Followers

Tuesday, November 24, 2015

பரவாயில்லையே இளங்கோவன்!

நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கூறிய கருத்துக்களின் அடிப்படையில் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச். ராஜா வாரஇதழ் ஒன்றில் கடிதம் எழுதுவதாகக் கூறி அவர்மீது சேற்றை வாறி இறைத்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் அவர்மீது இவருக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியை கொட்டித் தீர்த்திருக்கிறார். சமீபகாலமாக பா.ஜ.க.வினருக்கு சகிப்புத்தன்மை இல்லாமல் செயல்பட்டு வருவதால் நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகள் கடுமையாக எழுந்து வருகின்றன. மாற்றுக் கருத்து கொண்டவர்கள் கொல்லப்படுவது, அச்சுறுத்தப்படுவது, மிரட்டப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

எச். ராஜா எழுதிய கடிதத்தில் 'கமல்ஹாசன் என்ற சொல், தமிழ்ச் சொல்லா ? சுத்த சமஸ்கிருத சொல் தானே ? நல்ல தமிழ்ப் பெயரை மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்" என்று அறிவுரை கூறுவதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது ? நாட்டு மக்கள் மீது சமஸ்கிருதத்தை திணிப்பதற்கு பல வகைகளில் பகீரத முயற்சிகளை எடுத்து வருகிற சங்பரிவாரங்கள் இதுகுறித்து பேசலாமா ? மேலும் 'என் தட்டில் என்ன உணவு உண்ண வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று கமல்ஹாசன் கூறியதிலே என்ன தவறு ? பசுவதை தடைச் சட்டம் பல மாநிலங்களில் இருப்பதாகக் கூறுகிற எச். ராஜா, மேலும் இது அரசமைப்பு விதி 48 இல் இருப்பதாக கூறி தமது வாதத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். பசுவை புனிதமாகக் கருதுகிற வகையில் அப்பிரிவு இல்லை என்பதை ஒருமுறைக்கு பலமுறை அதை படித்து தெளிவு பெறுவது நல்லது. பசுவை 10 அல்லது 15 ஆண்டுகள் கழித்து எதற்கும் பயன்படாத நிலையில் அதை கொல்வதற்கு அரசு அனுமதிப்பதையும் அச்சட்டத்தில் கூறப்பட்டிருப்பதை ராஜாவால் மறுக்க முடியுமா ? 

2014 இல் இருந்த இறைச்சி ஏற்றுமதியைவிட 2015 இல் 14 சதவீதம் அதிகமாக ரூ.29,000 கோடி ஏற்றுமதி செய்வது குறித்து ராஜா அறிவாரா ? இந்த இறைச்சி ஏற்றுமதியை அதிகமாக செய்வதே பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் என்பது ராஜாவுக்கு தெரியுமா ? மாட்டிறைச்சி ஏற்றுமதியை அனுமதிக்கிற பா.ஜ.க., இதைத்தான் உண்ண வேண்டும், இதை உண்ணக் கூடாது என்று சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது ? 

விடுதலைப் போராட்ட தியாகி பரமக்குடி சீனிவாசனின் மகனாக பிறந்து, 6 வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 200 படங்களுக்கு மேல் நடித்து, உலக சாதனை படைத்து தமிழர்களுக்கெல்லாம் தமிழராக வாழ்ந்து கொண்டிருக்கிற கமல்ஹாசன் அவர்களை பாராட்டுவதற்கு மனமில்லாவிட்டாலும் குறைந்தபட்சம் கொச்சைப்படுத்தாமல் இருக்கலாமே ? 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என மொழி எல்லைகளைக் கடந்து திரைப்படங்களில் நடித்து தமிழர்களின் பாராட்டை மட்டுமல்ல, உலக மக்களின் பாராட்டையும் பெற்றவர் கமல்ஹாசன். 4 முறை தேசிய விருதும், 19 முறை பிலிம்பேர் விருதும், பத்மஸ்ரீ, பத்மபூஷன் என பல பட்டங்களை, பரிசுகளை குவித்த தமிழ்த்தாயின் மூத்த கலைமகன் கமல்ஹாசன் மீது குறிவைத்து தாக்குகிற பா.ஜ.க.வினரின் உள்நோக்கத்தை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். கமல்ஹாசன் தமிழ் மண்ணில் பிறந்தது தமிழருக்கு பெருமை! இந்தியருக்கு பெருமை !
கடந்த ஓரிரு ஆண்டுகளாக பா.ஜ.க.வினர் வாய்த்துடிப்போடு பேசி வருவதை நாடு முழுவதும் கண்டு வருகிறோம். அந்த வகையில் தந்தை பெரியாரை மிகமிக கேவலமாக இழிவுபடுத்தி பேசிவிட்டு, 'வைகோ வீடு போய்ச் சேர மாட்டார்" என்று மிரட்டல் விடுத்த எச். ராஜாவுக்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறோம். ஆதிக்க சக்திகளால் புறக்கணிக்கப்பட்ட தமிழ்ச் சமுதாயத்தினருக்கு சமநிலையும், சமவாய்ப்பும் தமது வாழ்க்கையை அர்பணித்து பெற்றுத்தந்தை பெரியாரை இழிவுபடுத்தி விட்டு தமிழ் மண்ணில் உங்களை நடமாட அனுமதித்தற்காக தமிழ்ச் சமுதாயத்தின் சகிப்புத்தன்மைக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும். 

எச். ராஜா எழுதிய கடிதத்தின் இறுதியில் 'எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்" என்று முடித்திருக்கிறார். எளியாராகவோ, வலியாராகவோ இல்லாமல் விபத்தின் காரணமாக அரசியலில் வலம் வந்து கொண்டிருக்கிற எச். ராஜா போன்ற அராஜகவாதிகளை காலம் வரும்போது தமிழ் மக்கள் குப்பைக் கூடையில் தூக்கி எறிவார்கள் என்பது உறுதி.

தந்தை பெரியாரில் தொடங்கி,  கமல்ஹாசன் வரை நீண்டிருக்கிற உங்களது வாய்த்துடுக்கான, தரம் தாழ்ந்த, இழிவான பேச்சுக்களை இனியாவது நீங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்படி நிறுத்தவில்லையென்றால் அதனுடைய விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி வரும்.’’