுதியால் மட்டுமே மத்திய அரசின் கேபினட் பதவி போன்றவை கலைஞர் கருணாநிதியின் சுயநலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா,ஆந்திராக்காரர்களுடன் நட்புறவு பாராட்டவேண்டும்.Conflict of interest வரும்போது பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டும்.மனம் அகலும் போது கேரள,கர்நாடக,ஆந்திர,தமிழக மக்களின் குணநலன்களில் என்னால் வித்தியாசம் காண இயலவில்லை.

கல்வி,மருத்துவம்,வீடு,நல்ல சாலைகள்,மின்சாரம் போன்றவை அடிப்படை தேவையும் உரிமையும் கூட

இணைய பயன்பாடு அனைவரையும் போய்ச்சேர வேண்டும்.

அடிப்படை பொருளாதார தேவைகள் நிறைவேற்றப்படவேண்டும்-அதற்கான காலகட்டங்களில் பொருளாதாரத்தில் நாம் சீனாவுடன் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறோம்.இவை இன்னும் சாத்தியமே.

விவசாயிகள் முன்னிறுத்தப்படவேண்டும். விவசாயம் மேம்படுத்த வேண்டும்.அடிப்படையில் நாம் விவசாய நாடு என்ற உணர்வே தென்னக மாநிலங்களை எந்த உலக மாற்றங்களிலிருந்தும் நிரந்தரமாக வாழவைக்கும்.

கடல் என்பது தமிழகத்தின் மிகப்பெரிய பொருளாதார வளம்.இதனை மேம்படுத்த வேண்டும்.

ஈழத்தமிழர்களின் எதிர்காலமென்பது இந்திய,தமிழகத்தின் எதிர்காலமும் கூட என்ற அகன்ற பார்வை நமக்கு தேவை.ராஜபக்சேக்கள் இல்லாது போகும் போது ஈழத்தமிழர்களுக்கு சம உரிமை வாழ்வுக்கு வழிவகுக்க வேண்டும்.இதுவே இலங்கைக்கும்,இந்திய அரசியலுக்கும்  முக்கியமாக தமிழகத்தின் எதிர்காலத்திற்கும் நல்லது.

நடக்கிற காரியமான்னு சந்தேகங்களுக்கு அண்ணன் மார்டின் லூதர் கிங்கை துணைக்கு அழைக்கிறேன்.

அமெரிக்க சரித்திரத்தைப் புரட்டிப்போட்ட மார்டின் லூதர் கிங்க் மாதிரி நானும் கனவு காண்கிறேன்.

I say to you today, my friends, that in spite of the difficulties and frustrations of the moment, I still have a dream - Martin Luther King

 (எனது நண்பர்களே! இன்றைக்கு சொல்லிக்கொள்கிறேன்,கடினம்,ஏமாற்றமான தருணத்தில் என்னிடத்தில் இன்னும் ஒரு கனவு இருக்கிற்து.)

Wednesday, November 24, 2010

தி.மு.கவுக்கும் காங்கிரசுக்கும் முட்டிகிச்சு

ராஜ் தொலைகாட்சி தலைப்பு செய்தி.

கூட்டணியில் சேர்ந்திருப்பது தேவையில்லையென்றால் யோசிக்க தயாராக இருக்கிறோம் .கருணாநிதி பரபரப்பு பேச்சு!


கூட்டணியில் சேர்ந்திருக்க விரும்பவில்லையென்றால் வழி விடுங்கள்.
சேர்ந்திருக்கவே விரும்புகிறோம்,வேண்டாமென்றால் அதற்கும் தயார்.

 ஸ்டாலின் தலைமையில் தமிழக வேளாண் கருத்தரங்கத்தில் பேசும்போதே இதனை தெரிவித்தார்.
.

காங்கிரஸின் மைக் இளங்கோவன் எவ்வளவு நாட்களாக  மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசின் திட்டங்களென தி.மு.க அரசு பரசாற்றிக்கொள்கிறது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்?இதனை சாக்காக வைத்து முதல்வர் கருணாநிதி நேரம் பார்த்து கல்லெறிகிறார்.சகுனம் பார்க்கிறதென்பது இதுதான்.

என்னமோ போங்க! இரண்டு பேரும் நல்லாயிருந்தா சரி:).

Tuesday, November 23, 2010

விக்கிபீடியாவின் கடிதம்.

வலது கரம் ஈவதை இடது கரம் அறியாதிருப்பதாக என்பது இயேசு கிறுஸ்துவின் வாக்கு.சில நேரங்களில் நாலு பேருக்கு நல்லதுன்னா இடது கரமும் அறியட்டுமென சுயபுராண சொரிதல் இல்லாமல் விக்கிபீடியாவின் கடிதம் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.அமெரிக்க வாழ் சகோதர,சகோதரிகளுக்கு வரி காரணங்களுக்கு இது போன்ற தனிக் கடிதம் உதவக்கூடும்.இந்தியாவில் .........அவரவர் பார்வைக்கும் விமர்சனத்துக்கும் விட்டு விடுகிறேன்.இனி கடிதத்தின் சாரம்.


Dear MR.NATARAJAN,

Thank you for your gift of USD .... to the Wikimedia Foundation, received on November 23, 2010. I’m very grateful for your support.
Your donation celebrates everything Wikipedia and its sister sites stand for: the power of information to help people live better lives, and the importance of sharing, freedom, learning and discovery. Thank you so much for helping to keep these projects freely available for their nearly 400 million monthly readers around the world.

Your money supports technology and people. The Wikimedia Foundation develops and improves the technology behind Wikipedia and nine other projects, and sustains the infrastructure that keeps them up and running. The Foundation has a staff of about fifty, which provides technical, administrative, legal and outreach support for the global community of volunteers who write and edit Wikipedia.
Many people love Wikipedia, but a surprising number don't know it's run by a non-profit. Please help us spread the word by telling a few of your friends.

And again, thank you for supporting free knowledge.

Sincerely Yours,


Sue Gardner
Executive Director

* To donate: http://donate.wikimedia.org
* To visit our Blog: http://blog.wikimedia.org
* To follow us on Twitter: http://twitter.com/wikimedia
* To follow us on Facebook: http://www.facebook.com/wikipedia


This letter can serve as a record for tax purposes. No goods or
services were provided, in whole or in part, for this contribution.
The Wikimedia Foundation, Inc. is a non-profit charitable corporation
with 501(c)(3) tax exempt status in the United States. Our address is 149 New Montgomery, 3rd Floor, San Francisco, CA, 94105. Tax-exempt number: 20-0049703

விக்கிபீடியாவுக்கு உதவுங்கள்.

நாட்டுச் சரக்குகள் உண்மைத்தமிழன்,செந்தில்,வானம்பாடிகள் பாலா இன்னும் பல முன்னணி பதிவிகள்,பதிவர்கள் போல அல்லாது நானும் ரவுடிதான் என்று காட்டிக்கொள்வதற்காக வேண்டியாவது பாதிக்கும் சில நிகழ்வுகளைப்பற்றி பதிவு போட வேண்டுமென்று நினைக்கும் போது உதவிக்கு வருவது பெரும்பாலான நேரங்களில் விக்கிபீடியா தளமே என்று போலிஸ் ஜீப்பில் ஏறி நின்று உறக்க சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.(குறிப்புகள் மட்டுமே விக்கி போன்றவர்களுக்கு சொந்தம்,எழுத்து நடை,மண்டைக்குள் முன்பே சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டவை மற்றும் சரக்கு கலக்கல்,வார்த்தை அலங்காரம் எல்லாம் சொந்த சரக்கே:))

எந்தவிதமான லாப நோக்குமில்லாமல் அறிவு சார்ந்த விசயங்களை பகிர்ந்து கொள்ளவேண்டுமென்றஒரே அடிப்படையில் உருவான் தளம்.அமெரிக்காவின் பொருளாதார தட்டுப்பாடு வங்கிகள்,உலகப் பொருளாதாரத்தில் பின்னடைவு என்று துவங்கி விக்கிபீடியா போன்ற நல்ல நிறுவனங்களையும் பாதிக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

விக்கிபீடியா தனது சேவையை மேலும் தொடர அனைவரின் பொருளாதார உதவியை நாடுகிறது.முடிந்தால் உதவுங்கள்.உதவ முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் உங்கள் தளத்தில் விக்கிபீடியா விட்ஜெட்டாவது ஒட்ட வைத்துக்கொள்ளலாம்.விக்கிபீடியாவுக்கு உதவி என்ற இடுகை பார்த்த என்னைப்போன்றவர்களில் சிலரது உதவிகளாவது போய் சேரட்டும்.

 Support Wikipedia

நல்லவைகளுக்கு நாடு,நிறம்,எல்லைகள் இல்லை.





 

சித்தார்த்த சங்கர் ரேயின் நினைவுகளிலிருந்து

நவம்பர் 6ம் தேதி மறைந்த இந்திராகாந்தியின் நண்பரும் காங்கிரஸ்காரருமான சித்தார்த்த சங்கர் ரேக்கு சமர்ப்பணம் இந்த பதிவு.
எனக்கு தெரிந்த மிசா காலங்கள் எல்லாம் தமிழ் பத்திரிகைகளில் அரசல் புரசலாக படித்த ஸ்டாலின் ஜெயிலுக்குப் போனாரு,கண்ணப்பன் காரு ஓட்டினாரு போன்றவைகளே:)நேற்றைய மேய்ச்சலில் பின்னூட்டமிட்டபின் பின் வாசகர் பரிந்துரையிலும் வந்த பதிவர் ரஹீம் கஸாலி எழுதிய அதென்ன மிசா அல்லது எமெர்ஜென்சி  என்ற தலைப்பே முதல் முறையாக மிசா காலத்தைப் பற்றி ஓரளவுக்கு புரிந்து கொள்ள உதவியாக இருந்தது. இப்பொழுது எல்லோரின் அவுட்லுக்கின் பார்வையும் எங்கேயென்று சொல்லத்தேவையில்லை.ஆனால் அவுட்லுக்கில் என்னைக்கவர்ந்தது சித்தார்த்த சங்கர் ரேயின் நினைவுகள் பற்றி டோலா மித்ரா என்பவர் எழுதியது.முழுமையான ஆங்கில மூலத்துக்கு இங்கே செல்லவும்.என்னைக் கவர்ந்த சில பகுதிகளை மட்டும் தமிழாக்கம் செய்கிறேன்.

இந்திராவும் நானும்:
(இந்திராவும் சித்தார்த்தாவும் இளம் வயது முதல் குடும்ப நண்பர்கள் என்ற சிறுகுறிப்புடன் இனி...)

21 டிசம்பர் 1980: அன்பின் சித்தார்த்தா!உன்னுடைய குதுகலப்படுத்தும் வார்த்தைகள் நரை அல்லது கண் வளையங்களை(Wrinkles)நிறுத்தாது.உலகம் வருத்தப்படக்கூடிய நிலையில் இருக்கிறது.மனிதன்,எல்லா சந்தர்ப்பங்கள் இருந்தும் முன்நோக்கி பார்க்கிறான் ஆனால் இடறி கீழே விழுகிறான்.நான் இப்பொழுதுதான் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தியை பார்த்து வந்தேன்.85ம் வயதிலும் வயதானவர் என்று நம்பமுடியாத தோற்றம் ஆனால் மனிதத்தின் அவரது பார்வை நம்பிக்கையிழக்கச் செய்கின்றன.
Allied Powers: Siddhartha Shankar Ray with Indira Gandhi in New Delhi, 1972
Reminiscences
The Wind Has Followed Us

இந்திரா காந்தியும் சஞ்சயும்:

இந்திராவை நான் குழந்தைபருவம் முதல் அறிவேன்.ஆனால் எங்கள் வாழ்க்கை முழுவதுமான நட்பு மிசா(Emergency) காரணமாகவும்,சஞ்சயின் தலையீட்டாலும் களங்கத்தை உருவாக்கியது.இது பற்றி இந்திரா பலமுறை தனது இயலாமையை புலம்பியிருக்கிறார்.அவர் பலமுறை அழுதுருக்கிறார்.அவர் அடிக்கடி என்னிடம் “சித்தார்த்தா!என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இந்தப் பையனை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன்?” நான் ஆலோசனைகள் சொன்னாலும் சஞ்சய் சொல்வதையே இறுதியாக கேட்பார்.சஞ்சய் மீது அவர் பயம் கொண்டவ என்றே சந்தேகப்படுகிறேன்.சஞ்சயைப் போல் அல்லாது ரஜிவ் காந்தி மிகவும் நல்ல திறமையானவர்.இவரே என்னை பஞ்சாபின் ஆளுநராக ஆலோசனை கூறினார்.அவரது மரணம் எனக்கு பேரிழப்பாகும்.அவருக்கு பின் காங்கிரஸ் தலையில்லாமல் போனது.சோனியாவைப் பொறுத்த வரையில் காங்கிரஸ் மாதிரி ஒரு அமைப்பை நடத்துவதற்கு மிகவும் புத்திசாலியாகவே இருக்க வேண்டும்.
 
விருப்பமில்லாத அரசியல் சட்டமைப்பு வழக்கறிஞராக

எனது சட்டவியல் பயிற்சி நான் சட்டமைப்பு வழக்கறிஞராகவே அறிமுகப்படுத்துகிறது.ஆனால் அந்த எண்ணத்தில் சட்டவியலை ஆரம்பிக்கவில்லை.இந்திய சட்டமைப்பு உருவாகும்போது நான் சட்டக்கல்லூரி மாணவனாக இருந்தேன்.வெறுமனே பரிட்சையில் வெல்ல வேண்டுமென்பதற்கு மேல் எனது குறிக்கோள் எதுவுமில்லாததாக இருந்தது. தத்துவமும்,பொருளாதாரமும் எனக்கு ஈடுபாடில்லை.ஆங்கிலத்தையும் பெங்காலி இலக்கியத்தையும் அதிகம் விரும்பினேன்.ரபீந்தரரின் பாடல்கள் என்னை மயக்கியது.எனக்கு கிரிக்கெட் மிகவும் விருப்பம்.எனது சட்டப்பயிற்சி காலத்திலேயே அரசியல் சட்டத்தின் நுணுக்கங்களையும் சட்டப் பிரச்சினைகளையும் புதிய ஜனநாயகத்தில் எதிர்கொள்ள வேண்டியதை உணர ஆரம்பித்தேன்.அரசியலமைப்பின் சிந்தாந்தங்கள் என்னை கவர்ந்ததை விட சமூக சிக்கல்களை தீர்ப்பதை விரும்பினேன்.சட்டங்களைப் பொறுத்தவரையில் யதார்த்தவாதியாகவே இருந்தேன்.

முக்தி பாகினிக்கு கிடைத்த தன்னம்பிக்கையும் ஆதரவும்:
(முக்தி பாகினி என்பது பெங்களாதேஷ் என்ற தனி நாடு உருவாவதற்கு காரணமான விடுதலைப்புலிகள் போன்ற தனிநாடு கோரிக்கை போராளிகள் அமைப்பு.தற்போதைய பெங்களாதேஷ் 1971க்கும் முன்பான காலகட்டத்தில் கிழக்கு பாகிஸ்தான் என்றே அழைக்கப்பட்டது.)

1971ல் பெங்களாதேஷ்க்கும் முன்னால் இந்திரா காந்தி என்னிடம் சொன்னது டெல்லியிலிருந்து பெங்காலி பேசும் மந்திரி ஒருவர் உற்சாகமும் தைரியத்தையும் தரும் பேச்சு பெங்களாதேஷ் முக்தி பாகினிக்கு (Liberation rmy)பெரிய தன்னம்பிக்கையாக இருக்கும்.நீங்கள் வெற்றி பெற்றால் இதுபற்றி யாருக்கும் தெரியாது அதேபோல் இது தோல்வியடைந்தாலும் உங்களை யாரும் குற்றம் சுமத்த மாட்டார்கள்.
 
இதன் அர்த்தம் இந்த பயணம் அதிகார பூர்வமானதல்ல.நிச்சயமாக இதை நான் புரிந்துகொண்டேன்.அப்பொழுதெல்லாம் சுதந்திர இயக்கங்களின் உலக சட்டங்கள் அவ்வளவு தெளிவானதாக இல்லை.நிச்சயமாக இந்தியாவும் ஏனைய நாடுகளின் தனி நாடு கோரிக்கைகளுக்கு நேரடியாக ஆதரவு தர விரும்பவில்லை.இந்த முடிவை அவர் சுயமாகவே எடுத்தாரா அல்லது யாராவது ஆலோசனையின் பேரில் எடுத்தாரா என்று நான் ஒருபோதும் அவரிடம் கேட்டதில்லை.
 
 
(1971, Pakistan Surrenders: Ray was CM of Bengal during the birth of Bangladesh. (Photograph by Corbis, From Outlook, November 29, 2010)
 
நான் கிழக்கு பாகிஸ்தானுக்கு சென்றதில் எனது பாதுகாப்பில் மிகவும் கவலைப்பட்ட நண்பர் ஒருவரின் கூட்டம் நிறைந்த வீட்டில் தங்கியதும் அடங்கும்.அடுத்து கிழக்கு வங்காளத்தின் அடர்ந்த காடுகளின் இரண்டு மணி நேரத்துக்குப் பின் அமர் சோனர் பெங்களா (பெங்களா நாடு எங்களுடையது) என்று பாடிய ஆயிரம் போராளிகள் என்னை வரவேவற்றார்கள்.நான் கண்ணீரோடு அதனை உணர்ந்தேன்.

ஜோதிபாசுவும் ஏனைய கம்யூனிஸ்ட் தோழர்களும்.

ஜோதிபாசுவும் நானும் அரசியல் எதிராளிகளாக இருந்தாலும் நல்ல நண்பர்களாக இருந்தோம்.அரசியலில் நாங்கள் சண்டை போட்டோம்.எதிர்வாதம் செய்தோம்.1962ல் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு ஜோதி அமைதியாக இருந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.அது தீவிரமான ஆதரவாக இருந்தது.ஜோதி விஸ்கியை மிகவும் விரும்பினார்.பொதுமக்கள் முன் அவர் சிரித்தது மிகவும் குறைவே ஆனால் அவர் மிகவும் நகைச்சுவை உணர்வுடையவர்.நாங்கள் பல நினைவுகளை பகிர்ந்துகொண்டோம்.

ஒருமுறை நானும் ஜோதியும் சந்தன்நகர் பிரச்சாரத்திற்காக செல்லும்போது அழகிய பெண்களின் குழுவொன்று எங்களை சூழ்ந்துகொண்டு எங்களிடம் ஆட்டோகிராப் கையெழுத்து கேட்டார்கள்.என்னை விட ஜோதி மேல் மட்டுமே அவர்கள் அதிக ஆர்வமாக இருந்ததுடன் என்னிடம் ஒரு கையெழுத்து வாங்கியதுடன் விட்டு விட்டார்கள்.ஆனால் ஜோதியிடம் பெங்காலியில் சில வார்த்தைகளாவது எழுதி தரவேண்டுமென்று வற்புறுத்தினார்கள்.ஆனால் ஜோதி மறுத்துவிட்டார்.பின் நாங்கள் கல்கத்தாவுக்கு காரில் போகும்போது சில வரிகளை பெங்காலியில் எழுத ஏன் மறுத்துவிட்டாய் என ஜோதியிடம் கேட்டேன்.உடனே ஜோதி என்னிடம் “Arrey, parley toh likhbo ”(பெங்காலியில் எழுத தெரிந்திருந்தால் எழுதியிருப்பேன்).

மேலும் சோம்நாத் சட்டர்ஜியிடம் சில நகைச்சுவையான நிகழ்வுகளை காணக்கிடைத்தது.இவர் ஒரு அருமையான வழக்கறிஞர்,ஆனால் அரசியலில் சேர்ந்து வீணாகிப்போனார்.கல்கத்தா உயர்நீதிமன்றத்தில்  ஒருவருக்கு ஆதரவாக நான் சோம்நாத் சட்டர்ஜியுடன் எதிர் விவாதம் செய்த நினைவு வருகிறது.நான் நீதிபதியிடம்”யுவர் ஹானர்!மதிப்புக்குரிய எதிர் தரப்பு வக்கீலின் வாதங்கள் மிகவும் தீவிர நம்பிக்கையுடையதாக இருக்கிறது” என்ற பொருளில்(Your honour, my respected opponent’s arguments are bullish.”) உடனே சோம்நாத் சட்டர்ஜி நீதிபதியிடம் ‘நீதிபதி அவர்களே1மதிப்புக்குரிய எதிர் தரப்பாளர் நான் அசிங்கமாக இருப்பதால் என்னை மாடுமாதிரி என்கிறார்.(“Your honour, my respected opponent is calling me a bull because I am ugly.”)

ஏனைய கம்யூனிஸ்ட்களில் நிதியமைச்சர் ஆசிம் தேஷ்குப்தா படித்தவராக திறன் வாய்ந்தவராக உணர்கிறேன். இவர் MIT படித்தவர்.ஆனால் தவறான கட்சியில் இருக்கிறார்.அடுத்து புத்ததேப்பட்டாச்சார்யா ஒரு நல்ல மனிதர்.நேர்மையானவர்.ஆனால் முதல் மந்திரிக்கான தகுதி இவரிடமில்லை. இவர் பதவி விலகவேண்டும்.  
---------------------------------------------------------------------------------------
இந்திரா காந்தியின் மறைவுக்குப்பிறகு இந்தியாவின் பாதை பலவிதங்களிலும் தடம் புரண்டு விட்டதும் காங்கிரஸ் தனது பாதையிலிருந்து எவ்வாறு மாற்று வழியில் நடந்து திணறுகிறதென்பதும் பதிவுகள்,நிகழ்வுகள் மூலம் கண்கூடாக காண்கிறோம்.இருந்தும் இந்திய ஜனநாயகத்தின் வேர் அனைத்து புயல்களையும் கடந்து இன்னும் வளரும் எனபது மட்டும் உறுதி.

Democracy is not a good system but there is no other alternative either to compete-எங்கோ கேட்டது.




Friday, November 19, 2010

ஆங் சான் சூ கியின் நேர்காணல்

சென்ற பதிவில் திசநாயகம் பற்றி பதிவிட்டதும் உறங்கும் போது ஆங் சான் சூ கியின் பி.பி.சியின் ஜான் சாம்சனுடனான நேர்காணலை சென்ற வாரம் கண்டும் குறிப்பிட மறந்துவிட்டோமே என்ற உறுத்தல் இருந்தது.இன்று  திசநாயகம் பின்னூட்டத்தில் ரதி அவர்களின் பின்னூட்டம் கண்டதும் பதிவிட்டு விடவேண்டுமென்று இணையத்தில் தேடிக் கண்டு பிடித்ததில் ஆங்க் சான் சூ கியின் சென்ற வாரம் கண்ட நேர்காணல் கிடைத்தது.

வெறுமனே குளிர் அறையில் உட்கார்ந்து கொண்டு நேர்காணல் காண்பதும், பதிவு எழுதுவதும் எளிது என்ற சில விமர்சனங்களுக்கு மாறாக பி.பி.சியின் ஜான் சாம்சன் உலகின் பலபகுதிகளின் போர்முனைகள், உரிமைக்குரல்கள், கலவரங்கள் என்று பல இடங்களுக்கும் உயர்ந்த கட்டிங்களையும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை மட்டும் உலகின் முன் காட்டும் பீஜிங்க் நகரத்திற்கும் அப்பால் சீனாவின் குறுநகர் சார்ந்த சாதாரண சீன மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும் கூட வீடியோ சகிதம் நேர்காணல் காண்பவர்.எனக்கு பிடித்த ஊடகவியளாளர்களில் ஒருவர் ஜான் சாம்சன்.

இரண்டாம் உலகப்போரின் காலகட்ட சுபாஷ் சந்திர போஸ்,ஆசியாவின் உலகப்போரின் பங்களிப்பு,பினாங்கில் வியாபாரம் மற்றும் போரினால் மக்கள் வெளியேற்றம் என்று தற்கால பர்மிய மியான்மரின் வரலாற்றை துவக்கலாம்.ஒரு புறம் சீனா மறுபுறம் இந்தியா என்ற நிலையில் பூகோள ரீதியாக காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை போன்று பர்மாவும் கூடவே தனது சுதந்திர சிறகுகளை விரித்திரிக்க வேண்டியது.மாறாக சூ கியின் அப்பா ஆங்க் சான் 1947ன் காலகட்டத்தில் ராணுவப் படுகொலையால் மரணிக்க பர்மா ராணுவ ஆட்சிக்குள் புகுந்து கொண்டு உலகம் மறந்து விட்ட ஒரு இருண்ட பகுதியாகவே இதுவரை மியான்மர் காட்சியளித்தது.

 இன்னும் பர்மாவின் நதிமூலமெல்லாம் தேடினால் அசோகரின் புத்தமதம், பொன்னியின் செல்வன் கதைக்கள சோழர்களின் ஆட்சியில் பௌத்தம் என்று கதை நீளும்.ரஷ்யாவின் கம்யூனிச வீழ்ச்சிக்குப்பின் 1990களில் இந்தியா சோசலிஷத்திற்கு வணக்கம் சொல்லிவிட்டு திறந்த பொருளாதாரக் கொள்கைகளை கைகொண்ட காலகட்டத்தில் துவங்குகிறது ஆங்க் சான் சூயின் அரசியல் பிரவேசம்.அப்பா ஆங்க் சான் பர்மாவின் ராணுவத்தை அமைத்து பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து பர்மாவை மீட்டவர்,அம்மா கின் கீ இந்தியா, நேபாள் போன்ற நாடுகளின் பர்மாவுக்கான தூதுவர் போன்ற நிலையில் வளர்க்கப்பட்டவர் ஆங்க் சான் சூ கி.

இவர் அரசியலுக்குள் கால்வைப்பதற்கும் முன்பான இரண்டு ஆண்டுகளில்(1988) ஜுண்டா என்ற ராணுவ அமைப்பு உருவாகிறது.இவரது அரசியல் பிரவேசத்தை விரும்பாத ஜுண்டா ஆங்க் சான் சூ கீயை நாட்டை விட்டு வெளியேற வற்புத்துகிறது.இதனை நம்ம வீராங்கனை மறுக்க சுருக்கமாக சொன்னால் இந்த ராணுவ அமைப்புக்கும் பர்மாவில் ஜனநாயகம் பரவவேண்டுமென்ற ஆங்க் சான் சூயின் சுதந்திர வேட்கைக்குமிடையேயான போரில் ஆங்க் சான் சூயை வீட்டுக்காவலாக கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் சிறையில் அடைத்ததும் இப்போது ஜுண்டா ராணுவம் ஒப்புக்கு சப்பாணியா தேர்தல் நிகழ்த்திய பின் ஆங்க் சான் சூயை விடுதலை செய்ததுமே இடுகையின் சுருக்கம்.

நோபல் பரிசு பெற்ற ஆங்க் கி சான் கீ தனது குடும்பத்தவர்கள், கட்சி ஆதரவாளர்கள்,உலக பத்திரிகையாளர்கள் என யாரையும் பார்க்க மறுக்கப்பட்டு கம்பி தொலைபேசி கைபேசியாக மாற்றம் பெற்றதும் கூட ஆங்க் சான் சூ கியின் பார்வையில் கண்களை அகல ஆச்சரியப்படுத்தும் செய்தி.சாம்சனுடனான அவரது நேர்காணல் இங்கே உங்கள் பார்வைக்கு.

Thursday, November 18, 2010

திசநாயகம் நேர்காணல்

 எல்லைகள் இல்லா ஊடகவியளாளர்கள் அமைப்பு திசநாயகம் விடுதலை அடைந்ததற்கு பின்பான முதல் நேர்காணலை வெளியிட்டிருக்கிறது.

ஊடக சுதந்திரம் வளர எல்லைகள் இல்லா ஊடகவியளாளர்கள் அமைப்பின் பணி பாராட்டுக்குரியது.

 Man is born Free but everywhere he is chained - ரூசோ

சாவையும் அடக்குமுறைகளையும் கடந்து வந்த திசநாயகத்திற்கு வாழ்த்துக்கள்.
திசநாயகத்தின் நேர்காணல் இங்கே

Wednesday, November 17, 2010

ஊழல் , லஞ்சம் மூலக்கூறுகள்

ஊழலின் மூலக்கூறுகள் என்னவென்று பார்க்கும் முயற்சியாக இந்த படைப்பு.

இந்தியாவில் மிகவும் தெரிந்த கண்ணுக்கு தெரிந்த ஆனால் யாரும் அலட்டிக்கொள்ளாத மூலப்பொருள் லஞ்சம் என்ற சொல்.

ஊழலின் காரணங்கள் எது? லஞ்சத்தை எப்படி பிரிக்கலாம்?

லஞ்சம் என்பது அரசு இயந்திரம் சரியாக இயங்காத காரணத்தால் தனி மனிதனை மற்றும் மொத்த சமூகத்தை பாதிக்கும் ஒன்று.இதில் மிகவும் பாதிக்கப்படுபவர்கள்  சாதாரண மக்களே.

ஊழல் எப்படி ஏற்படுகின்றது?

அரசு அமைப்பில் இருப்பவர்கள் தமது சொந்த நலன்களுக்காக பதவியை உபயோகிப்பது

நிறுவனங்கள் விலை,டெண்டர் போன்றவைகளை நிர்ணயிக்க கையூட்டு தருவது
வாகன ஓட்டிகள் அதிக வேகத்தில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக போலீசுக்கு பணம் தருவது மட்டும் கேட்பது, விமான நிலையத்தில் சுங்கவரி அதிகாரிகள் கையூட்டு கேட்பது போன்றவை.அரசு நிறுவனங்களில் தனிமனிதனுக்கு அரசியல் சட்டப்படி சேரவேண்டிய உரிமைகள்,தேவைகளை பூர்த்தி செய்ய கையூட்டு வாங்குவது.

அரசியல் கட்சிகள் வெற்றி பெறுவதற்காக இலவசங்களாக உணவு,பயண செலவு,பணம்,சாராயம் என அள்ளி தருவது. 
இவைகள் நிகழ்வதற்கு காரணங்கள்.

அரசு கட்டமைப்பின் செயல்களில் வெளிப்படையான ஒளிவு மறைவு இன்மை (Tranaparency)

ஒரு செயலின் நன்மை,தீமைகளுக்கான பொறுப்பு (Accountability)

(உதாரணமாக திட்டங்களை அரசு  அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தலையைக் குடைந்து செயல்பட்டால் தலிவர்கள் ரிப்பன் வெட்டி பெயரை தட்டிக்கொண்டு போவதும் அதோடு கூட நாற்காலியில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு அதே அரசு அதிகாரிகள் தூண்டுகோலாக அமைவதும் )

சமுதாயத்தின் ஊழலின் வகைகள்

லஞ்சம் (bribe) - அரசு ஊழியருக்கு தனது தேவையை பூர்த்தி செய்து கொள்ள பணம் தருவது.

வன்முறை (Nepotisim) - கட்டை பஞ்சாயத்து வில்லன்கள் மூலம் பணம் கொடுத்து அடியாள் மூலம் ஏற்படும் கொலைக்குற்றங்கள்.

சார்பு நிலைகள்(Favoritism)  - கட்சி,நண்பர்கள்,சொந்தக்காரர்கள்,தெரிந்தவர்கள் என பக்கசார்பாக செயல்படுவது.

ஊழல் (Curruption) - அரசாங்க கட்டமைப்புக்களை பல்வேறு ஆவணப்படுத்தல் குளறுபடிகள் மூலம் ஏமாற்றுவது

திருட்டு  (Fraud)- அரசாங்க பணம் மற்றும் சொத்துக்களை திருடுவது

அரசு அலுவலகங்களின் ஊழல் (Administrative curruption) - அரசாங்க கொள்கைகள் மற்றும் சட்டங்களை திரிப்பதும் மாற்றுவதும்.உதாரணமாக ஒரு டெண்டர் அல்லது அரசு ஆவணத்தில் தகுதியில்லாதவர்கள் பெயரை சேர்ப்பதும் சட்டத்திற்கு புறம்பாக கையெழுத்திடுவதும்.

அரசியல் கட்சிகளின் ஊழல் (Political curruption) -  சட்டம்,நீதி,ஒழுங்கு மற்றும் கொள்கைகளை (ஸ்விஸ் வங்கி கணக்கில் பணம் சேர்க்க) மாற்றியமைப்பதும் தமக்கு தேவையானவர்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வதும்.

ஊழலின் விளைவுகள்

நீங்கள் நேரடியாக ஊழலில் ஈடுபடாவிட்டாலும்  ஊழல் உங்கள் வாழ்க்கையை பாதிக்கிறது.முதலாவதாக ஊழல் உங்கள் வாழ்க்கை தரத்தை குறைக்கிறது காரணம் ஊழல் கட்டமைப்பில் வணிகம் செய்வதற்கான சூழலையும் பொருளாதார நம்பிக்கையையும் குறைக்கிறது

ஊழல் இல்லாத அல்லது குறைந்த நாடுகளை விட ஒரு தனிமனிதனின் சராசரி வருமானம் மூன்று மடங்கு குறைவாக இருக்கிறது.

இதன் காரணமாக ஒரு அரசு ஊழியருக்கான மாத வருமானம் அரசாங்கத்தால் தருவது குறைவதோடு அரசின் வாங்கும் திறனும் குறைகிறது.அதன் காரணமாக நாட்டின் வளர்ச்சிக்கு பங்கீடு செய்யும் திட்டங்கள் குறைகின்றன.

இதன் விளைவு பள்ளி,மருத்துவம்,நல்ல சாலைகள்,கழிவுகளை அகற்றும் முனிசிபல் திட்டங்கள்,காவல்துறைகள் போன்ற முக்கியமான தேவைகள் ஏனைய வளர்ச்சியடைந்த நாடுகளை விட குறைந்து காணப்படும்.

இதனோடு தனிமனித குணநலன்களின் கூட சமுதாயத்தினாலேயே கட்டமைக்கப்படுகின்றன.தனிமனித குணநலன்கள் நேர் அல்லது எதிராக மாறுவதைப் பொருத்தே ஊழலின் அளவு குறைவதும் வளர்வதும்

மேலும் குழந்தைகள் கருத்தரிப்பில் அல்லது பிறந்தவுடன் இறப்பு மற்றும் படித்தவர்களின் விகிதாச்சாரம் போன்ற பக்கவிளைவுகளை உருவாக்கும்

இதோடு கூட ஊழல் பணம் வைத்திருப்போர் மற்றும் அவரோடு சார்ந்திருப்பவர்களை சட்டத்தை வளைக்கவும் அரசியல் சட்டங்கள் அவர்களுக்கு ஏதுவானதாகவும் இருக்க உதவி செய்யும்.

விளைநிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காத அளவுக்கு ஊழலின் ஆக்கிரமிப்பு நமக்கு கண்ணுக்கு தெரியாமலே செயல்படும்.

ஊழல் சமூக சூழலை பாதிப்பதோடு அரசாங்கம் சரியாக செயல்படாத நிலைக்கு தள்ளப்படுவதால் அரசு மீதான நம்பிக்கையை குறைக்கும்.

டிஸ்கி: மேலே சொன்ன உலகவங்கி  தியரிகள் அத்தனையும் ஊழல் கொண்ட எந்த ஒரு நாட்டுக்கும் பொருந்தும்.இந்தியா இதில் அடக்கமா?ஜெய் ஹோ!



படங்கள் உதவி: உலக வங்கி மற்றும் கூகிளண்ணன்

Tuesday, November 16, 2010

ஸ்பெக்ட்ரம் கோபிகிருஷ்ணன்

ஸ்பெக்ட்ரம் குறித்த தகவல்கள்,கருத்து பரிமாற்றங்கள் என பிரபல பத்திரிகைகள் மற்றும் பதிவுகள் அடக்கி வாசிக்க போபர்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்த என்.ராம் கூட இலங்கையுடன் சோரம் போய்விட ஸ்பெக்ட்ரம் குறித்த செய்தியையும் கூட இருட்டடிப்பு செய்து இங்கே 
(The article you are looking for is no longer available in this website. ) என்று சொல்லி விடும் அளவுக்கு சுயபரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது இந்து பத்திரிகை.

இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் புலன்விசாரணையின் பரிசை டெய்லி பயனீர் தளம் தட்டிக்கொண்டு போகிறது.டெய்லி பயனீர் தளத்தின் கொச்சின் பிரிவின் நின்று போன பயனிரிலிருந்து டெல்லிக்கு வேலை தேடிப்போய் உதவித் தொகை வருமானத்துடன் தனது பத்திரிகை நிருபர் தொழிலை துவங்கிய கோபிகிருஷ்ணனின் அயராத உழைப்பால் ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிவந்திருக்கிறது.கோபிகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
முழுப்பூசனிக்காயை தலித் என்ற சாயம் பூசி திசை திருப்பும் கருணாநிதி,வீரமணிகளை நினைத்தால் எரிச்சல் மட்டுமே மிஞ்சுகிறது.கூடவே ஜெயலலிதா,சுப்ரமணி சாமிகளின் அரசியல் பித்தலாட்டங்கள் ஸ்பெக்ட்ரம் குறித்த அவர்களது குரல்கள் அவர்களின் சொற்களுக்கான நம்பிக்கைத்தன்மையை சந்தேகிக்க வைக்கவும் நீ யோக்கியமா என்று எதிர்க்கேள்வியை கேட்டு வெட்கபட வைக்கவும் செய்கின்றன..தமிழக மக்களுக்கு ஸ்பெக்ட்ரம் குறித்த செய்திகள் போய்ச் சேர்வதில் அனைத்து தமிழக ஊடகங்களும் மலடாகிப் போய் இருக்கும் நிலையில் டெய்லி பயனீர் இணையம் மற்றும் பதிவர்களின் பங்களிப்பே மாற்றத்துக்கான நம்பிக்கையையும் உண்மைகளை வெளிக்கொண்டு வர உதவும்.

ஸ்பெக்ட்ரத்தின் அணுவைக் கண்டுபிடிக்க இயலாதவாறு பெரும் வலைப்பின்னலை ராஜா பின்னியிருக்கிறார்.ஆனால் இது ஒரு தனிமனிதனால் சாத்தியமான ஒன்றல்ல என்பதோடு ஊழலின் நலன்கள் பெரும் நெட்வொர்க் வலையத்தில் கண்டு பிடிக்க இயலாத ஒன்றாக அனுமான் வாலாக நீளும்.மன்னர்கள் தொட்டு,அரேபிய படையெடுப்பு,ஐரோப்பியர் வருகை,சோசியலிஷ முக்காடு,ஜனநாயகமென இந்தியாவின் வளம் சுரண்டப்படுவது மட்டும் தொடர்கதையாக தொடர்கிறது.போபர்ஷ் துவங்கி ஸ்பெக்ட்ரம் வரை காங்கிரஸ் ஆட்சியில் மட்டும் ஊழல் தொடர்வதன் காரணமென்ன?Mr.Clean.மன்மோகனுக்கு முன்னாடியே ஒரு கொட்டு வாங்கியும் என்ன சொல்லி பித்தம் தெளிவிப்பதென தெரியவில்லை.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.

பதிவை ஒரு பார்வை பார்த்துவிட்டு கீழ்கண்ட சுட்டிகளில் அதிகம் கவனம் செலுத்துங்கள்.

1. இங்கே

2. இங்கே

3, இங்கே

4. இங்கே

5. இங்கே

6. இங்கே

Thursday, November 11, 2010

ம்ம்ம்

இதென்ன

விக்கலா
கிக்கலா
முக்கலா
முனகலா
மொரப்பா
இனிப்பா
காரமா
தாகமா
பயமா
வீரமா
கோபமா
காதலா
வடிவேலா
நசரேயா
யாதொன்றுமறியேன் பராபரமே