Followers

Thursday, March 22, 2012

இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானம் வெற்றி-பகுதி 2

சென்ற முறை சேனல் 4 காணொளியையும்,ஐ.நா மூவர் குழு அறிக்கையையும் ராஜதந்திர ரீதியாகவும்,தூதரக கடித பரிவர்த்தனைகள் மூலமாகவும் வெற்றிகரமாக செயல்படுத்தியதாகவும் அதே போல் இந்த முறையும் வெற்றி கொள்வோம் என இலங்கை அரசு பிரச்சாரம் செய்கிறது.இது ஓரளவுக்கு உண்மையாக கூட இருக்கலாம்.காரணம் ஐ.நா வாக்கெடுப்பில் சீனா,ரஷ்யா, இந்தியா இன்னும் பல நாடுகளின் உதவியோடு வாக்கெடுபபு இலங்கைக்கு சாதகமாகவே மாற்ற முடிந்தது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க அறிக்கை என்று ஒப்புக்கு ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றி ஐ.நா.மூவர் குழு அறிக்கையை பின் தள்ளியது என்பதும் உண்மை.

சென்ற முறை ரஷ்யா,சீனாவின் வீடோ அதிகாரத்தின் மூலம் தன்னை பாதுகாத்துக் கொண்டது போல இந்த முறை ஐ.நா மனித உரிமைக்குழுக்களின் கூட்டம் மூலமாக வெற்றி கொள்வதற்கான சூழல்கள் இல்லை என்பதற்கான இரண்டு காரணங்கள் உண்டு.முதலாவதாக சேன 4 காணொளியும் இரண்டாவதாக இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் புரிந்துணர்வு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டி இலங்கை மீதான தீர்மானம்.

இந்த முறை சேனல்  முக்கிய மனித உரிமை மீறல்கள் என்று இலங்கை அரசை நேரடியாகவே போர்க்குற்றம் சுமத்துகிறது சேனல் 4.. விவரிப்பாளர் ஜான் சுனோவின் ஆங்கில மொழி நடைக்கும்,காணொளிக்கும் சவால் விடுகிறேன் என இலங்கை அரசு மாலினி என்ற பெண்ணின் ஆங்கில வர்ணனையோடு Lies agreed upon என்ற காணொளியை வெளியிடுகிறது.மனித உரிமை மீறல்கள் எதுவும் நிகழவில்லையென போரில் தப்பித்த தமிழ்ப் பெண்கள் சிலரின் வாக்குமூலமாக இலங்கை ராணுவத்தினர்கள் தேவதூதர்கள் எனகின்ற மாதிரியும்,சேனல் 4 ன் முதல் காணொளியில் சாட்சியம் தந்த வாணி குமார் பற்றி முன்னாள் போராளி என்ற சகோதர இளைஞர் ஒருவர் கருத்தும்,கிறுஸ்தவ ஆலயத்தை விடுதலைப்புலிகள் ஆக்கிரமித்துக்கொண்டார்கள் என்று ஒரு இளம்பெண்ணும் சொல்வதை எதிர் வாதமாக இலங்கை அரசு முன் வைத்தது.விவரணையாளர் மாலினி சேனல் 4 ன் சாட்சியங்களின் முகம்,இடம்,குரல் அனைத்தும் இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்கிறார்.அதற்கான காரணம் என்ன என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை/ஏனென்றால் இலங்கையின் வெள்ளை வேன் கலாச்சாரம்,மனித உரிமைகளை கடைப்பிடிக்கும் நாடுகளில் முதன்மையான இடம் இலங்கைக்கு என்று என்பது அனைவரும் அறிந்ததே.

இதனை தொடர்ந்த தமிழக கட்சிகளின் ஒன்றுபட்ட குரல்களையும்,பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்து குரல் கொடுத்த தி.மு.க,அ.தி.மு.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக திருமாவளவன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க செய்தனர்.

இந்த முறை அ.தி.மு.க ஒரு பக்கம்,தி.மு.க மறுபக்கம் மற்றும் திருமாவளவன், தனி மனிதனாக என்று பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க செய்யுமளவுக்கு ஈழப்பிரச்சினையைக் கையாண்டார்கள் என்ற போதிலும்,கலைஞர் கருணாநிதியும பதவி விலகல்,மத்திய அமைச்சரவையிலிருந்து விலகல், உண்ணாவிரதம் போன்ற அழுத்தங்கள் கொடுக்க தயாரானது I am still in the game என்பதையே உணர்த்துகிறது.

இவை அனைத்தும் தும்பை விட்டு வாலைப்பிடிக்கும் செயல் என்றாலும் நிகழ்ந்தவைகளை விமர்சனம் செய்யவோ,சூதுகள்,இழப்புக்கள்,நிகழ்ந்த வரலாற்றுத் தவறுகளை நம்மால் இனி ஒன்றும் செய்து விட முடியாது.மாறாக இனி வரும் நிகழ்வுகளை மாற்றும் சக்தி அல்லது இன்னும் இயலாமை என்ற நிலையில் மட்டுமே இனி நாம் செயல்பட முடியும்.தவறுக்கு பிராயச்சித்தம் என்கிற சொற்பதங்கள் எல்லாம் இது மாதிரியே உருவாகியிருக்குமோ?

இனி அமெரிக்காவின் இலங்கை நிலைப்பாடு என்ன என்பதை  இலங்கையின்  அமெரிக்க தூதர் Patricia Butenis என்ன சொல்கிறார் என்பதை கூர்ந்து கவனித்தால் இலங்கை மீதான அமெரிக்க வெளிநாட்டுக்கொள்கை என்ன என்பதை உணர முடியும்.

http://dbsjeyaraj.com/dbsj/archives/4610

இந்த பதிவை வெளியிடும் இந்த தருணத்தில இலங்கையின் மங்கள சமரவீர தனது உரையை முடித்துக்கொண்ட பின் ஈகுவேடர், ரஷ்யா, உருகுவே, தாய்லாந்து,நைஜீரியா,பிலிப்பைன்ஸ்,உகாண்டா,மால்தீவுகள்,இந்தோனேசியா,பங்களாதேஷ்,மெக்சிகோ,அங்கோலா என தீர்மானம் குறித்த தமது கருத்தை முன் வைத்தன.இவைகளில் இலங்கையை ஆதரிக்கும் நாடுகள் அணிசேரா நாடுகள் என்ற அடிப்படையில் இலங்கையை ஆதரிக்கின்றன.பிடல் காஸ்ட்ரோ என்றும், செகுவாரா என்றும் தேச எல்லைகள் கடந்து புரட்சிகளில் பெருமிதம் பட்டுக்கொண்ட நாம் கியூபாவின் அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாடு காரணமாக இலங்கை சார்பாக செயல்படும் விதமாக இலங்கை தனது நண்பன் என்றும் தீர்மான வாக்கெடுப்பை தள்ளி வைக்குமாறும் வேண்டுகோளை விடுக்கிறது.

தேர்வு சுற்றுக்கு விடப்பட்ட அறிக்கையின் படி

அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவு 24
இலங்கைக்கு ஆதரவாக 15
மதில் மேல் பூனை 8

பதிவின் அவசரம் கருதி இத்துடன் முடித்துக்கொண்டு இனி இலங்கை என்ன செய்யலாம் என்ற ஆக்கபூர்வமான கருத்துக்களை அடுத்து காணலாம்.

14 comments:

ஹேமா said...

நடா....உலகத் தமிழர்களின் கூட்டு முயற்சிக்குச் சந்தோஷம்.ஆனாலும் இது ஒரு கட்டத்தின் நகர்வே தவிர.....அடுத்து !

சார்வாகன் said...

அருமை சகோ,

மகிழ்ச்சியாக் இருக்கிறது.இது குறித்து அதிக விவரம் பகிருங்கள்.தொடர்கிறோம்.

இந்த இராஜபக்சே &கோ சரியான மாங்கா மடையர்கள்.போர்க்குற்றம் செய்து விட்டு தப்பிக்க நினைத்து இருந்தால் பிராயச் சித்தமாக தமிழர்களின் இழப்பை ஈடு செய்ய நினைத்து இருக்க வேண்டும். இந்நேரம் தமிழர்களுக்கு ஒரு அள்விற்கேனும் சரியான தீர்வு கொடுத்து அங்கு தமிழர்களின் ஜனநாயக் அரசு ஒன்றை ஏற்படுதி ஈழம் சார்ந்த ப்குதிகளில் கல்வி சுகாதாரம் உள்ளிட்ட பணிகளை முன்னெடுத்து இருந்தால் இப்படி சிக்கலில் மாட்டி இருக்க மாட்டார்கள்.இபோது தமிழர்களின் ஆதரவு இருப்பது போல் காணொளி பொய் பிரச்சாரம் செய்வது கோமாளித்தனம்.

அவர்கள் எதிர்பாராதது இந்தியாவின் குட்டிக் கரணம்.

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைந்த போராட்டம் ஒரு நம்பிக்கை தருகிறது.

எனக்கு இன்னும் இந்தியா தீர்மான‌த்திற்கு எதிராக் வாக்களித்ததை நம்ப முடியவில்லை.நல்லதே நடக்கட்டும்!!!!!!


நன்றி

Bibiliobibuli said...

ம்ம்ம்.... கண் விழித்திருந்து பதிவு போட்டீங்களோ, நடா :)

எப்படியோ பொதுவா ஒரு நாட்டில், குறிப்பாக வளர்ந்துவரும்(?) இலங்கை போன்ற நாட்டில் கடைவிரிக்க அங்கே அரசு நிர்வாகம், சட்ட ஒழுங்கு எல்லாம் நல்லவிதமாய் இவர்களுக்கு திருப்தியளிக்கும் விதமாய் இருந்தால் தான் அங்கே முதலீடு செய்யும் முதலாளிகள் பயமின்றி முதலீடு செய்வார்கள்.

இலங்கையில் ஒருவாறு நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரையை நிறைவேற்றினால் ஒரு குடியியல் நாட்டின் ஜனநாயகப்பண்புகள் வியாபார சூழலுக்கு ஏற்றதாய் இருக்கும் என்பது எழுதியும், எழுதப்படாததுமான வரலாறு.

வவ்வால் said...

ராஜ்,

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றியடைந்து இருப்பது மகிழ்ச்சியான செய்தியே, ஆனாலும் ஒரு நெருடல் இல்லாமல் இல்லை லோக்கல் தாதாவின் தொல்லையை அடக்க இன்டெர்நேஷனல் தாதாவை உதவிக்கு கூப்பீட்டாப்பொல இருக்கு, சர்வதேச அளவில் பல போர்க்குற்றங்க்களை செய்த அமெரிக்காவின் உதவியால் இத்தீர்மானம் நிறைவேறியது.

ஆனால் என்ன செய்ய நமக்கும் வேறு வழி இல்லை.

இத்தீர்மானத்திற்கு எதிர்த்து ஓட்டு அளித்த நாடுகளைப்பார்த்தால் அவை எல்லாம் அமெரிக்க எதிர்ப்பின் அடிப்படையில் போட்டதாகவே தெரிகிறது. ஆனால் மலேஷியாவும் கூட சேர்ந்திருப்பது இன்ட்ராப் போன்றவற்றின் மூலம் எரிச்சல் அடைந்து தங்கள் எதிர்ப்பையோ அல்லது இலங்கை செய்தது நியாயம் என்றோ கற்பிக்க செய்தார்களா என தெரியவில்லை. சில இஸ்லாமிய நாடுகள் ஒன்றாக இலங்கைக்கு ஆதரவு கரம் நீட்டியிருப்பது எதிரி மதத்தின் எதிரி மதத்துக்கு கைக்கொடுப்போம் , என்பது போல இருக்கு.(புலிகள் இஸ்லாமிய மோதம் ,அடிப்படையில்)

'பசி'பரமசிவம் said...

இது நமக்கு ஆறுதல் தரும் நிகழ்வு மட்டுமே.
தமிழினம் ஒன்றுபட்டு ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் ஏராளம்.
உடனடி தகவல் தந்ததற்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

ஹேமா!புலம்பெயர் தமிழர்கள் நன்றாக உழைத்தார்கள் என்பது மராத்தான் நடை,பதுகைகள் கொண்ட போராட்டம்,குளோபல் தமிழ் அமைப்பினர்,மனித உரிமை குழுக்களில் இணைந்து கொண்ட தமிழர்கள் என்று பலரின் உழைப்பு இருந்தாலும் எதிர்ப்பாக இலங்கை அரசின் லாபியும் மிகவும் திறம்பட உழைத்தார்கள் என்பதும் உண்மை.இல்லையென்றால் 15 நாடுகளின் ஆதரவைப் பெற்றிருக்க முடியாது.எந்தக் காரணங்களால் இந்த ஆதரவு என்பதை ஏனைய பின்னூட்டங்களுக்குடன் பார்க்கலாம்.

இப்போதைய தீர்மானத்தின் மூலமாக இலங்கை அரசு எப்படி செயல்படுகிறது என்பதை உலக அரங்கிலிருந்து கவனிக்க இயலும் என்பது மட்டுமே ஆறுதல்.தமிழர்களின் தேவைகள் எப்படி நிறைவேற்றப் படுகின்றன என்பதும் இலங்கையின் செயல்பாடுகளைப் பொறுத்தே அமையும்.அடுத்த நகர்வுகள் எப்படி என்பதை அரசியல் சதுரங்க ஆட்டக்காரர்களின் ஆட்டத்தைப் பொறுத்தது மட்டுமே.இருந்தாலும் நமக்கான குரலையும் ஒலித்துக் கொண்டேயிருப்போம்.

ராஜ நடராஜன் said...

சகோ.சார்வாகன்!போர்க்குற்றங்கள் செய்திருந்த போதிலும் 2009ம் ஆண்டில் கால கட்டத்தில் அனைத்து நாடுகளின் ஆதரவு இலங்கை அரசுக்கு இருந்ததை இப்பொழுது உணர முடிகிறது.கூடவே இலங்கையென்ற அமைப்புக்குள் பொருளாதார பங்கீடுகளும்,தீவிரவாதம் என்ற முத்திரையில்லாத கால அவகாசங்களில் இலங்கை தன்னை மேம்படுத்திக்கொள்ளும் என்றும் கூட மேற்கத்திய நாடுகள் எதிர்பார்த்திருக்க கூடும்.மாறாக ராஜபக்சே இந்தியாவையும் கூட்டு என சொல்லிக்கொண்டு சீனாவின் பக்கம் சாய்ந்ததும்,பாகிஸ்தானையும் துணைக்கு அழைத்துக் கொண்டதை நாமே விமர்சனம் செய்யும் போது இந்தியாவும் செயல்படாத சூழலில் என்ன செய்வது என்று திகைத்துக்கொண்டிருந்தது மட்டும் உண்மை.இலங்கை இனி தனது காய்நகர்த்தலை எப்படி அமைத்துக் கொண்டாலும் தற்போது இந்தியா நின்ற நிலை சரியான ஒன்றே.பயந்து பயந்து சகித்துக்கொண்டு போவதை விட இந்தியாவின் காய் நகர்த்தல் சரியான ஒன்றே.அது தி.மு.க வின் அழுத்தம் காரணமாக இருந்தாலும்,அல்லது தமிழக எதிர்ப்புக்களை தனது ராஜதந்திரத்திற்கு உபயோகப்படுத்தி இருந்தாலும்,அல்லது அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஏற்ப செயல்பட்டிருந்தாலும் கூட.ராஜபக்சேக்கள் செய்த மிகப்பெரிய தவறு சீனா,பாகிஸ்தான்,இந்திய பகடை என்பதை வருங்காலம் உணர்த்தும் என நம்பலாம்.இனி இலங்கை எப்படி செயல்படலாம் என்பதை அடுத்த பாகத்தில் சொல்லி விடலாமென நினைக்கிறேன்.

தமிழக கட்சிகளின் அழுத்தமும்,பாராளுமன்றம் ஸ்தம்பித்ததும்,இந்தியாவின் குட்டிக்கரணம் என்ற மாற்றங்கள் வரவேற்க தக்கதே.நன்றி.

ராஜ நடராஜன் said...

ரதி!கண்முழிக்கிற நேரம் உங்களுக்கான GMT.வியன்னா நேரம் 10 மணிக்கு என்று சொன்னவுடன் வந்து டீத்தண்ணி குடித்து விட்டு கையை உயர்த்தி விடுவார்கள் என்று நினைத்தேன்.ஆனால் ஒவ்வொரு நாட்டுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டு சிறு உரை நிகழ்த்தி பின் ஆதரிக்கிறதா இல்லையா என்று அறிவிக்க முதல் விக்கெட்,இரண்டாம் விக்கெட் என்கிற மாதிரி யார் ஆதரிக்கிறார்கள்,யார் எதிர்க்கிறார்கள்,யார் நான் இந்த விளையாட்டுக்கே வரவில்லையென்று ஒதுங்கி நிற்கிறார்கள் என்று வெப்காஸ்ட்டில் பார்ப்பதற்கே இதயம் திக்,திக் என அடித்துக்கொண்டது.இடையே பதிவையையும் எழுதிக்கொண்டே வந்ததில் முடிவை அறிவித்த சில நிமிடங்களில் பதிவை வெளியிட்டு விட்டேன்.அறிவிப்பை அனைத்து பத்திரிகைகளையும் முந்திக்கொண்டேன் என நினைக்கிறேன்:)

ராஜ நடராஜன் said...

வவ்!நீங்கள் சொன்ன டீகாஸியா தீவு என்ற நிலையில் மட்டும் இதுவரை அமெரிக்க நின்று கொண்டிருந்தது.இனியும் இந்தியாவின் சம்மதம் இல்லாமல் இலங்கையில் அமெரிக்கா ஒன்றும் செய்து விட முடியாது.கிஸ்ஸிங்கர் காலம் தொட்டு காஷ்மீரை இந்தியா கையாண்டு வந்திருக்கிறது.நாம் பயப்பட வேண்டியதெல்லாம் ராஜபக்சே சீனா சார்ந்து இனி எப்படி காய் நகர்த்துகிறார் என்பதே.போரின் இறுதி துவங்கி ஐ.நா தீர்மானம் வரை Srilanka government is making a rhetoric statements.இதனை இனியும் தொடர்ந்தால் ராஜபக்சேக்களுக்கு ஆபத்தே.பக்சே அல்லது இனி வரும் இலங்கை ஆட்சியாளர்கள் என்ன செய்தால் தெற்காசியாவுக்கு நல்லது எனபதை அடுத்த பகுதியில் காணலாம்.

நமக்கு வேறு வழிகள் இல்லையென்பது மட்டுமல்லாமல் அமெரிக்காவின் தலையீடு,இந்தியாவின் அமெரிக்க தீர்மான ஆதரவு ஓட்டு போன்றவை இலங்கை அரசியலின் புதிய பரிமாணங்கள்.

Malaysia abstain from voting.

ஆர்வத்துடன் எதிர்பார்த்த ஒன்று இஸ்லாமிய நாடுகள் எந்த பக்கம் நிற்கிறார்கள் என்பது.சவுதி அரேபியா,குவைத்,கத்தார் போன்றவை இலங்கை ஆதரவு ஓட்டு.காரணம் நீங்கள் சொன்ன புலிகள்,இஸ்லாமிய அடிப்படை என்பதே.மனித உரிமைகளை விட மதம் முக்கியமல்லவா? மாறாக லிபியா அமெரிக்க தீர்மான ஆதரவு.லிபியாவின் ஆதரவு ஓட்டு முக்கியமான ஒன்று என்பதை தமிழர்கள் உணரவேண்டும்.

ராஜ நடராஜன் said...

பரமசிவம் சார்!பெயருக்கு ஏற்றாற் போல் கபாலத்துக்குள் நிறைய வைத்திருப்பீங்க என்பதை உங்கள் பதிவின் படமும்,நிறைய கபாலங்களை மேய்த்த ஆசானாக உங்கள் புரபைலும் கூறுகிறது.சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கீங்க சார்:)

என்னை விட சகோ.சார்வாகன்,நண்பர் வவ்வால் போன்றவர்கள் உங்களுடன் மேளம் தட்ட நிகரானவர்கள். இணைந்து கொள்ளுங்கள்.

வருகைக்கு நன்றி.

Robin said...

இந்தியா இந்த தீர்மானத்திற்கு ஆதரவளித்ததற்கு தி.மு.க கொடுத்த அழுத்தம்தான் காரணம்.

MANO நாஞ்சில் மனோ said...

நல்லதே நடக்கவேண்டும், உப்பை தின்னவன் தண்ணி குடிக்கணும் இல்லையா...

ராஜ நடராஜன் said...

வாங்க சகோ.ராபின்!நீங்கள் சொல்வது முக்கியமான காரணமாக இருக்கலாம்.இப்பவாவது பரவாயில்லை ஆட்சி முடியும் தருவாயில் காங்கிரஸ் கூட்டணி உள்ளது.முன்பு மொத்த எம்.பிக்களும் ராஜினாமா கடிதம்,தொடர் தந்தி என்பன கண்ணாமூச்சி விளையாட்டா?முந்தைய போராட்டங்கள் எதற்கும் நகராத காங்கிரஸ் தி.மு.கவின் அழுத்தத்தினால் தனது நிலையை மாற்றிக்கொண்டது என்பது நம்பகத்தன்மையாக இல்லை.ஐந்து மாநிலங்களில் தோல்வி கண்ட நிலையில் அடுத்த முறை ஆட்சியைப் பிடிப்பது காங்கிரஸ்க்கு இயலாத ஒன்று என்பதாலும்,இலங்கைக்கு எதிரான ஓட்டு இந்திய வெளியுறவுக்கு கொள்கைக்கு சவாலான ஒன்று என்று தெரிந்தும் இந்தியாவின் இறுதி கட்ட தீர்மானம் வரவேற்க தக்க ஒன்றே.தி.மு.கவின் அழுத்தங்களுக்கும் நன்றி சொல்வோம்.இந்தியா என்ற பெரும் நிலப்பரப்பை நட்பாக அண்டி வாழ வேண்டிய இலங்கை சீனா,பாகிஸ்தான் என கண்ணாமூச்சி விளையாடுவதன் விளைவே இந்தியா தி.மு.கவின் அழுத்தத்தை பயன்படுத்திக் கொண்டது என்பேன்.நன்றி.

ஒரு வரி பின்னூட்டத்துக்கு இம்மாம் பெரிய விளக்கமா:)

ராஜ நடராஜன் said...

மனோ!மீண்டும் இணைந்து கொண்டதற்கு நன்றி.நல்லது நடக்கட்டும் என நாம் விரும்பினாலும் இனியும் பல நெளிவு,சுளிவுகளுடனே இன்னும் வரலாறு நீளும்.எப்படி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழர்களின் நல்வாழ்வுக்கும்,சம உரிமை வாழ்வுக்கும் நல்லது நடக்கட்டும்.நன்றி.