Followers

Thursday, June 16, 2011

ஈழ மக்களுக்கும் மண்ணுக்கும் தமிழர்களின் பங்கு - பகுதி 4

இதுவரை சொல்லப்பட்ட முந்தைய பதிவுகள் முன்னுரை மாதிரியே .இந்த பதிவிலிருந்து மட்டுமே தலைப்பின்  பொருளுக்கு தகுந்த படி  முக்கியமான தீர்வுக்கும் ஈழ மக்களின் வாழ்வுக்கு தமிழர்களின் பங்கு அமைந்துள்ளது.பிரபாகரனையும், விடுதலைப்புலிகளையும் கடந்தும் ஈழ மக்கள் சிலோன் தமிழர்கள் என இரண்டாம் தர குடிமக்களாக பாகுபாடான சிங்கள ஆட்சி முறை நிகழ்ந்தது என்பதை தந்தை செல்வாவின் ஆவண அறிக்கை நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் விட்டுச் சென்றதையும், சகாப்த கால விடுதலை இயக்கங்களின் பின்னடைவுகள்,விடுதலைப்புலிகள் குறித்த பார்வை, பிரபாகரனின் ஆளுமைகள் குறித்து பார்த்தோம். விடுதலைப்புலிகளுக்கு தீவிர வாத முத்திரை குத்தப்பட்ட காலம் இலங்கை ராணுவத்தின் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகளோடு முற்றுப் பெறுகிறது என்பதை சேனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப் பதிவு உலகத்திற்கு உரக்கச் சொல்கிறது

சென்ற பதிவின் இனப்படுகொலைகளின் ஆவணம்,ஆறாத காயத்தை ஏற்படுத்தியிருந்த போதிலும் காலம் மட்டுமே குணப்படுத்தும் வலிமையுடையது என்பதை இரண்டாம் உலகப்போரின் நாகசாகி,ஹிரோசிமா அழிவுக்குப் பின்னும் இதோ இப்பொதைய சுனாமி சீற்றத்திற்கு பின்னும் கூட ஜப்பான் அமைதியாக தன்னைக் கட்டி எழுப்பிக்கொண்டிருக்கிறதென்ற உண்மையும்,பிரிவினைக்குப் பின்பும் இந்தியா பாகிஸ்தான் இருநாடுகள் சுதந்திரமாக வாழ்கின்றன என்பதும்,பெங்களாதேஷ் உருவாக்கப்பட்டு தனி நாடாக செயல்படுவதும்,தைமூரும்,சமீபத்திய தென் சூடான் நாட்டின் ஐ.நாவின் அங்கீகாரமும் போன்றவை தமிழீழம் என்ற சொல்லை நினைவாக்குதலுக்கும் முன் உதாரணங்கள்.மக்கள் முன்னிலைப்படுத்துதல் ஒன்றால் மட்டுமே இதனை உருவாக்க முடியும். 

ஆக்கபூர்வமாய் சிந்திப்பதும்,தீர்வுகளுக்கான சாத்தியங்களை முன் வைப்பது மட்டுமே வடகிழக்கு தமிழ் மக்களுக்கு தன்னம்பிக்கையை விதைக்கும்..ஜனநாயகமாகவும்,ஆயுதப் போராட்டமாகவும் பல நிலைகளை கடந்து வந்துள்ள நிலையில் இப்பொழுதே சமூகம் சார்ந்து மக்கள் குரலோடு சாத்வீகமாக போராடும் தகுதியை ஈழ மண் பெற்றுள்ளது.துவண்டு போகலாமா?இப்போது இருக்கும் நிலையிலேயே பயணித்து முடித்து விடலாமா என்பது நமது முன் நிற்கும் கேள்வி.

வலுவற்ற மக்களையும்,கூட்டமைப்பையும் வலுப்படுத்துதல்
முதலாவதாக மக்களின் நலனையும், அவர்களது குரலையும் முன்னிலைப் படுத்துவோம்.உடனடித் திட்டங்களாக வட,கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் தமிழர்களுக்கு இந்து,கிறுஸ்து,முஸ்லீம் என பாகுபாடில்லாமல் உதவிக்கரம் நீட்டுவது.துயரங்களின் இறுக்கமில்லாமல் மூச்சு விடும் நிலையேற்படும்போது மட்டுமே சுதந்திரத்திற்கான எண்ணம் இயல்பாய் வளரும்.இங்கே மக்கள் என்பவர்களாக ஈழ மண்ணின் மைந்தர்களையும், அவர்களை சார்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பையும்,இன்ன பிற   ஒன்றிணைந்த இலங்கை சார்பாளர்களும்,இஸ்லாமிய தமிழர்களும் என மொத்த தமிழ் பேசும் மக்களும் அடங்குவர்.இதில் எதிரும்,புதிருமான குரல்கள் ஒலிக்கவே செய்யும்.ஆனால் சுதந்திரம் சார்ந்த மக்கள் குரலை எப்படி உரக்க கேட்க வைப்பது என்பதில் மாற்றுக்குரல்கள் சிந்திக்கும் மாற்றம் செய்வதோ அல்லது அமுங்க செய்வதில் மட்டுமே தமிழீழத்தின் பாதை அமைந்திருக்கிறது.

பொருளாதார உதவிகளும் தார்மீக ஆதரவும்.
 தற்போதைய தமிழக அரசியல் மாற்றங்களின் அடிப்படையில் வட,கிழக்கு மக்களுடன் தொடர்பு கொள்ளும் நேரடி வாய்ப்புக்கள் உருவாக வேண்டும்.அதற்கு எந்த விதமான ராணுவ அனுமதியோ தடைகளோ இல்லாத நிலை வேண்டும்.எந்த விதமான உதவியும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் மத்திய அரசு மூலமாக செல்வதும் பொருளாதார உதவிகள் தமிழ் மக்களுக்குப் போய்ச் சேருகிறதா என்ற மேற்பார்வை அமைப்பு இல்லாமலே இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் அதன் நலன்கள் சார்ந்த பார்வையிலேயே இது வரை போய்ச் சேருகின்றன.தமிழக அரசு மூலமாகவும் இன்னும் அரசு சாரா அமைப்புக்கள் மற்றும் தனி மனித உதவிகள் அனைத்தும் நேரடியாக தமிழ் மக்களுக்கு அதிகார பூர்வமான தமிழ் கூட்டமைப்புக்கள் மூலமும்,தனி மனிதர்களிடமும் போய்ச் சேர்வதற்கு வழி வகைகள் செய்ய வேண்டும்.

பாலஸ்தீனியப் போராட்டமும்,மக்கள் வாழ்க்கையும் இதுவரை உயிர்ப்புடன் இருப்பதற்கான முக்கிய காரணம் வளைகுடாவிலிருந்து பெறும் பொருளாதார உதவிகளினால்தான்.யூதர்கள் வெற்றி பெற்றதின் பின்ணணியில் வலுவான பொருளாதாரம் இருக்கிறது.குஜராத் பூகம்பத்திற்கு உதவுவது மனிதாபிமான அடிப்படையில் என்றால் இனப்படுகொலையாலும்,போராலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதும் மனித நேயம்தான்.ஆயுதங்களுக்கு உதவியதை விட அரவணைப்புக்கு உதவுவது மிகவும் தேவையான ஒன்று.
 
நம்பகத்தன்மையும்,வெளிப்படையும்,பொறுப்புக்களும்
Reliability,Transparency,accountability என்று சொல்லப்படும் வெளிப்படத்தன்மை, பொருளாதார செலவீனங்களுக்கான பொறுப்பு என்பவைகளுக்கு மேற்பார்வையென்ற நிலையில் மட்டுமே மக்களுக்கான உதவிகள் செல்வதையும் தடம் புரளாமல் தடுக்கவும் இயலும்.புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் தமிழக தமிழர்களால் இதனை இலங்கை அரசு என்ற இயந்திரத்தின் அனுமதியோடு ஆனால் தமிழர்களின் கட்டுப்பாட்டில் என்ற நிபந்தனையோடு முன்வைப்பதும் இதனை இலங்கை அரசு எப்படி ஆதரிக்கிறது அல்லது எதிர்க்கிறது என்பதில் இலங்கையின் உண்மை முகமோ அல்லது முகமூடியோ தெரிந்து விடுவது நமக்கு இருவிதத்திலும் நன்மையே.உதவிக்கரம் நீட்டுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள்.ஆனால் இது மக்களுக்குப் போய்ச் சேருவதற்கு உத்தரவாதமென்ன என்பதே தொக்கி நிற்கும் கேள்வி.முந்தைய பதிவின் குமரன் பத்மநாதனின் பொருளாதார உதவி பார்முலா நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று.கூண்டுக்கிளியாய்,அரசு காவலில் இருப்பதாலே கே.பியின் செயல்கள் நம்பிக்கையற்றுப் போவதுடன் எந்த முன்னெடுப்பும் இலங்கை அரசு தேர்ந்தெடுத்த முடிவின் முன் முகமாக மட்டுமே கே.பி செயல்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.எனவே தமிழக அரசு சார்ந்தோ அல்லது நாடுகடந்த தமிழீழ அரசின் அங்கீகாரத்தாலோ இலங்கை அரசு செயல்பட முன்வருகிறதா என்பதை முன் வைக்கும் போது இலங்கை அரசின் உள் முக கொள்கை என்ன என்பது தெரிந்து விடும்.

உலகமயமாக்கலில் தமிழர்களின் வியாபார தொடர்புகள்:
உலகமயமாக்கலில் joint venture எனும் வியாபார தொடர்புகளை தமிழர்களுக்குள் வலுப்படுத்தலாம்.இதன் மூலம் தமிழர்களால் தமிழர்களுக்கு என்ற கோட்பாட்டில் தமிழகம்,புலம்பெயர்ந்தவர்கள்,வட,கிழக்கு மக்கள் என அனைவரும் வளம் பெருவதற்கு வாய்ப்புக்கள் இருக்கிறது.திருநெல்வேலி அண்ணாச்சிகள் உழைப்புக்கும்,வியாபார ரீதியான முன்னேற்றத்திற்குமான அடையாளங்கள்.

சுயநிர்ணய வாக்கெடுப்பு
ஒன்றிணைந்த இலங்கையா அல்லது தமிழீழ அரசா என்பதனை ஐ.நா.அறிக்கையின் அடிப்படையில் வாக்கெடுப்பு நிகழும் சாத்தியங்களை உருவாக்குவது.இதில் வாக்குரிமை கொண்டவர்களாக மண்ணிலும், புலத்திலும் வாழ்பவர்களின் கருத்தாக வாக்குகள் கேட்பது.

ஒன்றிணைந்த இலங்கையெனும் பட்சத்தில் பெரும்பாலான நாடுகள் தற்போதைய சூழலில்,முக்கியமாக இந்தியா தனது நலன் கருதி தனது ஆதரவை தர முன் வரக்கூடும்.மக்கள் குரலைப் பொறுத்து இந்த நிலை மாறுவதற்கும் சாத்தியங்கள் உண்டு.

தமிழீழத்தின் தேவைகள்
இப்பொழுது பார்க்கும் பொழுது இயலாத கடினமான எழுத்து பூர்வமான சிந்தனை மாதிரியே தோன்றினாலும் இங்கிலாந்தின் உள் கட்டமைப்பு சட்டங்களை உள்வாங்கிக்கொண்டு சுதந்திர இந்தியாவிற்காய் எழுதிய அரசியலமைப்பு இன்று வரை உயிர்ப்போடு இருக்கிறது.அது போலவே ஆயுதப்போராட்ட காலத்தில் தமிழீழ சிந்தனையோடு முன்பே உருவாக்கப்பட்ட சட்டம்,ராணுவம்,காவல்துறை,நீதித்துறை,பொருளாதாரம்,ஊடகம்,உள் கட்டமைப்புக்கள் ஒன்றும் புதிய முயற்சிகள் அல்ல.முந்தைய பதிவுகளில் குறிப்பிட்ட சாசன மாதிரிகளும்,இன்னும் நிறையவே  அரசியல் சாசன உருவாக்கம் எளிதானதே.மக்கள் குரல் மட்டுமே இதனை நிறைவேற்றும்.

இனி முக்கிய பகுதிகளாய் நாடு கடந்த அரசு,விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கவேண்டிய அவசியம்,பத்திரிகை,தொலைக்காட்சி ஊடகங்களின் ஆதரவு,தமிழக அரசியல் ஆதரவு,இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்ற வேண்டியதன் தேவை,உலக நாடுகளின் பார்வை,மனித உரிமைக்குழுக்களின் ஆதரவு,நேர்,எதிர் சிந்தனைகள் மற்றும் விரக்தி நிலைகளை மாற்ற வேண்டிய தேவை,மக்கள் சக்தியின் விழிப்புணர்வு போன்றவற்றை  அடுத்த பதிவில் காணலாம்.


2 comments:

http://thavaru.blogspot.com/ said...

ராஜ நட தங்களுடைய பதிவை படித்தவுடன் சின்னதாய் ஓர் அயர்ச்சி ஏற்ப்பட்டது உண்மை ஏனென்றால் ஒரு கூட்டு குடும்பத்தை நடத்தவே நல்ல தலைமை அவசியம். அவ்வாறு இருந்தும் முரண்பட்ட ஒரு குடும்பநபரினால் உடைந்த குடும்பங்கள் எத்தனையோ....

அதுபோல் ஈழ விசயத்தில் தப்பிப்பிழைத்தவர்கள் தனி ஆதாயம் தேடவும் நிறையவே உண்டு.

இவர்களையெல்லாம் ஒதுக்கி உண்மையாக தம்மக்களுக்கு செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் செய்யலாம் செயல்படமுடியாது என்ற நிலையில் உள்ளவர்களின் உதவியை சரியாய் கொண்டு சேர்ப்பது இதெல்லாம் நடைமுறைப்படுத்துவது என்பது எந்தளவிற்கு...

விடுதலைபுலிகள் திரும்பவும் உயிர்பித்துவிடுவார்களோ என்கிற பயம் இலங்கைக்கு இருப்பதனால் தான் தமிழர்களை முகாம்களுக்குள் தொடர்வதைக்கு ஆளாக்கி வருகி்ன்றனர்.

ராஜ நடராஜன் said...

தவறு!சென்ற பின்னூட்டத்தில் ஒற்றை வரியில் நீங்கள் சொன்னதற்கு நிறையவே சொல்லியிருந்தேன்.இந்தப் பின்னூட்டத்திற்கும் அப்பாலும் அடுத்த பகுதியை தீர்வுக்கு வழிகள் கிடைக்குமா என சொல்லியிருக்கிறேன்.கூடவே எதிர்சிந்தனை,விரக்திகள் பற்றியெல்லாம் கூட தொட்டிருக்கிறேன்.இந்த பாரத்தை நாம் சுமந்தே தீரவேண்டும்.வலிக்கிறதே என்று கீழே தள்ளி விட்டால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை எதிர்கால சந்ததி ந்ம்மை மன்னிக்காது.

அரசியல் ரீதியாகவும்,மக்கள் விழிப்புணர்வுடனும் இதனை முன்னெடுத்துச் சென்றே ஆகவேண்டும்.ஐ.நாவின் கதவுகளை தட்டிய பின்னும்,சேனல் 4 காட்சித் தொகுப்புக்களையெல்லாம் கண்டு விட்டு கால்களை பின்னெடுப்பது நல்லதல்ல.

இது குறித்த கருத்து பரிமாற்றங்களும் கூட போரின் மறுவடிவம்தான்.

அடுத்த இரு பதிவுகளையும் பதிவர் பாலா அறிமுகப்படுத்திய பிரமிள் புத்தகத்தையும்,EXODUS நாவலையும் முடிந்தால் படிக்க வேண்டுகிறேன்.