Followers

Sunday, March 25, 2012

கூடங்குளம் போராட்டங்கள்

மின்சாரம் என்பதன் உணர்வே இல்லாமல் அதன் முழு பயனையும் அனுபவிக்கும் எனக்கு கூடங்குளம் பற்றி கருத்து சொல்ல அருகதை இல்லையென்பதோடு அணுவியல் மின்சாரம் குறித்த அரிச்சுவடி கூட தெரியாமல் மேதாவித்தனம் காட்டுவதும் சரியில்லை.மாறாக மனிதாபிமான உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு மேதாவித்தனம் தேவையில்லையென கருதுகிறேன்.

தமிழகத்திற்கு மின்சார தேவை ஒரு பக்கம், ஜப்பானின் சுனாமிக்குப் பின் அணு மின் நிலையம் பற்றி புதிதாக முளைத்துள்ள ஆபத்து ஒரு புறம் என மிகவும் சிக்கலான சூழலில் தமிழகம் வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கியுள்ளது வருத்தமளிக்கிறது.நேற்று வரை உங்களில் ஒருத்தி நான் என்று சொல்லி வந்த ஜெயலலிதா திடீரென நிலை மாறும் சூர்ப்பநகை சூனியத்தனம் கண்டிக்கத் தக்கது.மாநில முதல்வராக தனது நிலைப்பாட்டை உரக்க சொல்ல அவருக்கு உரிமை உண்டு.மாறாக இரட்டை அரசியல் வேடம் போடுவது அவர் மீதான நம்பிக்கைகளை இழக்கச் செய்யும் என்பதோடு அந்நியள் மாதிரி Split personality decision தமிழக மக்களின் வாழ்வையும் பாதிக்கும்.

இப்பொழுது கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கூடாது என்று மக்கள் உண்ணாவிரதப் போரட்டம் இருப்பதை காவல்துறை வன்முறையால் தடுத்து நிறுத்துவதை விட தீர்வுகளுக்கான வழிகளை பேச்சு வார்த்தைகள் மூலம் தேடுவதே சிறந்தது.ஒரு வாரமாகியும் மத்திய,மாநில அரசு தரப்பிலிருந்து யாரும் பேச்சுவார்த்தைக்குப் போகாத உதாசீனமும்,போராட்டக்காரர்களை குற்றவியலில் சிக்க வைக்கும் போக்கு கண்டிக்கத் தக்கது. 

கூடங்குளம் அணுமின் நிலையம் ஆபத்து இல்லாதது என்பதற்கான உத்தரவாதத்தையும் மக்களின் பயத்தையும் போக்குவது ஒரு ஜனநாயக அரசின் கடமை.தொழில் வல்லுனர்களின் கருத்துக்கள் இரு வேறு விதமாக மாறுபட்டு இருப்பதால் எது சரியென்ற முடிவுக்கும் மக்களுக்கு குழப்பம்.மின்சக்தி நமது வாழ்க்கையின் முக்கிய ஒன்றாகிப் போன காலத்தில் மின்சாரமில்லாத பொருளாதார வளர்ச்சி என்பது சாத்தியமேயில்லை.மேலும் கூடங்குளம் மட்டுமல்ல,தொழிற்சாலைகள் அமையும் நகர்ப்புறங்களில் சுகாதார பக்க விளைவுகள் உண்டாகின்றன என்பதையும் நாம் உணரவேண்டும். ஆனாலும் வேலை வாய்ப்புக்கள்,நாட்டின் பொருளாதாரம் கருதி சுகாதார குறைபாடுகளோடு நாம் வாழக்கற்றுக் கொண்டிருக்கிறோம்.

1999ம் வருடம் பி..ஜே.பி அரசு இந்தியன் ஏர்லைன்ஸ் IC 814 விமானத்தை தலிபான்கள் (Harkat-ul-Mujahideen) 176 பயணிகளையும் ஹைஜாக் செய்த போது மக்களின் உயிரே முக்கியம் என்று ஜஸ்வந்த் சிங் தலிபான் பணயக் கைதிகளை கந்தகாரில் கொண்டு போய் ஒப்படைத்து பயணிகளை 7 நாட்கள் துன்பங்களுக்குப் பின் அழைத்து வந்தார். மக்களுக்காகவே அரசின் கொள்கைகள்.அரசின் கொள்கைகளுக்காக மக்கள் அல்ல என்பதை உணர்ந்து பிரச்சினைகளின் மையப்புள்ளிகளை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்ப்பதே நல்ல அரசுக்கு அடையாளமாகும்.

Friday, March 23, 2012

இலங்கை நிகழ்வுகளின் தொகுப்பும் எதிர்கால தீர்வுகளும்-பகுதி 3

இலங்கையும்,விடுதலைப் போராட்டத்தையும், தமிழீழம் கனவையும் இலங்கையில் தமிழர்கள்,சிங்களவர்கள் மற்றும் தமிழகம்,இந்தியா,உலகம் சார்ந்த மொத்த பரிமாணத்தின் சில முக்கிய நிகழ்வுகளை இங்கே விமர்சனத்துக்குட்படுத்தியும்,புரிதலுக்கும்,நினைவுபடுத்தலுக்கும் மீண்டும் ஒரு முறை சொல்லி விட்டு உலக அரங்கிற்குள் நுழைந்து விட்ட தமிழர், சிங்களவர்களின் தேவையும்,இனி இலங்கை எப்படி முன் நகரலாம் என்பதை பார்க்கலாம்.

இலங்கைப் பிரச்சினையை தமிழர் சம உரிமை மறுப்பு என்ற சிங்கள் பேரினவாதம்,அஹிம்சை போராட்டம், தமிழர்களுக்கு எதிரான சிங்கள இனக்கட்டவிழ்ப்பு,ஆயுதப் போராட்டம்,தமிழீழம் என்ற நோக்கம், ஆயுதப்போராட்டத்தின் வன்முறைகள்,இந்தியாவின் இலங்கை தலையீடு தோல்வி,ராஜிவ் காந்தி சிங்கள ராணுவ வீரரின் துப்பாக்கி பின் புற தாக்குதல்இந்திய ராணுவத்தின் மீறல்கள்,கலைஞர் கருணாநிதியின் இந்திய ராணுவத்தை வரவேற்காமை,வை.கோ,நெடுமாறன்,எம்.ஜி.ஆரின் பிரபாகரன் குழுவின் ஆதரவு,விடுதலைப்புலிகளின்  வளர்ச்சியும்,பிரபாகரனின் மொத்த ஆளுமையும்,புலம்பெயர் தமிழர்களின் பங்கீடும்,ஏனைய தமிழ் குழுக்களின் அழிப்பு,ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அரசு தரப்பு தலைவர்கள் படுகொலை,வட கிழக்குப் பகுதியிலிருந்து சிங்கள,முஸ்லீம் தமிழர்கள் விரட்டியடிப்பு,ராஜிவ் காந்தியின் கொலை, கிழக்கில் கருணா,பிள்ளையான் துரோகத்தால் விடுதலைப்புலிகள் இரண்டுபட்டதும், வடக்கு,கிழக்கு என்ற பிரிவினையும்,பல இன்னல்களுக்கும் இடையிலும் சோர்ந்து போகாத விடுதலைப்புலிகளின் தமிழீழ இலக்கை நோக்கிய மன உறுதியும்,நார்வேயின் பேச்சு வார்த்தை தோல்வியை அடைந்தது தமிழர்களுக்கும்,சிங்களவர்களுக்கும் பேரிழப்பு என்பதோடு இல்லாமல் மனித உரிமைகளில் முதன்மையில் இருக்கும் நார்வேக்கும் களங்கமான ஒன்றாகப் போனது.

ஈழப்போரில் கடல்,வான்,நிலம் என்ற கட்டமைப்போடு இலங்கை அரசின் கட்டமைப்புக்களை தகர்க்கும் நோக்கில் விடுதலைப்புலிகள் போராட,இலங்கை அரசு பல நாட்டு உதவியுடன் போரிட்டு விடுதலைப்புலிகளை அழிக்கும் நோக்கோடு மட்டுமல்லாமல் தமிழர்கள் என்ற நோக்கில் குழந்தைகள், பெண்கள்,முதியோர் என பாரபட்ச மற்ற ராணுவ படுகொலைகள்,இலங்கை அரசின் போர்க்குற்றங்கள்,ஆயுதப் போராட்டத்தின் மௌனம்,தமிழகத்தில் கருணாநிதியின் சுயநலம்,கட்சிகள் பிரிந்த ஆதரவு,உலக ஊடகவியளாளர்கள் அனுமதி மறுப்பு,இலங்கை ஊடகவியளாளர்கள் படுகொலை,சிஙளவர்களின் போர் வெற்றிக் களிப்பும் அதனைத் தொடர்ந்து பொன்சேகாவுக்கே சிறை தண்டனையும், ராஜபக்சேக்களின் தவறான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள், ஐ.நாவின் செயல்படா தன்மை,மனித உரிமை அமைப்புக்களின் அழுத்தங்களால் இலங்கை போர் குறித்த மூவர் குழு மற்றும் அறிக்கை,ஐ.நா அறிக்கைக்கு எதிரான இலங்கை அரசின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் புரிந்துணர்வு என்ற முகப்பூச்சு, 3 ஆண்டுகள் ஆகியும் தமிழர்களுக்கான தீர்வினை தராமை,புலம் பெயர் தமிழர்களின் எதிர்ப்பு,இந்தியா பூகோள மற்றும் ராஜிவ் காந்தி படுகொலை என்ற இரு நிலைகளில் இலங்கை அரசுக்கு உதவியும் இந்தியா சார்ந்தும் சாராத நிலையாக இந்திய நட்பும் கூடவே சீனா,ரஷ்யா,பாகிஸ்தான் என்ற கவசங்களை அணிந்து கொண்ட நிலை,போர்க்குற்றம் செய்த உயர் ராணுவ அதிகாரிகளை தப்பிக்க வைக்கும் சூழ்ச்சியில் தூதரக,ஐ.நா வரை பதவி அமர்த்தல்,நாடு கடந்த தமிழீழ அரசு,உட்பூசல்கள்,வலுவற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு,போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்வு துயரங்கள்,சேனல் 4 ன் பங்கு,ஐ.நாஅமெரிக்காவின் தலையீடு என்ற இப்போதைய நிலை வரை இலங்கைப் பிரச்சினையைப் பார்த்தால் இலங்கையின் ஆட்சி பீடம் அனைத்தையும் புறம் தள்ளி விட்டு தனது தேவைக்கேற்ப உலக அரங்கில் வலம் வரலாம் என்பது தவறான ஒன்றாகவே இனியும் அமையும்.

இந்திரா காந்தியின் காலத்திலேயே திரிகோணமலை கனவு நிறைவேறாத அமெரிக்கா விடுதலைப்புலிகள் இல்லாத வெற்றிடத்தில் தென் ஆசிய பூகோள அரசியலில் பங்கு தேடவும்,கூடவே இலங்கை மனித உரிமை மீறலகளால் குரல் கொடுக்க, சோர்ந்து போயிருந்த தமிழர்கள் சிறு நம்பிக்கை வெளிச்சம் வீசுவதை உணரத்தொடங்கையிருக்கிறார்கள். அமெரிக்காவின் இலங்கை சார்ந்த தீர்மானம் என்று வைத்துக்கொண்டாலும் கூட அமெரிக்காவின் தலையீட்டுக்குப் பின்பே இலஙகைப் பிரச்சினை சூடு பிடித்திருக்கிறது.

தமிழர்களின் தேவை தமிழீழம் என்ற போதிலும் அந்தக் கோட்டை தொடுவதற்கான வலிமையாக பேச்சு வார்த்தை, ஆயுதப் போர் இருந்த போதும் அவை மரணித்து விட்ட தருணத்தில் அமெரிக்கா சார்ந்த தமிழர்களின் நிலையே தமிழர்களுக்கும்,அனைத்தையும் இழந்த அப்பாவி தமிழர்களுக்கு தற்போதைக்கான முதல் தேவையாக மறுவாழ்வுக்கான வழியை உருவாக்கும்.

 இந்த கணத்தில் யாரும் தொடாத உலக அரசியல் நிகழ்வொன்றையும் குறிப்பிடுவது சரியாக இருக்கும். சதாம் ஹுசைன் குவைத் மீது தொடுத்த போர் குற்றத்திற்காக அமெரிக்கா கோபி அனான் காலத்து ஐ.நாவில் தீர்மானம் போட்டு ஈராக் விற்கும் பெட்ரோலின் ஒரு பகுதியை போரினால் பாதிக்கப்பட்ட குவைத் நாட்டு மக்கள், குவைத்தில் பணி புரிந்த அனைத்து வெளி நாட்டினருக்கும் அவரவர் நாட்டு தூதரகம் மூலமாக இழப்பீடை வாங்கி தந்தது.குவைத்தில் பணிபுரிந்த,தொழில் புரிந்த இந்தியர்கள் எவ்வளவு மில்லியன் ஈட்டுத்தொகை பெற்றார்கள் என்பதை ஐ.நா கணக்கும்,இந்திய வங்கிகளும் சொல்லக்கூடும்.ஈட்டுத்தொகையில் கோவாவில் ஐந்து நட்சத்திர ஓட்டலை கட்டிய ஈட்டுத்தொகை வரலாறுகள் கூட உண்டு.

.அதே போல் இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் அனைவருக்கும் வீடு,நிலம்,தொழில் உதவி என உலக வங்கிக் கடன் மூலமாகவோ,நட்பு நாடுகளின் உதவிகளோடு இலங்கை இழப்பீடு வழங்குவது அவசியம.இது போர்க்குற்றஙகளுக்கான நஷ்ட ஈட்டுத்தொகை மட்டுமே. இதனை அடுத்து வட கிழக்கு தமிழர்களுக்கான பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் தனி நாடோ அல்லது ஒன்று பட்ட இலங்கையென்ற நிலையில் அதிகாரப் பகிரவும்,சமநிலை அரசியல் சாசன மாற்றமும் தேவை. அகதிகள்,புலம் பெயர் தமிழர்களை உள் வாங்கிக்கொள்ளும் தன்மையும்,மக்களின் தேவைகளுக்கேற்ப பெடரல் அமைப்போ,கனடா போன்ற இரு ஆட்சிமுறை இலங்கையின் நீண்ட எதிர்கால நலனுக்கு உதவும். தமிழர்கள்,சிங்களவர்களின் புரிந்துணர்வில் இரு நாட்டுக்கொள்கை கூட அவசியமான ஒன்றே.இதுவே இலங்கையின் எதிர்காலத்துக்கு சரியான பாதையாக அமையும்.தமிழர்களின் போராட்டம்,சிங்கள அரசின் செயல்படும் திறன்,உலக நாடுகளின் சுயதேவைகள் என்ற மூன்று அடிப்படையில் மட்டுமே இனி நிகழ்வுகள் வலம் வரக்கூடும்.

மக்கள் வாழ்வுக்கு தீர்வுகள் காணும் பட்சத்தில் இலங்கைக்கு பூகோள ரீதியாக வெளி அச்சுறுத்தல்கள் எதுவுமில்லை.தேவைக்கான பாதுகாப்புக்கு பூகோள ரீதியாக இந்தியாவை சார்ந்து இருப்பது தேவையற்ற பாதுகாப்பு பட்ஜெட் செலவீனங்களை குறைக்க முடியும்.முக்கியமாக இலங்கை,தமிழகம் என்ற நட்பை கொண்டு வரும் ஸ்டேட்ஸ்மேன் அரசியல்வாதி இலங்கைக்கு தேவை.

உலக சந்தை என்ற ரீதியில் சீனாவுடன் பொருளாதார உறவுகள் கொள்வது இலங்கைக்கு தேவையான ஒன்றே.இதனையும் தாண்டி சீனாவுடன் ஆயுத வலுப்படுத்தல் என்ற கோட்பாடு இலங்கைக்கு எதிர்காலத்தில் அழிவையே கொண்டு வரும்.இலங்கையின் இரட்டை நிலையை நிலம்,கடல் கடந்து பாகிஸ்தானிடம் உறவு கொள்வதிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.ஒரு புறம் தமிழர்களின் நலன் நோக்காமலும் இன்னொரு புறம் அப்பாவி சிங்களப்பெண்களை வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி அவர்கள் அனுப்பும் சிறு தொகையின் மொத்த கூட்டின் ஒரு பகுதியை ஆயுதஙக்ள் வாங்கவும், லாபிகளுக்கு செலவிடுவதும் வளமான இலங்கையை உருவாக்காது.ஒரு புறம் சிங்கள இனவாதம் பேசுபவர்கள் இருந்தாலும்,கல்வியறிவும்,தொழில் சார்ந்த நிபுணர்களும்,இலங்கையின் சமத்துவ எதிர்காலம் குறித்த அக்கறை கொண்ட சிங்கள மக்களும் இருக்கவே செய்கிறார்கள்.இவர்களை அடையாளம் காண்பதும் முன்னிலைப்படுத்துவதும் இலங்கையின் எதிர்காலத்துக்கும் நல்வாழ்வுக்கும் உதவும்.

தற்போதைக்கான முக்கிய தேவையாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் போய் சேர்வதற்கு இலகுவான வழிகள் தேவை.எந்த உதவியும் இலங்கை அரசின் மூலமாக,ராணுவ துணை கொண்டு என்றில்லாமல் சுயாதீனமாக செயல்படும் அமைப்புக்கள்,தமிழகத்தின் உதவி போன்றவை இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும்.

இலஙகை எந்த பாதையை தேர்ந்தெடுக்கிறதென்பதை பொறுத்திருந்து பார்ப்போம். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க அறிக்கையின் செயல்பாடுகள் பற்றிய திறனாய்வு ஐ.நாவில் மீண்டும் ஒரு முறை திறனாய்வு செய்யப்படும் வரையிலான கால கட்டத்தின் நிகழ்வுகளை கூர்ந்து கவனிப்போம்.

Thursday, March 22, 2012

இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானம் வெற்றி-பகுதி 2

சென்ற முறை சேனல் 4 காணொளியையும்,ஐ.நா மூவர் குழு அறிக்கையையும் ராஜதந்திர ரீதியாகவும்,தூதரக கடித பரிவர்த்தனைகள் மூலமாகவும் வெற்றிகரமாக செயல்படுத்தியதாகவும் அதே போல் இந்த முறையும் வெற்றி கொள்வோம் என இலங்கை அரசு பிரச்சாரம் செய்கிறது.இது ஓரளவுக்கு உண்மையாக கூட இருக்கலாம்.காரணம் ஐ.நா வாக்கெடுப்பில் சீனா,ரஷ்யா, இந்தியா இன்னும் பல நாடுகளின் உதவியோடு வாக்கெடுபபு இலங்கைக்கு சாதகமாகவே மாற்ற முடிந்தது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க அறிக்கை என்று ஒப்புக்கு ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றி ஐ.நா.மூவர் குழு அறிக்கையை பின் தள்ளியது என்பதும் உண்மை.

சென்ற முறை ரஷ்யா,சீனாவின் வீடோ அதிகாரத்தின் மூலம் தன்னை பாதுகாத்துக் கொண்டது போல இந்த முறை ஐ.நா மனித உரிமைக்குழுக்களின் கூட்டம் மூலமாக வெற்றி கொள்வதற்கான சூழல்கள் இல்லை என்பதற்கான இரண்டு காரணங்கள் உண்டு.முதலாவதாக சேன 4 காணொளியும் இரண்டாவதாக இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் புரிந்துணர்வு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டி இலங்கை மீதான தீர்மானம்.

இந்த முறை சேனல்  முக்கிய மனித உரிமை மீறல்கள் என்று இலங்கை அரசை நேரடியாகவே போர்க்குற்றம் சுமத்துகிறது சேனல் 4.. விவரிப்பாளர் ஜான் சுனோவின் ஆங்கில மொழி நடைக்கும்,காணொளிக்கும் சவால் விடுகிறேன் என இலங்கை அரசு மாலினி என்ற பெண்ணின் ஆங்கில வர்ணனையோடு Lies agreed upon என்ற காணொளியை வெளியிடுகிறது.மனித உரிமை மீறல்கள் எதுவும் நிகழவில்லையென போரில் தப்பித்த தமிழ்ப் பெண்கள் சிலரின் வாக்குமூலமாக இலங்கை ராணுவத்தினர்கள் தேவதூதர்கள் எனகின்ற மாதிரியும்,சேனல் 4 ன் முதல் காணொளியில் சாட்சியம் தந்த வாணி குமார் பற்றி முன்னாள் போராளி என்ற சகோதர இளைஞர் ஒருவர் கருத்தும்,கிறுஸ்தவ ஆலயத்தை விடுதலைப்புலிகள் ஆக்கிரமித்துக்கொண்டார்கள் என்று ஒரு இளம்பெண்ணும் சொல்வதை எதிர் வாதமாக இலங்கை அரசு முன் வைத்தது.விவரணையாளர் மாலினி சேனல் 4 ன் சாட்சியங்களின் முகம்,இடம்,குரல் அனைத்தும் இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்கிறார்.அதற்கான காரணம் என்ன என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை/ஏனென்றால் இலங்கையின் வெள்ளை வேன் கலாச்சாரம்,மனித உரிமைகளை கடைப்பிடிக்கும் நாடுகளில் முதன்மையான இடம் இலங்கைக்கு என்று என்பது அனைவரும் அறிந்ததே.

இதனை தொடர்ந்த தமிழக கட்சிகளின் ஒன்றுபட்ட குரல்களையும்,பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்து குரல் கொடுத்த தி.மு.க,அ.தி.மு.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக திருமாவளவன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க செய்தனர்.

இந்த முறை அ.தி.மு.க ஒரு பக்கம்,தி.மு.க மறுபக்கம் மற்றும் திருமாவளவன், தனி மனிதனாக என்று பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க செய்யுமளவுக்கு ஈழப்பிரச்சினையைக் கையாண்டார்கள் என்ற போதிலும்,கலைஞர் கருணாநிதியும பதவி விலகல்,மத்திய அமைச்சரவையிலிருந்து விலகல், உண்ணாவிரதம் போன்ற அழுத்தங்கள் கொடுக்க தயாரானது I am still in the game என்பதையே உணர்த்துகிறது.

இவை அனைத்தும் தும்பை விட்டு வாலைப்பிடிக்கும் செயல் என்றாலும் நிகழ்ந்தவைகளை விமர்சனம் செய்யவோ,சூதுகள்,இழப்புக்கள்,நிகழ்ந்த வரலாற்றுத் தவறுகளை நம்மால் இனி ஒன்றும் செய்து விட முடியாது.மாறாக இனி வரும் நிகழ்வுகளை மாற்றும் சக்தி அல்லது இன்னும் இயலாமை என்ற நிலையில் மட்டுமே இனி நாம் செயல்பட முடியும்.தவறுக்கு பிராயச்சித்தம் என்கிற சொற்பதங்கள் எல்லாம் இது மாதிரியே உருவாகியிருக்குமோ?

இனி அமெரிக்காவின் இலங்கை நிலைப்பாடு என்ன என்பதை  இலங்கையின்  அமெரிக்க தூதர் Patricia Butenis என்ன சொல்கிறார் என்பதை கூர்ந்து கவனித்தால் இலங்கை மீதான அமெரிக்க வெளிநாட்டுக்கொள்கை என்ன என்பதை உணர முடியும்.

http://dbsjeyaraj.com/dbsj/archives/4610

இந்த பதிவை வெளியிடும் இந்த தருணத்தில இலங்கையின் மங்கள சமரவீர தனது உரையை முடித்துக்கொண்ட பின் ஈகுவேடர், ரஷ்யா, உருகுவே, தாய்லாந்து,நைஜீரியா,பிலிப்பைன்ஸ்,உகாண்டா,மால்தீவுகள்,இந்தோனேசியா,பங்களாதேஷ்,மெக்சிகோ,அங்கோலா என தீர்மானம் குறித்த தமது கருத்தை முன் வைத்தன.இவைகளில் இலங்கையை ஆதரிக்கும் நாடுகள் அணிசேரா நாடுகள் என்ற அடிப்படையில் இலங்கையை ஆதரிக்கின்றன.பிடல் காஸ்ட்ரோ என்றும், செகுவாரா என்றும் தேச எல்லைகள் கடந்து புரட்சிகளில் பெருமிதம் பட்டுக்கொண்ட நாம் கியூபாவின் அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாடு காரணமாக இலங்கை சார்பாக செயல்படும் விதமாக இலங்கை தனது நண்பன் என்றும் தீர்மான வாக்கெடுப்பை தள்ளி வைக்குமாறும் வேண்டுகோளை விடுக்கிறது.

தேர்வு சுற்றுக்கு விடப்பட்ட அறிக்கையின் படி

அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவு 24
இலங்கைக்கு ஆதரவாக 15
மதில் மேல் பூனை 8

பதிவின் அவசரம் கருதி இத்துடன் முடித்துக்கொண்டு இனி இலங்கை என்ன செய்யலாம் என்ற ஆக்கபூர்வமான கருத்துக்களை அடுத்து காணலாம்.

Wednesday, March 21, 2012

சேனல் 4,மனித உரிமை தீர்மானம்,இந்தியா,இலங்கை - பகுதி 1

சென்ற முறை சேனல் 4ன் காணொளி கண்டு பதறிய மனம் இந்த முறை எந்த சலனத்தையும் என்னில் ஏற்படுத்தவில்லை. மனம் மரத்துப் போன நிலையென்றாலும் இணைய தேடல்களில் முதன்மையாக ஈழ மக்கள் குறித்த அக்கறையும்,இலங்கை அரசு தனக்கு எதிரான  சவால்களை  எதிர்கொள்ளும் தன்மைகளையே மனம் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.சேனல் 4 காணொளி வெளி வராத தினங்களுக்கு முன்பே 2009ல் மௌனமாக இருந்த இந்திய ஆங்கில ஊடகங்கள் இந்த முறை விவாதக்களத்தையும்,இலங்கை குறித்தான தலைப்புக்களை முன் வைத்தது ஆச்சரியத்தையும் அதன் தேவையையும் உணர முடிந்தது.

அரசியல் நாடக நடிகர்கள் அதிகம் வந்து போகும் ஊடகம் என்பதால் இந்திய ஊடகங்களில் NDTV எனது முன்னுரிமை.கூடவே ஆங்கில நடைக்கும் இலங்கை அரசின் ஊதுகுழலாய் என்.ராமின் காலத்தில் களநிலைகளையும்,இலங்கை அரசு என்ன ஊதுகிறது என்று அறிந்து கொள்ளவும் இந்து பத்திரிகை.இப்பொழுது என்.ராம் அவர்கள் வீட்டில் உட்கார்ந்து இட்லி வடை சாப்பிட்டுக்கொண்டு தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருப்பதால் இப்பொழுது இந்து பத்திரிகை இலங்கை சார்ந்த அமெரிக்க தீர்மானத்தையெல்லாம் வெளியிடுவதோடு மத்திய அரசின் இலங்கை நிலைப்பாடு குறித்தெல்லாம் செய்திகள் வெளியிட ஆரம்பித்திருப்பது வரவேற்க தகுந்த மாற்றம் எனலாம்.

சேனல் 4 காணொளிக்கு முன்பே அமெரிக்க தீர்மானம் குறித்து NDTV யில் சுப்ரமணியன் சாமி,முன்னாள் தூதரகப் பணியாளர் ஜி.பார்த்தசாரதி,கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா,காங்கிரஸ் கட்சியின் நாரயணசாமி,மீனா கந்தசாமி போன்றோருடன் பர்காதத் கலந்துரையாடல் நிகழ்ச்சி காண நேரிட்டது.சுப்ரமணியன் சுவாமி இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவு தந்தால் இந்தியாவின் காஷ்மீர்,மணிப்பூர் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு பற்றி எதிர்காலத்தில் பேச்சு வரும் என்றார்.சுப்ரமணியன் சாமியின் வாதம்  திசை திருப்பல் என்பதோடு எதனையாவது இட்டுக் கட்டியாவது விடுதலைப்புலிகள் மேல் குற்றம் சுமத்துவது மட்டுமே என்ற நீண்டகால நோக்கு கொண்டவர்.

காஷ்மீர்,மணிப்பூர் மனித உரிமை மீறல்கள்  என்றால் ஐ.நா தீர்மானம் இந்தியாவுக்கும் கொண்டு வரவேண்டும் என்றார் மீனா கந்தசாமி. மேலும் இந்தியாவின் மனித உரிமை மீறல்களை இலங்கை ராஜபக்சே குழுவினரின் மனித உரிமை மீறல்களுடன் ஒப்பிட்டு விடமுடியாது.மத்திய அமைச்சர் நாராயணசாமி தீர்மானத்தை ஆதரிப்போம் என்றுமில்லாமல் இலங்கை அரசுடன் சார்ந்து செயல்படுவோம் என்றுமில்லாமல் மதில் மேல் பூனையாக ராஜிவ் காந்தியை கொன்ற விடுதலைப்புலிகளை மன்னிக்கவும் மாட்டோம்,அதே நேரத்தில் இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு வேண்டும் என்கின்ற ரீதியில் தனது கருத்தை முன் வைத்தார்.ஒரு புறம் டி.ராஜாவின் கருத்துக்கும்,மறுபுறம் அமைச்சர் நாராயணசாமியின் வாதத்திற்கும் ஏளன சிரிப்பை வெளியிட்டுக்கொண்டிருந்தார் சுப்ரமணியன் சாமி.

நான்கு பேர் கலந்து கொள்ளூம் விவாதத்தில் அவரவர் நிலைப்பட்ட வாதங்களை வைக்கும் போது பேச்சின் இடையே குறுக்கிடும் வழக்கத்தை இந்தியர்கள் பெரும்பாலோர் கடைப்பிடிக்கிறார்கள்.சுப்ரமணியன் சாமியின் ஸ்டைல் என்னவென்றால் தானே அறிந்தவன் என்ற மமதையோடு மற்றவர்களை நக்கல் செய்யும் ஏளன சிரிப்பு மற்றும் உனக்கு ஒன்றுமே தெரியாது என்கிற மாதிரி முகத்திற்கு நேரே சொல்லி விடுவது.இதனை முன்பு ஜெயந்தி நடராஜன் மற்றும் ரேணுகா சவுத்ரி போன்ற மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும் பெண்களிடம் ஏளனம் செய்ததை காண முடிந்தது.படித்தும்,பொது வாழ்வில் ஈடுபட்டும் பக்குவப்படாத மனிதன் என இவரை துணிந்து சொல்லலாம்.உருப்படியாக செய்த ஒரே வேலை 2G என்பதையும் மறுப்பதற்கில்லை.

சுப்ரமணியன் சாமியின் நிலைப்பாடு முன்பு சீனா,மற்றும் அமெரிக்கா சார்ந்தும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலையென்பது தெரிந்த ஒன்றே.ஆனால் சென்ற வருடம் அமெரிக்க பல்கலைக்கழகம் சுப்ரமணியன் சாமியின் பேச்சுக்கும், அவர் கற்றுக் கொடுக்கும் பாடத்திற்கும் சம்பந்தமேயில்லை என்பதை உணர்ந்தோ என்னவோ கௌரவ ஆசிரியர் பதவியை பறித்துக்கொண்டது.அதனால் இப்பொழுது அமெரிக்க தீர்மானம் குறித்தும் அமெரிக்காவை எதிர் விமர்சனம் செய்வதை உணர முடிந்ததது.

ஜி.பார்த்தசாரதி இலங்கை,பாகிஸ்தான் போன்ற இடங்களில் இந்திய தூதராகப் பணீ புரிந்திரிக்கிறார்.நிச்சயம் பூகோள அரசியலை  நன்கு தெரிந்து வைத்திருப்பார்.ஆனால் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் மேசைக்கு வரும் முன்பே தீர்மானம் தோற்றுவிடும் என்று ஜோஸ்யம் சொல்லி விட்டார். இவர் ஜோஸ்யம் பலிக்கிறதா என இன்னும் சில தினங்களில் பார்த்து விடலாம்:) ஆசிய மனித உரிமைகள் சார்ந்து ஒரு பெண்ணும்,சர்தார்ஜி ஒருவரும் கருத்துக்கள் முன்வைத்தார்கள்.பெயர்கள் நினைவில் இல்லை. கலந்துரையாடல் செய்த அனைவரின் விவாதங்களையும், மொத்த நிகழ்ச்சியின் போக்கையும்  இறுதியில் வந்த சேனல் 4 காணொளியின் இயக்குநர் கேலம் மெக்ரா (Callum Macrea) தனது நியாயமான கருத்தின் மூலமாக தட்டிக்கொண்டு போய்விட்டார்.

NDTVயின் காணொளி கிடங்கில் இருந்தால் இணைப்பு கொடுக்கலாமென்று தேடியதில் கால விரயம் மட்டுமே மிச்சம்.மன்னிக்கவும்.

என்.ராம், சுப்ரமணியன் சாமி,சோ,ஜி.பார்த்தசாரதி,பி.ராமன் என்று ஊடகங்களில் கருத்து தெரிவிக்கும் எவரும் விடுதலைப்புலிகள் என்ற ஒற்றைக் கோட்டைத் தாண்டி விமர்சனம் செய்வதில்லை. இதில் என்ன பிரச்சினையென்றால் எதிர் விவாதம் செய்ய இயலாத ஊடக கண்ணாடிக் கூண்டுக்குள் உட்கார்ந்து கொண்டு இவர்கள் பூச்சாண்டி காட்டுவதே. இவர்களின் இன்னும் புரியாத புதிர் ஒன்று என்னவென்றால் இந்து கலாச்சாரமாக பரதம், கோயில், பட்டு, வேட்டி, சம்பிராதயங்கள் என ஈழத்தமிழர்கள் இந்து மத பாரம்பரியங்களை   கட்டிக் காத்தாலும் கூட இந்துத்வா எனும் மையத்தில் சேரும் இவர்கள் ஈழப்போரின் அவலங்களுக்கு முந்தைய காலத்தின் அடிப்படையிலேயே கருத்துக்கள் வைப்பதும்,மக்களின் துயரங்கள்,இழப்புக்கள் என்று அனைத்தையும் பின் தள்ளி விட்டே கருத்து வெளியிடுவது மனித நேயத்துக்கு உகந்ததாக இல்லை.இவர்களை விட சில இலங்கை பத்திரிகையாளர்களும்,இலங்கை அரசின் அடக்குமுறையில் வெளிநாடு சென்ற சிங்களவர்கள் மேல்.

பார்வைகளும்,விமர்சனங்களும் வித்தியாசப்பட்டால் தனி மனித கருத்துக்கள் என்று புறம் தள்ளி விடலாம்.ஆனால் இவர்கள் ஏதோ ஒரு வட்டத்தில் மையம் கொள்கிறார்கள்.மேற்கத்திய நாடுகள் இலங்கையின் மீதான தங்கள் சுயநலம் அடங்கிய அழுத்தங்கள் தொடுத்தாலும் கிழக்கத்திய நாடுகளோடு ஒப்பிடும் போது மனித உரிமைகளையும் மதிக்கிறார்கள் என்பது நிச்சயம். இவர்களுக்கு இருக்கும் ethics கூட இல்லாமல் இந்திய நலன் என்ற முகப்பூச்சு பூசிக்கொண்டு மட்டுமே  இவர்கள் கருத்தை வெளியிடுகிறார்கள். சோவின் துக்ளக்,சுப்ரமணியன் சாமியின் NDTV &IBN,பி.ராமனின் பழைய indiff & இப்போதைய outlook India,ஜி.பார்த்தசாரதியின் கிடைத்த இடம் என இவையெல்லாவற்றையும் விட இலங்கை அரசின் வைரமாலை பத்திரிகையாளன் இந்து என்.ராம் என அனைவரும் ஒரு கோட்டுக்குள் சங்கமமாகும் மர்மம் என்ன?ஒருவேளை தமிழ் உணர்வாளர்களின் உணர்வுகள்,கோபங்கள்,நியாயங்கள் அனைத்தும் தவறு என்றால் அவை எப்படி தவறு என விளக்குவதுமில்லை, சுட்டிக்காட்டுவதுமில்லை.இன்னும் கூட இவர்களின் ஒரே மையம் விடுதலைப்புலிகள் மட்டுமே.இவர்களின் எதிர்ப்புக்கள் ஒரு புறம் ஊடகப் பிரச்சாரமாக பவனி வர,இன்னுமொரு புறம் ஈழத்தமிழர்கள் சார்ந்த அனுதாபம் தமிழகத்தில் வளர்வது மட்டுமே நிதர்சன உண்மை.

இனி தொடர்ந்து சேனல் 4 வெளியிட்ட காணொளி குறித்து அடுத்து பார்ப்போம்.

Sunday, March 18, 2012

மோசஸ் சார்ல்டன் ஹெஸ்டனும், கலைஞர் கருணாநிதியும்!

பைபிளின் பழைய ஏற்பாட்டில் மோசஸ் எப்படியிருந்திருப்பார் என்று கற்பனை செய்யாமலே பத்துக்கட்டளைகள் எனும் The Ten Commandments திரைப்படம் சார்லடன் ஹெஸ்டனை மோசஸஸ் உருவகப்படுத்தி வைத்தியுள்ளது.கூடவே பென்ஹர் திரைப்படமும் ஹெஸ்டனை ஹாலிவுட்டின் நிரந்தர வரலாற்றுக்குள் நிரந்தரப்படுத்தியுள்ளது.யதார்த்த வாழ்க்கைக்கும், திரைப்படங்களுக்கும் தூரம் என்பதை இந்திய திரைப்படங்கள் மட்டுமல்ல, ஹாலிவுட் திரைப்படங்களும் விதிவிலக்கல்ல.ஹெஸ்டனின் திரைப்பட முகம் மோசஸ் மாதிரியாக இருந்தாலும் அவரது இயல்பான வாழ்க்கை முறை விமர்சனத்துக்குரியது என்கிறார் Fahrenheit 9/11 மற்றும் Bowling for Columbine ஆவணப்படங்களின் இயக்குநர் மைக்கேல் மூர்.

சில மாதங்களுக்கு முன் பள்ளி ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற மாணவன் பற்றி சமூக,பொருளாதார,மதம் சார்ந்த விவாதங்கள் பலரிடமிருந்து பதிவுகளாய் வெளிப்பட்டது.அதே மாதிரி அமெரிக்காவில் கொலம்பைன் உயர்நிலைப் பள்ளியில் இரு மாணவர்கள் துப்பாக்கி சூடு நடத்தி சக மாணவர்களை உயிர்ப்பலிகள் கொண்டதன் காரணம் என்ன என்பதை பொது அங்காடிகளில் எளிதாக கிடைக்கும் துப்பாக்கி,அமெரிக்காவின் வன்முறை கலாச்சாரம்,ஹாலிவுட் திரைப்படங்கள்,வறுமை போன்றவற்றை மைக்கேல் மூர் குற்றம் சுமத்துகிறார்.என்னது! அமெரிக்காவில் வறுமையான்னு யாராவது வியப்படைந்தால் மைக்கேல் மூர் பிறந்த இடமே பிளின்ட் எனும் வறுமையான ஊராம்.அமெரிக்க அண்ணன்,அக்கா யாராவது இதனை உறுதிப்படுத்தவும்.

இதற்கு முன் சின்ன பிளாஷ்பேக் போயிட்டு வந்து விடலாம். வாரத்திலோ,மாதத்திலோ நாள் குறிச்சிட்டு முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் முதல் NRA என்ற துப்பாக்கி சுடுவோர் சங்கத்தில் அங்கத்தினர் வரை சுட்டுப்பழகவோ அல்லது பறவைகள் சுடுவதோ அமெரிக்காவில் வழக்கம்.இந்த சுடுற சங்கத்துக்கு சார்ல்டன் ஹெஸ்டன் தான் தல! அதுவும் எப்படிப்பட்ட தலைவர்ன்னா நான் இறந்து போனால் எனது குளிரான கரங்களிலிருந்து மட்டுமே துப்பாக்கியை நீக்க இயலும்ங்கிற அளவுக்கு தீவிர துப்பாக்கிவாதி!

கொலம்பைன்  எனுமிடத்தில் துப்பாக்கி சூடு நடந்த அடுத்த வாரம் ஹெஸ்டன் துப்பாக்கி சுடுவோர் சங்க ஆண்டு விழாவில் கலந்து கொள்ள ஹெஸ்டன் வருவதை மேயர் வரவேண்டாம் என கடிதம் எழுத அதனையும் மீறி ஹெஸ்டன் வந்து இது அமெரிக்கா!வரக்கூடாதாவா!இதோ இங்கே நான் என்று சொல்கிறார்.
சரி இதையெல்லாம் விவரணப் படுத்தி ஆஸ்காரை வாங்கிட்டுப் போகவேண்டியதுதானே,அதை விட்டு விட்டு நம்ம மோசஸ் சார்லடன் ஹெஸ்டன் வீட்டு கேட்டுக்குப் போய் நேர்காணலுக்கு அனுமதி கேட்டு விட்டு மறுநாள் ஹெஸ்டன் நாள் குறிச்சு தர  மைக்கேல் மூர் நம்ம தமிழ்நாட்டு நிருபர்கள் மாதிரி நீங்க எத்தனை படத்தில் நடிச்சீங்க,உங்களுக்கு எந்த நடிகையைப் பிடிக்கும்ன்னு கேள்வி கேட்காம ஷங்கரின் முதல்வன் மாதிரி மெதுவாக நானும் துப்பாக்கி சுடும் அங்கத்தினன்தான் என்று அடையாள அட்டையை காண்பித்து விட்டு ஹெஸ்டனிடம் வீட்டில் துப்பாக்கி வைத்திருக்கிறீர்களா என்று கேட்க ஹெஸ்டன் குண்டுகள் நிரப்பியே வைத்திருக்கிறேன் என்று பதில் சொல்ல அடுத்து அமெரிக்க துப்பாக்கி கலாச்சார வன்முறைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்க ஹெஸ்டன் அமெரிக்காவின் நீண்ட வன்முறை வரலாறும் மற்ற நாடுகளை விட கலப்படமான இனக் கலப்பும் காரணமென்கிறார்.

இதனைத் தொடர்ந்து பிளிண்ட் எனுமிடத்தில் ஆறு வயது சிறுவன் அதே வயதுடைய பெண்ணை சுட்டுக்கொன்றதையும் அந்த நேரத்தில் ஹெஸ்டன் துப்பாக்கி சுடுவோர் சங்க கூட்டங்களில் கலந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறீர்களா என்ற திடீரென்ற எதிர்பாராத கேள்விக்கு பதில் சொல்லாமல் காமிரா இயங்க ஹெஸ்டன் எழுந்து போய் விடுகிறார்.இறந்து போன ஆறு வயதுப்பெண்ணின் புகைப்படத்தை நடந்து போகும் ஹெஸ்டனை கூப்பிட்டு காண்பித்தும் ஹெஸ்டன் சென்று விட அவர் வீட்டு சுவற்றில் சிறுமியின் புகைப்படத்தை வைத்து விட்டு வருகிறார் மைக்கேல்.

சின்ன நேர்காணல்தான்!பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=Q1iuEcu7O50 

இது ட்ரெய்லர்தான். ஆவணப்படத்திற்கு ஆஸ்கார் வாங்கிய முழுப்படம் பார்க்க
Bowling for Columbine மற்றும் மைக்கேல் மூர் மீதான மாற்றுக் கருத்துக்களுக்கு இணைய தேடல் உதவும்.

இப்ப  மைக்கேல் மூரை   அமெரிக்காவில் KFC சாப்பிட உட்கார வைச்சுட்டு  நம்ம காமிரா அப்படியே   கூகிள் பூமி பந்தாக சென்னையில் கோபாலபுரத்துக்கு  கலைஞர் கருணாநிதி வீட்டுக்கு ஜூம் ஆகிறது.

அனுபவஸ்தன்,நிர்வாகி,நாவன்மையாளன்,வயதான காலத்துல மக்களுக்கு நல்லது செய்வார் என்று எண்ணி கலைஞர் கருணாநிதிக்கு தமிழக மக்கள் தாம்பூலத்திற்கு பதிலாக சக்கர நாற்காலியில் உட்கார வைத்து பதவியை கலைஞருக்கு தந்தது.மனித வாழ்க்கை மட்டுமல்ல, ஒருவரின் ஆட்சி முறையிலும் கூட நிர்வாக நன்மை,தீமை,எதிர் விமர்சனம் என்பது இயல்பான ஒன்றே.யோசித்துப் பார்த்தால் அனைத்து குறைபாடுகளையும் தாண்டி குறிப்பாக 2G யைக்கூட தமிழக மக்கள் காலப்போக்கில் மறந்து விடுவார்கள்.

ஆனால் 2009ம் வருடத்தின் காலப்பகுதியில் இலங்கையின் வரலாற்றை மாற்றி அமைக்கும் சந்தர்ப்பத்தை காலம் கலைஞர் கருணாநிதிக்கு தனது பதவியின் வலிமையாக நாற்காலியில் உட்கார வைத்து தந்தும் அந்த கணங்களில் அழுவதற்கு நேரமில்லாமல் இப்பொழுது கண்ணீர் விடுவதாக பத்திரிகை செய்திகள்.கலைஞர் கருணாநிதி முழு உள்ளத்துடன் இப்பொழுது எதை செய்தாலும் அது சந்தேக கண்ணோடு மட்டுமே பார்க்கப்படும்.நிகழ்ந்தவைகளை இனி மாற்றிப் போடும் வலிமை இனி கால நிகழ்வுகளுக்கு மட்டுமே உண்டு.

நட்பு கொண்ட மற்றும் துணிவுள்ள ஊடக  நிருபர்கள் கலைஞரிடம் கேட்க வேண்டிய ஒரே கேள்வி...

கலைஞரே!தி.மு.க ஆட்சிக்காலத்தின் ஈழ நிலைப்பாட்டுக்கு இப்பொழுது வருந்துகிறீர்களா என்பதே!

ஹெஸ்டன் போல் கேள்விக்கு பதில் சொல்லாமலே சென்று விடுவதும் தமிழர்களின் மனங்களை மாற்றுவதும் கலைஞரைப் பொறுத்ததே!

Saturday, March 17, 2012

பொன்னியின் செல்வனும்,எக்ஸோடஸும்

என் பேச்சை நானே கேட்கமாட்டேன் விஜய் டயலாக் மாதிரி என் கடையை நானே பார்க்காமல் புராஜக்ட் வேலையில் சிக்கிக்கொண்டு பதிவுகளில் கவனம் செலுத்தாமல் ஒரு சில பின்னூட்டங்கள் மட்டுமே போட்டு வந்தேன்.இலங்கை குறித்த புதிய நகர்வுகள் மனதில் அலை மோதிக்கொண்டிருக்க  இந்தப் பதிவை முழுவதுமாக சொல்ல முடியாவிட்டாலும் சொல்லி விடுவது என்ற தீர்மானத்தில் தொடர்கிறேன்.
வாசிப்பு அனுபவங்கள் என்பவை என்றைக்கோ எழுதிய பொன்னியின் செல்வனை மட்டும் மீண்டும் நினைவுபடுத்துவதல்ல.பதிவர்கள் யாராவது எப்பொழுதோ சொல்லியதை மீண்டும் அசை போடுவதும் கூட.அந்த விதத்தில் இந்த பதிவிற்கான மூலக்கரு பதிவர் தருமி அவர்களின் பொன்னியின் செல்வனும் EXODUS-ம் என்ற பதிவே.இவரது பதிவு குறித்து ஏற்கனவே ஒரு முறை இங்கே குறிப்பிட்டு விட்டாலும் இப்பொழுது Exodus திரைப்படம் பார்த்தவுடன் முந்தைய பார்வை இன்னும் கொஞ்சம் விரிவடைகிறது..இந்த படம் 20 பிட்டு படங்களாக யூடியூப்பில் கிடைக்கிறது என்று சொல்லியிருந்தேன்.எத்தனை பேர் படம் பார்த்தீர்கள் என தெரியவில்லை!மணி ரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுத்திருந்தால் விசுவலாக இன்னும் கொஞ்சம் மண்டை கபாளத்துக்குள் ஒட்டியிருக்குமா அல்லது வந்தியத்தேவன் நடிகரின் முகத்தில் வந்து நின்று கொள்வானா என்று தெரியவில்லை.இதுவரையில் இங்கேயுள்ள ஓவியங்களாகவே பொன்னியின் செல்வன் மனதில் சிம்மாசனம் போட்டுக்கொண்டுள்ளது.

http://www.eegarai.net/t50562-topic

நிகழ்வுகளாக ராராமயாணமும்,மகாபாரதமும் இந்தியாவின் இதிகாசங்களாக வர்ணிக்கப்பட்டாலும்,சரித்திரபூர்வமாகவும்,ஆதாரபூர்வ கல்வெட்டுக்களாகவும்,பிரிட்சிஷ் ஆட்சியின் எழுத்து பூர்வ ஆவணமாகவும் தமிழகம் சார்ந்த வரலாற்றை சொல்பவை கட்டிக்கலைகளாக கோயில்கள், மாமல்லபுர சிற்பங்கள்,,திருச்சி மலைக்கோட்டைசெஞ்சி கோட்டை என பலவற்றை சொல்லலாம்.காஞ்சி,பூம்புகார் போன்ற வரலாற்று நிகழ்வுகளை இளமையாய் இருந்த தி.மு.கவின் காலத்தில் செல்லுலாய்ட் மூலமாக திரைப்பட வரலாறுகளாய் மாறிப்போனது. அன்றைக்கும், இன்றைக்கும்,என்றைக்கும் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தை நிருபிப்பது தஞ்சை பெரிய கோயில்.சோழர் ஆட்சியின் காலத்தை புனைவாக,துப்பறியும் நாவலுக்கு நிகராக,வரலாற்றை ஒட்டிய கதையாய் என்றும் நிலைத்து நிற்பது கல்கியின் பொன்னியின் செல்வன்.கல்கிக்கு போட்டியாக சாண்டில்யன் பல வரலாற்று கதைகளை எழுதியிருந்தாலும் நீண்ட கதையாக விரிவாக கதை சொல்லும் பாணியில் பொன்னியின் செல்வன் முந்தி விடுகிறது.பொன்னியின் செல்வனையும்,தஞ்சை பெரிய கோயிலையும் காணும் போது உருவாகும் மன உணர்ச்சிகளை பல விதத்தில் விவரிக்கலாம்.

தமிழனின் பண்டைய வரலாறு,கட்டிடக்கலையின் பெருமிதம்,வீர உணர்ச்சி என ஒரு புறமும் எதிர் மறையாக எத்தனை மக்களின் உழைப்பை வாங்கிக் கொண்ட பிரபுத்துவம்,எப்படியிருந்த தமிழன் இப்படியாகி விட்டானே என்ற கவலை,பழையதை சொல்லிச் சொல்லியே தமிழனுக்கு உணர்ச்சி ஏத்துங்கப்பா என மன இயல்புக்கு தக்கவாறு எண்ணங்கள் உருவாக கூடும்.

பதிவர் வருண் போன பதிவிலேயே இம்மாம் பெரிய பதிவும் பின்னூட்டமும் போடுறீங்களேன்னு பின்னூட்ட குஸ்திக்கு வந்தார்.எனவே அவருக்கு சுருக்கமாக பதிவர் நசரேயன் நாலு வரியில் மொபைல்  கதை சொல்கிறேன் என்றார்.இதைப் படிச்சிட்டு அம்பேல் ஆயிடனும் சரியா:)

பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலர்,தன் தமக்கை குந்தவைக்கு எழுதிய ஓலையை எடுத்துக்கொண்டு வந்தியத்தேவன் காஞ்சியிலே இருந்து தஞ்சை வருகிறார். குந்தவையை சந்தித்து ஓலையை கொடுத்து விட்டு , குந்தவையிடம் இருந்து இலங்கையிலே இருக்கும் தம்பி அருள்மொழிவர்மரை(ராஜா ராஜா சோழன்) அழைத்து வருமாறு வந்தியதேவனிடம் ஓலை கொடுக்கிறார்.ராஜா ராஜா சோழனை இலங்கையிலே சந்தித்து,தஞ்சைக்கு அழைத்து வந்துவிட்டு மீண்டும் குந்தவையிடம் ஆதித்த கரிகாலருக்கு ஓலை வாங்கிவிட்டு அவரை சந்திக்க காஞ்சி புறப்படுகிறார், ஆனால் ஆதித்த கரிகாலன் கடம்பூர் செல்ல முற்பட வழியில் அவரை சந்தித்து அவருடன் கடம்பூர் சொல்கிறார், அங்கே ஆதித்த கரிகாலன் அகால மரணமடைகிறார், இளவரசர் மரணத்துக்கு பின் யார் பட்டத்து இளவரசர் என்பதும் யார் சோழ நாட்டை ஆண்டார் என்பதும் முடிவு.

நீண்ட கதை சுருக்கம் படிக்க விரும்புவர்கள் வை.கோவின் நீண்ட பேச்சாற்றலை இங்கே போய் உட்கார்ந்துக்கலாம்

http://mdmk.org.in/article/mar09/ponniyin-selvan

இஸ்ரேலின் வரலாறாக The birth of a nation என்ற டாகுமெண்டரி காணவேண்டிய ஒன்று.

சுருக்கமாக சொன்னால் 2000ம் வருடத்திற்கு முன்பு தற்போதைய இஸ்ரேல்,பாலஸ்தீனிய பூமி பாலஸ்தீனம் என்றே அழைக்கப்பட்டது.

உலகம் முழுவதும் காலனித்துவப்படுத்திய பிரிட்டிஷ் ராஜ்யம் பாலஸ்தீனத்தையும் 30 ஆண்டுகள் ஆண்டார்கள்.1949ல் இரண்டாம் உலகப்போரின் விளைவுகளால் வெளியேற முடிவு செய்தார்கள்.

பலநாடுகள் தங்களது போராட்டங்களால் சுதந்திரப் பிரகடனப்படுத்திக் கொண்டாலும் அப்துல் கலாமின் கனவு காணுங்கள் கோட்பாட்டை செயல்படுத்த நினைத்தவர்கள் இஸ்ரேலியர்களும் ஈழத்தமிழர்களும்.

இஸ்ரேலியர்கள் அமெரிக்காவின் துணையோடு சுதந்திரப் பிரகடனப்படுத்திக்கொண்டார்கள்.ஈழத்தமிழர்களின் கனவு சோதனைகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றன.எதிர்காலமே பதில் சொல்லும்.

சிரியா,எகிப்து,ஜோர்டான்,லெபனான் மற்றும் அரபுநாடுகள் அனைத்தும் சேர்த்து 32000 போர்வீரர்களும்,30000 ராணுவ ஆயுதங்களும் கொண்ட பாலஸ்தீனியர்களை வெறும் 3000 பேர்கொண்ட கொரில்லா தாக்குதல்கள் மூலமாகவே இஸ்ரேலியர்கள் போரின் தோல்வியையும்,வெற்றியையும் அடைந்தார்கள்.

பெண்களையும் போரில் உள்வாங்கிக் கொண்டது இஸ்ரேல்.குடியரசு யூத நாடு என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டது.இஸ்ரேலியர்கள் ஒன்றுபட்டு போராடவில்லை. ஈழப்போத்ராளிகளைப் போலவே பல குழுக்களாகப் பிரிந்து கிடந்தார்கள். சிலருக்கு ஆயுதப் போரட்டத்தில் நம்பிக்கையில்லை.இன்னும் சிலருக்கு ஆயுதப்போராட்டமே வெற்றியை ஈட்டும் என்ற நம்பிக்கை கொண்டவர்களாக எதிர் தாக்குதல் நடத்தினார்கள்.ஹிட்லரின் ஹொலாகாஸ்ட்டில் தப்பித்தவர்கள் ஒன்று திரண்டது உலக அளவில் மேற்கத்திய நாடுகளின் அனுதாபத்தைப் பெற்றது.மொத்தத்தில் ரத்தக்கறை படிந்த சுதந்திரமே இஸ்ரேல் தேசம்.

இனி எக்ஸோடஸ் பக்கம் திரும்புலாம்.எக்ஸோடஸ் நாவலின் சைப்ரஸ்,இஸ்ரேல் போல் இலங்கை, தமிழகத்திற்கும் ஒரு ஒப்புமை இருக்கிறது.அதனை அவரவர் கற்பனை வளத்திற்கு விட்டு விடுகிறேன்!
எக்ஸோடஸ் நாவல் இலவசமாக Pdf வடிவில் கிடைக்கிறது.திரைப்படம் முன்பே சொன்னது போல் யூடியுப் பிட்டு பிட்டாக காண்பிக்கிறது.சுமார் 3 1/2 மணி நேரப் படம் லியோன் யூரிஸின் நாவலையையும்,உண்மை நிகழ்வுகளையும் உள்ளடக்கி சொல்கிறது.

நிறைய ஆய்வுகளுடன் இந்தப் பதிவை நிறைவு செய்ய நினைத்து இயலாமல் போய் விட்டது.பரந்த பார்வைக்கும்,வாசிப்புக்கும் காரணமான பதிவர் தருமி அய்யாவுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.